அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தூத்துக்குடி விசைப்படகுகள் பத்திரமாக கரைதிரும்பின தயார் நிலையில் பேரிடர் மீட்பு, தீயணைப்புக் குழுவினர்

By செய்திப்பிரிவு

புரெவி புயல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையோர பகுதிகள், கடற்கரை பகுதிகள், நிவாரண முகாம்கள் போன்ற இடங்களில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அரசின் எச்சரிக்கையால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் 4-வது நாளாக நேற்று கடலுக்கு செல்லவில்லை. ஏற்கெனவே, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றி ருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக திரும்பிவிட்டனர்.

புயல் நெருங்கி வருவதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வானிலையில் நேற்று மாற்றம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவி வந்தநிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், அவ்வப்போது லேசான மழை பெய்தது. நேற்று மாலை வரை பெரிய அளவில் மழை இல்லை. கடலிலும் மாற்றங்கள் தெரியவில்லை.

இருப்பினும் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை மேடான பகுதிகளில் பாதுகாப்பாக வைத்தனர். படகுகளை வலுவான கயிறுகளைக் கொண்டு கட்டினர். படகுகள் உரசி சேதம் ஏற்படாமல் இருக்க இடைவெளிவிட்டு நிறுத்தியிருந்தனர். சில இடங்களில் டிராக்டர்களை கொண்டு படகுகளை வெளியே இழுத்து மேடான பகுதியில் நிறுத்தினர்.

தயார் நிலையில் அரசு

வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளின் கரையோரங்கள் மற்றும் 637 குளங்களின்கரைகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் நீர்நிலைகளை கண்காணித்து வருகின்றனர். நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய 35,550 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மரக்கிளைகளை மின்வாரிய ஊழியர்கள் நேற்று வெட்டி அகற்றினர். மின்சாரம் தடைபட்டால் உடனுக்குடன் வழங்க, 900 மின் கம்பங்கள், 41 மின் மாற்றிகள் மாவட்டத்தில் ஆங்காங்கே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எந்த நிலையிலும் மக்களுக்கு தடையின்றி மின் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்புக் குழுவினர்

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 40 பேரும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் 40 பேரும் வந்துள்ளனர். இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அதுபோல, தீயணைப்பு படையினரும், காவல் துறையில் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

63 நிவாரண மையங்கள்

மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என 36 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் நிலைமையை 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகள் அடங்கிய குழுக்கள், தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் புயல் எச்சரிக்கை குறித்து மக்களுக்கு நேற்றுதண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. வெள்ளம் ஏற்பட்டால் மக்கள் உடனே நிவாரண மையங்களுக்கு சென்றுவிட வேண்டும் என்றும், எந்தெந்த பகுதிகளில் நிவாரணமையங்கள் உள்ளன என்பது குறித்தும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 63 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் ஆய்வு

நிவாரண மையங்களையும், தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளையும் நேற்று மாலை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரியான, தமிழக அரசின் முதன்மை செயலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

26 mins ago

க்ரைம்

44 mins ago

விளையாட்டு

39 mins ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்