உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கலவரத்தில் இதுவரை எத்தனை பேர் கைது? - இன்று அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு :

By செய்திப்பிரிவு

கடந்த 3-ம் தேதி உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் பகுதியில் போராட்டம் நடத்தி கொண்டிருந்த விவசாயிகள் மீது மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியது.

அன்றைய தினம் பாஜக வினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 2 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதினர். அதன்பேரில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சூர்யகாந்த் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய வழக்கறிஞர் சிவகுமார் திரிபாதி காணொலி வாயிலாக ஆஜராகி, உ.பி. அரசு ஜனநாயக ரீதியில் செயல் படவில்லை என்று தெரிவித்தார்.

உ.பி. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கரிமா பிரசாத் ஆஜராகி கூறும்போது, "லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப் பட்டுள்ளது. நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, "லக்கிம்பூர் வழக்கில் யார், யார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு கரிமா பிரசாத் பதில் அளிக்கையில், முழு விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரமணா, எப்ஐஆர் விவரம், எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் போன்ற விவரங்களை வெள்ளிக்கிழமை (இன்று) தாக்கல் செய்ய உத்தர விட்டார்.

இதனிடையே மூத்த வழக்கறிஞர் அம்ரித்பால் சிங் கூறும்போது, "லக்கிம்பூர் கலவரத்தில் உயிரிழந்த விவசாயி லவ்பிரித் சிங்கின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளார்" என்று தெரிவித்தார். அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அவர் குறித்த விவரங்களையும் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தர பிரதேச அரசுக்கு தலைமை நீதிபதி ரமணா உத்தரவிட்டார்.

லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் லவ குசா ராணா, ஆசிஷ் பாண்டே ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆசிஷ் மிஸ்ரா தலைமறைவாக உள்ளார்.

பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைத் கூறும்போது, "இழப்பீடு, அரசு வேலை மற்றும் அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும். அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளை முன்வைத்தோம். இதில் இழப்பீடு, அரசு வேலை ஆகிய 2 கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டுள்ளன. 6 நாட்களில் அமைச்சரின் மகனை கைது செய்யயாவிட்டால் இழப்பீட்டை திருப்பி அளித்துவிட்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

27 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

35 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

41 mins ago

ஆன்மிகம்

51 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்