ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி - ஏலகிரி காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை :

By செய்திப்பிரிவு

இரு தரப்பினர் கொடுத்த புகாரில் காவல் துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி ஏலகிரி காவல் நிலையத்தை மலைகிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு உட்பட்ட முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (39). இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அம் மனுவில், ‘முத்தனூர் மலைகிராமத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான மனோகரன் (42) மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்து எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 5 குடும்பத்தாரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கூறினர்.

ரயில்வே ஊழியரான மனோகரன் ஊர் நாட்டாண்மை (பொறுப்பு) வகித்து வருவதால் அவர் கூறியபடி ஊர் பொதுமக்கள் எங்கள் 5 குடும்பத்தாரிடமும் பேசுவது இல்லை, பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க அனுமதிப்ப தில்லை. மேலும், மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை எங்கள் குடும்பத்தாருக்கு யாரும் வழங்குவதும் இல்லை. இது போன்ற சமூக அவலங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பத்தாரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த மனோகரன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

அந்த மனு மீது விசாரணை நடத்த ஏலகிரி காவல் துறையின ருக்கு எஸ்பி., டாக்டர்.விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்பேரில், ஏலகிரி காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது மனோ கரன் உறவினரான வைதீஸ்வரி (37) என்பவர் பிரபு உள்ளிட்ட சிலர் மீது ஏலகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரு தரப்பினர் வழங்கிய புகார் மனுக்களை பெற்ற ஏலகிரி காவல் துறையினர் ரயில்வே ஊழியரான மனோகரன், அவரது மனைவி காளி (37), உறவினர்கள் ரமேஷ் (40), ஆண்டி (38), பிரபாகரன் (28) என 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனோகரன் ஆதரவாளர்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் ஏலகிரி காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்பினர் அளித்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைபட்சமாக செயல்பட்டு ஏலகிரி காவல் துறையினர் மனோகரன் தரப்பினர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்திருப்பதாக கூறியும், பொய்யான புகார் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி அவர்கள் காவல் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஏலகிரி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி (பொறுப்பு) அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, இரு தரப்பினர் அளித்த புகார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபு அளித்த புகார் மீது மனோகரன் உட்பட 5 பேர் மீதும், வைதீஸ்வரி அளித்த புகார் மீது பிரபு, சுதாகர் (35), அண்ணாமலை (43), திருப்பதி(38) உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அதற்கான ஆவணங்களை காட்டினார்.

மேலும், இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கையை காவல் துறையினர் எடுப்பார்கள், கரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் ஒன்றாக கூடவோ, போராட்டத்தில் ஈடுபடவோ அனுமதியில்லை என்பதால் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

அதன்பேரில், மலை கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்