பெரியாரிய அறிஞர் வே.ஆனைமுத்து : மறைவுக்கு தமிழியக்கம் இரங்கல் :

By செய்திப்பிரிவு

பெரியாரிய அறிஞர் வே.ஆனைமுத்து மறைவுக்கு தமிழியக்க நிறுவனர் தலைவர் கோ.விசுவநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழியக்க நிறுவன தலைவரும் விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ‘‘மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் அய்யா வே.ஆனைமுத்து அவர்கள், இயற்கை எய்திய செய்தி அறிந்து பெரிதும் வருந்துகின்றேன். இளம் வயது முதல் தந்தை பெரியார் வழியைப் பின்பற்றி வாழ்நாள் முழுவதும் பெரியாரிய பரப்புரைக்கு தனது வாழ்வை ஒப்புக்கொடுத்தவர் அய்யா ஆனைமுத்து.

இளம் வயதிலேயே குறள் மலர், குறள் முரசு போன்ற தத்துவ இதழ்களை வெளியிட்டவர். கடந்த 1950 முதல் தந்தை பெரியாருடன் அணுக்கமான தொடர்பும் 1963 முதல் அன்றாடம் கொள்கை பற்றிக் கலந்துரையாடும் வாய்ப்பும் பெற்றவர். திராவிடர் கழக மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் அழைத்து முற்போக்கு இடதுசாரித் தன்மையை வளர்க்க முயன்றவர். பெரியாரியலைப் பரப்ப முழுநேரப் பணியை மேற்கொள்ள, தமது அரசுசார் பணியை 1956-ல் துறந்தவர்.

18 மாதம் சிறை சென்றவர்

1957-ல் சாதி ஒழிப்புக்காகப் பெரியார் அறிவித்த அரசமைப்புச் சட்ட எரிப்பு போரில் பங்கேற்று 18 மாதம் சிறை சென்றவர். 1974-ல் பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் மூன்று தொகுதிகளும் 2010-ல் விரிவாக்கம் செய்யப்பட்ட 20 தொகுதிகளும் தொகுத்து வெளியிட்டவர். 1974-ல் இவரால் தொடங்கப்பெற்ற ‘சிந்தனையாளன்' தமிழ் ஏடு இன்றும் தொடர்ந்து வெளிவருகிறது.

அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர், பட்டியல் இன வகுப்பினர், பழங்குடியினர் பேரவைத் தலைவராகவும், பெரியார் ஈ.வே.ராமசாமி நாகம்மை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் பணியாற்றினார்.

பெரியார் கொள்கைகளை பரப்பியவர்

உத்தரப் பிரதேசம், பிஹார், கேரளா, கர்நாடகம், ராஜஸ்தான், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலான அண்டை நாடுகளிலும் பெரியார் கொள்கைகளை பரப்பினார். அதற்காக, நிறைய பயணப்பட்டார். தனது 96 வயதிலும் இந்திய சமூக அமைப்பைச் சோசலிச அமைப்பாக மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து, அதற்கு மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய வழியே பொருத்தமானது என தமது அரசியல் பயணத்தை மேற்கொண்டு "ஓய்வு என்பது இறுதி மூச்சோடுதான்!" என்கிற கொள்கையுடன் போராடி வந்தவர் அறிஞர் அய்யா வே. ஆனைமுத்து.

திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகளில் அய்யா ஆனைமுத்து அவர்களின் தனித்த புகழ் எந்நாளும் நின்று நிலைக்கும். அவரது மறைவால் துயரில் ஆழ்ந்து இருக்கின்ற குடும்பத் தினர்களுக்கும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களுக்கும், தமிழியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

34 mins ago

இந்தியா

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்