மாற்று முறையில் கணக்கிடப்பட்ட மதிப்பெண்களுடன் - சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : 99.37 சதவீதம் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மாற்று மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்பட்ட மதிப்பெண்களுடன் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 99.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் (2020-21) மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன், அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

உயர்கல்விக்கு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அவசியம் என்பதால் மாணவர்களுக்கு மாற்று மதிப்பீட்டு முறையில் மதிப்பெண் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, 12-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40 சதவீத மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளில் இருந்து தலா 30 சதவீத மதிப்பெண்களை எடுத்து பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் கணக்கிட முடிவு செய்யப்பட்டது. மதிப்பெண் கணக்கீட்டு பணிகளில் தவறுகள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக சிபிஎஸ்இ மண்டல அதிகாரிகள் பள்ளிகளுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில்கொண்டு தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

பள்ளிகளில் மதிப்பெண் கணக்கீடு, மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது, இறுதிகட்ட சரிபார்ப்பு பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்டன. மாற்று மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்பட்ட மதிப்பெண்களுடன் சிபிஎஸ்இ இணையதளத்தில் (https://cbseresults.nic.in) முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்வெழுத பதிவு செய்திருந்த 13 லட்சத்து 69 ஆயிரத்து 745 மாண வர்களில் 13 லட்சத்து 4 ஆயிரத்து 561 பேரின் முடிவுகள் மட்டும் தற்போது வெளியாகியுள்ளன. தேர்ச்சி விகிதம் 99.37 சதவீதம் ஆகும். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 99.13 சதவீதம், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 99.67 சதவீதம். எஞ்சியுள்ள 65,184 பேரின் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

தேர்வு முடிவு வெளியிடப்பட்ட மாணவர்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 152 பேர் 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரையிலான மதிப்பெண்ணும், 70 ஆயி ரத்து 4 பேர் 95 சதவீதத்துக்கு மேற்பட்ட மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித் தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை நடைபெறும் என சிபிஎஸ்இ அறி வித்துள்ளது.

சிபிஎஸ்இ நிர்வாகம் நாடு முழுவதும் 16 மண்டலங்களாக இயங்கி வருகிறது. சென்னை மண்டலத்தின்கீழ் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபர் தீவுகள் ஆகிய பகுதிகள் வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மண்டல வாரியான தேர்ச்சி வீதங்கள் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு மண்டல வாரியாக தேர்ச்சி வீதங்கள் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

13 mins ago

க்ரைம்

31 mins ago

ஜோதிடம்

29 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

38 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

46 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்