வளமான தமிழகம், மகசூல் பெருக்கம், குறையாத தண்ணீர் என்பது உள்ளிட்ட - 7 இலக்குகளை எட்ட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் : ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

‘வளமான தமிழகம், மகசூல் பெருக்கம், குடிமக்களுக்கு குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்தரக் கல்வி - மருத்துவம், எழில்மிகு மாநகரங்கள், உயர்தர ஊரக கட்டமைப்பு, அனைத்துமான தமிழகம்’ ஆகிய 7 இலக்குகளை 10 ஆண்டுகளில் எட்டுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த மே 7-ம்தேதி பொறுப்பேற்றது. அதன்பிறகு தொடர்ச்சியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 24 மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு மற்றும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து, புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் முதல்வர் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று பரவல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை ஆட்சியர்கள் முழு வீச்சில் எடுக்க வேண்டும். தொற்று பரவல் எண்ணிக்கையை மேலும் குறைக்க வேண்டும்.

அரசு சார்பில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. படுக்கை இல்லை என்ற புகாருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜனை உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் பெற்று, தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பொறுப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க ஆட்சியர்கள் தங்கள் அதிகாரம், பதவியை பயன்படுத்தி கடமை ஆற்ற வேண்டும்.

7 இலக்குகள்

‘வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழகம், மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி, குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்தரக் கல்வி - உயர்தர மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், உயர்தர ஊரக கட்டமைப்பு - உயர்ந்த வாழ்க்கைத் தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்’ ஆகிய 7 இலக்குகளை 10 ஆண்டுகளில் எட்டுவதற்கு ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அவசியம்.

பொது விநியோகத் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். அனைவருக்கும் குடும்ப அட்டைகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், போலி அட்டைகளை ஒழிக்க வேண்டும். விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமாக, தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மக்கள் அளிக்கும் மனுக்கள் மீதுஉடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை கவனச் சிதறல் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை தகுதியானவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

நகர்ப்புற, ஊரக வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள். மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியை முறையாக செலவு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் ஆட்சியர்கள் இணைந்து பணியாற்றி, சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளித்து, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசின் இலக்குகளை தங்கள் இலக்குகளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

எனது அரசு உத்தரவிடும் அரசுமட்டுமல்லாது, ஆட்சியர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகள், கருத்துகளை காதுகொடுத்துக் கேட்கும் அரசு. நாம்அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி, வளம் மிகுந்த தமிழகத்தை உருவாக்குவோம்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

இதில் தலைமைச் செயலர் இறையன்பு, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பல்வேறு துறைகளின் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

முதல்வர் நாளை டெல்லி பயணம்

முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக மு.க.ஸ்டாலின் நாளை (17-ம் தேதி) டெல்லி செல்கிறார். நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார். அமைச்சர் துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் சிலர் உடன் செல்கின்றனர்.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கு மத்திய அரசால் வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, நீட் தேர்வு, 7 பேர் விடுதலை, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுவை பிரதமரிடம் முதல்வர் அளிக்கிறார். செங்கல்பட்டு தடுப்பூசி மையம் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் சந்திக்க உள்ளார்.

நாளை இரவு டெல்லியில் தங்கும் முதல்வர், 18-ம் தேதி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசுகிறார். அன்றே சென்னை திரும்புகிறார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

உலகம்

5 hours ago

மேலும்