கனமழையால் தத்தளிக்கிறது கடலூர் மாவட்டம் வெள்ளத்தைத் தடுக்க தயார் நிலையில் இருந்த மணல் மூட்டைகள் எங்கே போனது?

By ந.முருகவேல்

அடுத்தடுத்து வந்த இரு புயல்களால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களைத் தாண்டி கனமழை கொட்டித் தீர்க்கிறது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழையின் போது கடலூர் மாவட்டம் இயற்கை சீற்றத்துக்கு உள்ளாவது வாடிக்கையான ஒன்று.

ஆறுதல் தரும் செயல்பாடுகள்

கடந்த 1996ம் ஆண்டு முதலே பல்வேறு இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டும், இம்மாவட்டத்தில் இயற்கை சீற்றத்தை எதிர்கொள் வதற்கு மாவட்ட நிர்வாகம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே தொடர்ந்து வரும் இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் பாதிப்பு உணர்த்துகிறது.

‘நிவர்’ புயல் எச்சரிக்கை விடப்பட்டு, தாழ்வான மின்கம்பிகள் குறித்த தகவல்கள் மின்சார வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டது, முறிந்து விழும் நிலையில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன, அரசின் நிவாரண முகாம்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது போன் றவை சற்று ஆறுதல் தரக்கூடிய செயல்பாடுகளே.

அதே நேரத்தில் நீர் நிலைகள் முறையாக தூர்வாரப்பட்டு, வடிகால் வாய்க்கால்களையும் சீரமைத்திருந்தால் கனமழை பெய்தாலும் பெரிய அளவுக்கு பாதிப்பிருக்காது. ‘புரெவி’ புயலால் பெய்த கனமழை குடிமராமத்துப் பணிகளை தோலுரித்துக் காட்டி யுள்ளது. வடகிழக்கு பருவ மழை சேதத்தை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளுடன், ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 2,500 மணல் மூட்டைகளை தயார்நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியது. அவ்வாறு செய்யப்பட் டுள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியரும் கடந்த செப்டம்பர் மாதமே ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் தோறும் சென்று பார்வையிட்டார்.

‘நிவர்’ புயல் கரையை கடந்த நிலையில், அடுத்து வரும் அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 5 ஆயிரம் மணல் மூட்டைகள் வரை தயார் நிலையில் வைத்திருக்கும் வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், அவ்வாறு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு சில ஊராட்சி ஒன்றிங்களில் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை ஊராட்சி ஒன்றியத் தலைவரின் பரிந்துரையின் பேரில் ரூ.200-க்கு விற்கப்பட்டதாகவும், மணல் மூட்டைக்கு பதில் மண் மூட்டைகளை தயாரித்து பெயர ளவுக்கு சில வாய்க்கால்களில் அடுக்கி வைக்கப்பட்டதாகவும், அவை கனமழையில் கரைந்து போனதாகவும் பெருமாள் ஏரி கரையோர மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். திட்டக்குடியை அடுத்த கோடங்குடியில் ரூ.5 லட்சம் செலவில் தூர்வாரப்பட்ட ஏரியில் கரை உடைப்பு ஏற்பட்ட போது, அதை அந்த கிராம விவசாயிகளே சரி செய்தனர். தூர்வார ஒப்பந்தம் விட்ட மங்களூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் அப்பகுதியை பார்வையிடவில்லை, தயார் நிலையில் வைத்திருந்ததாகக் கூறும் மணல் மூட்டைகளைக் கொண்டு ஏரிக் கரை உடைப்பு சரி செய்யப்படவில்லை என்கிறார் பசுமை கிராமம் அமைப்பின் தலைவர் அறிவழகன். குறிப்பாக கடலூர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, கீரப்பாளை யம், குறிஞ்சிப்பாடி, பண் ருட்டி ஆகிய ஒன்றியங் களில் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் சரிவர பயன்படுத்தப் பட்டிருந் தால், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்திருக்க வாய்ப் பில்லை.

பேரிடர் எதிர்கொள்ளும் மாவட்டம் என்பதை பெயரளவுக்கு இல்லாமல், பேரிடர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை விரைந்து செயல் படுத்தவேண்டும் என்கிறார் கடலூர் அனைத்துக் குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின செயலாளர் மருதவாணன். மணல் மூட்டைகள் பயன்பாடு குறித்து கடலூர் பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சுதர்சனிடம் கேட்டபோது, “கடலூர், சிதம்பரம் பகுதியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் மணல் மூட்டைகள் பயன்படுத்தியிருக்கிறோம். விருத்தாசலம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் வரை பயன்படுத்தியிருக்கிறோம். ஊரக வளர்ச்சித் துறையிடமிருந்து மணல் மூட்டைகள் பெறப்பட வில்லை''என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

ஓடிடி களம்

26 mins ago

விளையாட்டு

33 mins ago

கல்வி

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்