புதிய வகை கரோனா வைரஸ் பரவலை தடுக்க - பிரதமர் மோடி அவசர ஆலோசனை : சர்வதேச விமான சேவை குறித்து மறுபரிசீலனை

By செய்திப்பிரிவு

தென்னாப்பிரிக்காவில் உருவாகியுள்ள புதிய வகை கரோனா வைரஸ் இந்தியாவில் நுழைவதை தடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சர்வதேச விமான சேவையை தொடங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் மரபணு மாறிய புதிய வகை கரோனா வைரஸ் ஒரு வாரத்துக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த கரோனா வைரஸுக்கு உலக சுகாதார அமைப்பு 'ஒமைக்ரான்' என்று பெயர் சூட்டியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து அண்டை நாடுகளுக்கு புதிய வைரஸ் பரவி வருகிறது. மேலும் ஹாங்காங், இஸ்ரேல், பெல்ஜியம், ஜெர்மனி, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக தென்னாப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்தை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரத்து செய்துள்ளன.

இந்த சூழலில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெல்ஜியம் நாட்டுக்கு நேற்று முன்தினம் 600 பேர் திரும்பினர். அவர்களில் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சர்வதேச சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறும்போது, "தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கும் என்று அஞ்சுகிறோம். டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக உலகம் முழுவதும் புதிய கரோனா அலை உருவாகும் அபாயம் உள்ளது. உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளனர்.

புதிய ஒமைக்ரான் வைரஸில் 50 வகையான மரபணு மாற்றங்கள் காணப்படுகின்றன. இது கரோனா தடுப்பூசியின் பலனை 40 சதவீதம் வரை குறைக்கும் என்று கூறப்படுவதால் பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரதமர் அறிவுரை

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழை வதை தடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

டிசம்பர் 15-ம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவலால் சர்வதேச விமான சேவையை தொடங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.புதிய வைரஸ் இந்தியா|வில் கால் பதிப்பதை தடுக்க பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

ஒமைக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வருவோரை தீவிர பரிசோதனை செய்ய வேண்டும். 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடைமுறைகளை பொதுமக்கள் கண்டிப்புடன் பின்பற்ற மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு விமான சேவையை தொடங்கக்கூடாது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

வாழ்வியல்

9 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்