காப்பீட்டு திட்டத்தில் முழுமையாக பயன்பெற முடியவில்லை : தொற்றால் பாதிக்கப்பட்ட போலீஸார் ஆதங்கம்

By இரா.கார்த்திகேயன்

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் போலீஸாரின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழுமையாக பயன்பெற முடியாத நிலைக்கு போலீஸார் தள்ளப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இப்பேரிடர் காலத்தில், முன்களப் பணியாளர்களாக பணியாற்றும் போலீஸார், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை செல்ல நேர்ந்தால், ‘நியூ ஹெல்த் இன்சூரன்ஸ்’சில் 60 சதவீதம்மட்டும் தரப்படும். எஞ்சிய தொகையை போலீஸாரே செலுத்த வேண்டும் என கூறுகின்றனர். அதேபோல, தனியார் மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு அட்டையை முன்கூட்டியே காண்பிக்க வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதும், தனியார் மருத்துவமனை தரப்பில் ரூ. 50,000 கட்ட வேண்டும் என்கின்றனர். அவசர நேரம் என்பதால், பணத்தைக் கட்டிய பின்னர், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை வராது என தனியார் மருத்துவர்கள் மறுக்கின்றனர்.

அதிக கட்டணம் வசூல்

கடந்த அக்டோபர் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போலீஸார், காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்தும், இதுவரை அவர்கள் செலவழித்த தொகை வந்து சேரவில்லை. தனியார் மருத்துவமனைகள் கரோனா தொற்றைப் பயன்படுத்தி, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக கட்டணம் கட்ட வேண்டிய நிலைக்கு போலீஸாரும் தள்ளப் படுகின்றனர்.

காப்பீட்டுத் துறையினர் கூறியதாவது: கரோனா சிகிச்சையில், மிகவும் சாதாரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு தினமும் ரூ. 5,000, மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.7500, அதையும் தாண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு ரூ. 9,500வரை மத்திய, மாநில அரசு ஊழியர்களின், தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனை அபரிமிதமாக வசூலிக்கும் தொகையை, நாங்கள் கணக்கில் எடுப்பதில்லை. அதேபோல, இத்தனை சதவீதம் என்று, எங்கும் நிர்ணயம் செய்யவில்லை. நுரையீரல்பாதிப்பு உள்ளிட்ட மருத்துவ ஆவணங்களை பரிசோதித்துதான் பாதிக்கப்பட்ட நபருக்கு காப்பீட்டுக்கான தொகை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், எங்களது 18002335666 தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

9 mins ago

இந்தியா

9 mins ago

விளையாட்டு

18 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

கார்ட்டூன்

5 hours ago

மேலும்