புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போக வாய்ப்பு - 4 மாதங்கள் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு :

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்தாண்டுக்கு தள்ளிப் போகிறது. நான்கு மாதங்கள் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. 2006ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் 2011 வரை பொறுப்பில் இருந்தனர். அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை. உச்சநீதிமன்றம் தலையிட்டு, அக்டோபருக்குள் தேர்தல் நடத்தி முடிவுகளை அறிவிக்கும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி செப்டம்பர் 22-ம் தேதி முதலில் அறிவிக்கப்பட்டது.

இடஒதுக்கீடு குளறுபடிகளை களைய சென்னை உயர்நீதி மன்றத்தில் சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் உள்ளிட்டோரால் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த 29-ம் தேதி உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைத்து, வார்டு குளறுபடிகளை சரிசெய்ய உத்தரவிட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின ருக்கான ஒதுக்கீட்டை அரசு திரும்பப் பெற்றது. இது அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி யினர் இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தலை நடத்தக்கூடாது என வலியுறுத்தினர். இருப்பினும் மாநில தேர்தல் கமிஷன் 2வது முறையாக உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்தது.

இதையடுத்து திமுக மாநில அமைப்பாளர் சிவா சென்னை உயர்நீதிமன்றத்தில், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி யினர் இடஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என கடந்த 11-ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை 21-ம் தேதி வரை தள்ளி வைத்தது. இதனால் அன்றைய தினம் தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் புதுவை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் சார்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலில் பட்டியலினத்தவர். பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முரண்பாடு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், வேட்புமனு தாக்கலை நிறுத்தி வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது என உயர்நீதிமன்றம் கடந்த 1-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலையால் புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் வட்டாரங்களில் விசாரித்தபோது, "உயர்நீதிமன்றத்தில் புதுவை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 4 பேர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இவை அனைத்தும் வரும் 21-ம் தேதி தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வருகிறது. மாநில அரசும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தகவல்களை தாக்கல் செய்ய உள்ளது.

இவற்றை கருத்தில்கொண்டு உச்சநீதிமன்றம் புதுவை மாநில தேர்தல் ஆணையம் கோரியுள்ளபடி கால அவகாசம் அளிக்க வாய்ப்புள்ளது என தெரிகிறது." என்று தெரிவித்தனர்.

இதனால் புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்