கருப்பு பூஞ்சை நோயை முழுமையாக குணப்படுத்தலாம் : மக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

By செய்திப்பிரிவு

கருப்பு பூஞ்சை நோய் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். இதை முழுமையாக குணப்படுத்தலாம் என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கருப்பு பூஞ்சை நோய் முழுமையாக குணப்படுத்தக் கூடியதுதான். இதனால் தேவையற்ற பயமோ, பதற்றமோ வேண்டாம். கரோனா தொற்றால் வரக்கூடிய புதிய வகையிலான, அதிகமாகப் பரவக்கூடிய நோய் இது என்பது போன்று சமூக வலைதளங்களில் சில தகவல்கள் உலா வருகின்றன. இதற்காக பதற்றமடைய வேண்டாம். இந்த பூஞ்சை தொற்று பல ஆண்டுகளாக இருக்கக் கூடியது. கரோனா தொற்றுக்கு முன்பிருந்தே இந்த பூஞ்சை தொற்று இருக்கிறது. கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவர்கள், ஐசியூவில் பல நாட்களாக இருக்கக் கூடியவர்களுக்கு இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்றமாநிலங்களில் கரோனா தொற்று உள்ளவர்களிடம் இதன் தாக்கம் அதிகம் இருப்பதாக செய்தி வந்தது. இதனை, ‘அறிவிக்கப்பட வேண்டிய நோயாக’ பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன் அர்த்தம், ‘இந்த நோய் எங்காவது யாருக்காவது வந்தால் அதுபற்றி பொதுசுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்பதுதான்.

சைனஸ் போன்ற அறிகுறிகள் வந்தவுடனேயே உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றால் இதை முழுமையாக குணப்படுத்த முடியும்.

10 பேர் குழு

இந்த பாதிப்பு குறித்து கண்டறிய 10 பேர் கொண்ட தனிக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் நீரிழிவு நோயாளிகள் 7 பேர் உள்ளிட்ட 9 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலமுடன் உள்ளனர். சிகிச்சை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் இந்த நோயால் இதுவரை உயிரிழப்பு இல்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தவறான தகவல் பரப்பப்படுகிறது. இறந்தவரின் நுரையீரலில்80 சதவீதம் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அங்கிருந்து டீன் தகவல் அனுப்பியுள்ளார். கருப்பு பூஞ்சை நோயை கட்டுபடுத்த 5 ஆயிரம் தடுப்பு மருந்துகள் வரும் 24-ம் தேதி வரவுள்ளது. அதுவரையில் தேவையான தடுப்பு மருந்துகள் இருக்கின்றன.

அடுத்த சில வாரங்களில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறையும். கரோனாவால் பாதிக்கப்படுவர்களில் 98 சதவீதம் பேர் குணமடைந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரையில் 70 பேருக்கு கருப்பு பூஞ்சை

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் உஷா கிம் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘கரோனா சிகிச்சையின்போது எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் உடலில் சர்க்கரை அளவுஅதிகரிக்கும். இதனால் கருப்பு பூஞ்சைநோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

வழக்கமாக, இந்த நோய்க்கு மதுரைஅரவிந்த் மருத்துவமனைக்கு ஓராண்டில் 10 பேர் மட்டுமே சிகிச்சைக்கு வருவது வழக்கம். கரோனா 2-வது அலையால் 50 பேர் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுள்ளனர்’’ என்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் கண் பிரிவில் 5 பேர், காது,மூக்கு,தொண்டை பிரிவில் 9 பேர், பொது மருத்துவப் பிரிவில் 6 பேர் என மொத்தம் 20 பேர் கடந்த 45 நாட்களில் சிகிச்சை பெற்றுள்ளனர். பார்வை இழப்பு, உயிரிழப்பு எதுவும் இல்லை என டீன் அ.ரத்தினவேல் தெரிவித்தார்.

அறிவிக்கை செய்யப்பட்ட நோய்

வட மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை என்பது தகவல் தெரிவிக்க வேண்டிய நோய் என்பதற்கான அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த அரசாணையில், ‘‘தமிழ்நாடு பொது சுகாதார சட்டப்படி, ‘மியூகோமைகோசிஸ்’ (கருப்பு பூஞ்சை நோய்) தமிழகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டிய அறிவிக்கை செய்யப்பட்ட நோய் என ஆளுநர் அறிவித்துள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் எந்த ஒரு மருத்துவமனையிலும் இந்த நோய் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் குறித்த விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

22 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்