புதுவை மக்களின் ஆசைகள் அனைத்தும் நிராசையாகிவிட்டது பொய்களைக் கூறி பிரிவினையை ஏற்படுத்துகிறது காங்கிரஸ் லாஸ்பேட்டை தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கடும் விமர்சனம்

By செய்திப்பிரிவு

பொய்களைத் தொடர்ந்து கூறி, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் செயலை காங்கிரஸ் தொடர்ந்து செய்கிறது என்று புதுச்சேரியில் பிரச்சாரம் மேற் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மாநில பாஜக தேர்தல்பிரச்சார பொதுக்கூட்டம் லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பிரதமர் மோடி தமிழில் ‘வணக்கம்’ கூறி தனது பேச்சைத் தொடங்கினார். பிரதமர் உரையின் விவரம்:

புதுச்சேரியில் நான் மிகப்பெரிய மகிழ்ச்சியைக் காண்கிறேன். முதல் காரணம் இங்கு, தற்போது தொடங்கப்பட்டுள்ள மேம்பாட்டு திட்டங்கள்; இரண்டாவது காரணம்,புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியின் மோசமான நிர்வாகத்திடம் இருந்து விடுதலை பெற்றதை கொண்டாடுகிறீர்கள்.

புதுவை மக்களிடம் மகிழ்ச்சி இல்லை

புதுச்சேரி மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையோடு 2016-ல் காங்கிரஸூக்கு வாக்களித்தனர். காங்கிஸ் அரசு 5 ஆண்டுகளில் மக்கள்நம்பிக்கையை நிராசையாக் கியுள்ளது. மக்கள் மகிழ்ச்சியோடு இல்லை. அவர்களின் கனவு, நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுஅனைத்து நிர்வாகத் துறைகளையும் சீரழித்துள்ளது. பாரம்பரிய நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. உள்ளூர் தொழில்கள் நசிந்துள்ளது. மக்களுக்கு வேலைசெய்ய காங்கிரஸூக்கு விருப்பமில்லை. அதாவது பரவாயில்லை; மக்களுக்காக மற்றவர்கள் வேலை செய்வதையும் ஏன் விரும்பவில்லை? என்பதுதான் புரியவில்லை.

காங்கிரஸ் அரசு மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை. மத்திய அரசு நிதியை பயன்படுத்த முன்வர வில்லை. கடல் சார் மேம்பாட்டுத் திட்டங்கள், மீனவர்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன.

சில நாட்கள் முன்பு ஒரு வீடியோவைப் பார்த்தோம். ஆதரவற்ற பெண்மணி ஒருவர், ‘இந்த புதுச்சேரி அரசு மக்களுக்கு எதுவும்செய்யவில்லை; புயல், மழைக்காலங்களில் வந்து உதவவில்லை’ என அந்த பெண்மணி கண் கலங்கி குறை கூறியது வேதனையாக இருந்தது. ஒரு முதல்வர் மக்களுக்கும், அவரது தலைவருக்கும் உண்மையைச் சொல்லாமல், தவறாக மொழி பெயர்த்து, அவரது தலைவரையும், மக்களையும் ஏமாற்றுகிறார்.

ஜனநாயக விரோதிகள் யார்?

காங்கிரஸ் கட்சியினர், அடுத்தவர்களை ஜனநாயக விரோதிகள் எனக் கூற தவறியதே இல்லை. அவர்கள், முதலில் தங்களைக் கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மறுத்தனர். காஷ்மீரிலும், குஜராத்திலும், லடாக், லே பகுதியிலும் கூடஉள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியும். ஆனால் புதுச்சேரியில் நடத்த முடியாது. காலனி ஆதிக்க ஆட்சியைப் போல், மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியிலும் ஈடுபட்டு மோசமான அரசியலை செய்துவருகின்றனர். பொய்யைச் சொல்லியும், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியும் அரசியல் செய்கின்றனர். சில மதங்களிடையே, சமூதாயத் தினரிடையே பேதனைகளைத் தூண்டி மக் களைப் பிரித்தாளுகின்றனர்.

புதுச்சேரிக்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்

"புதுச்சேரியின் தேர்தல் அறிக்கையாக ஒன்றை கூற விரும்புகிறேன். புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்ற விருப்புகிறேன். ‘பி என்றால் பிசினஸ்’, ‘இ என்றால் எஜூகேஷன்’, ‘எஸ் என்றால் ஸ்பிரிச்சுவல் (ஆன்மிகம்)’, ‘டி என்றால் டூரிசம்’ ஆகிய துறைகளில் முதன்மை பெற்ற மாநிலமாக புதுச்சேரியை தேசிய ஜனநாயக கூட்டணி மாற்றும். நான் புதுச்சேரியில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. மாநில முன்னேற்றத்துக்கு விரோதியான காங்கிரஸை தூக்கி எறியுங்கள். புதுச்சேரியின் மாண்பை, பெருமையை மீட்டெடுக்க பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள். புதுச்சேரிக்கு நல்லாட்சியை தாருங்கள்"என்றும் இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். காங்கிரஸ் தலைவர்கள், ‘மீனவ நலத்துறைக்கு அமைச்சகம் அமைப்போம்’ என்கின்றனர். தேசியஜனநாயக கூட்டணி 2019-ல் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அதற்காக இந்த அரசு பட்ஜெட்டில் கடந்த ஆண்டுகளை விட 80 சதவீதம் அளவில் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மலை வாழ் மக்களுக்கும் தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. காங்கிரஸ் மன்னர் ஆதிக்க, குடும்ப தலைமுறை ஆட்சி கொள்கையை கொண்டதாக இருக்கிறது. வேண்டியவர்களுக்கு நல்லது மட்டும் செய்யும் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது.

‘ஸ்டார்ட் அப்’ இந்தியா திட்டம்

புதுச்சேரி இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்கள். அவர் களுக்கு சரியான ஆதரவு தேவை. இதனை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தரும். தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், ஜவுளி உள்ளிட்ட பல துறைகளை ஊக்குவிக்கும். புதிய தொழில்களை ‘ஸ்டார்ட் அப்’ இந்தியா திட்டத்தின் மூலம் ஊக்கப்படுத்தி வருகிறோம்.

புதிய தொழில் கொள்கை கல்வி நிறுவனங்களில் மாற்றம் கொண்டு வரும். கல்வியில் மொழிஒரு தடையாக உள்ளது. எனவே மருத்துவம், தொழில் கல்வியில் உள்ளூர் மொழியில் கல்வி பயில்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு கலாச்சாரம் சங்கமிக்கும் இடமாக புதுச்சேரி உள்ளது. ஆன்மிக சுற்றுலாவுக்கான அற்புத பகுதியாகவும் உள்ளது. ஆன்மிகத் தேடலை உணர இங்கு மக்கள் வருகின்றனர். கடல்,காற்று, மண் என சகல வளமும்புதுவையில் உள்ளது. சுற்றுலாபயணிகளை ஈர்க்க உள் கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம்.

கடல்சார்ந்த துறைகளின் மேம் பாட்டிற்கு நீலப்புரட்சி செய்யாமல் இந்தியா முழுமை யடையாது. சாகர் மாலா திட்டங்களின் மூலம் கடற்கரை, மீனவ சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல இடங்களில் துறைமுகம் அமைத்து வருகிறோம். தற்போதுள்ள துறைமுகத்தை திறமையானதாக மாற்றி வருகிறோம். மீனவர்களுக்கு கடனுதவி, கடன் அட்டை வழங் குவது, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஏற்பாடுகள் செய் துள்ளோம். மீன்வளத் துறைக்கு ரூ.46 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இந்தியாவில் மீன் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது.

தலைமையின் கைப்பாவையான காங்கிரஸ் கூட்டுறவு துறையை நசித்து விட்டது. குஜராத்தைப் போல புதுவையில் கூட்டுறவு துறையை துடிப்பானதாக மாற்று வோம். புதுச்சேரி மக்களுக்கு குறிப்பாக பெண்களின் முன் னேற்றத்துக்கு உதவிக்கரமாக மாற்றப்படும்.’’ இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். கூட்டத்தில் மத்திய நாடாளு மன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் மேக்வால், புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, இணைப் பொறுப்பாளர் ராஜிவ் சந்திரசேகர் எம்பி, புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், நியமன எம்எல்ஏக்கள் செல்வ கணபதி, தங்க.விக்ரமன், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், தேசிய பொதுச் செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

க்ரைம்

3 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

15 mins ago

தொழில்நுட்பம்

19 mins ago

தமிழகம்

23 mins ago

ஜோதிடம்

10 mins ago

சினிமா

31 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

45 mins ago

மேலும்