கரோனா 2-வது அலை பரவும் அபாயம் இருப்பதால் தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா 2-வது அலை பரவும் என்பதால் பாஜக சார்பில் நடக்கவுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பத்திரிகையாளர் என்.பாலமுருகன் மற்றும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.செந்தில்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்திருந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளான திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவ.6-ம் தேதி தொடங்கி டிச.6-ம் தேதி வரை வேல்யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். இந்த வேல் யாத்திரை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகவே நடத்தப்படுகிறது. வேல் யாத்திரை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என அவரே அறிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக யாத்திரை செல்வதால் கரோனா 2-வது அலை நேரத்தில் மேலும் விபரீதத்தை ஏற்படுத்தும்.

இந்த யாத்திரை பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6 அன்று முடிவடையவுள்ளதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுக்களில் கோரியிருந்தனர்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதிஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் புனீத், ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

பாஜக சார்பில் மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி, வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிடும்போது, ‘‘வேல்யாத்திரை கரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லவில்லை. கரோனா வழிகாட்டு நிபந்தனைகளை பின்பற்றியே இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது. கரோனா தொற்று குறைந்துள்ளதால் பள்ளி,கல்லூரிகளை திறக்க அரசு முடிவுசெய்துள்ளபோது இந்த யாத்திரைக்கு மட்டும் தடை விதிக்க முடியாது. இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள மனுக்களில் தமிழக அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதற்குள் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால் தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டனர்.

அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி,‘‘வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிகடந்த அக்.15 அன்று பாஜக பொதுச்செயலாளர் மனு அளித்துள்ளார். அதற்கு அக்.17-ல் சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அல்லது ஆணையர்களை அணுக அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக அப்போதைய சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுக்க காவல்அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கரோனாதொற்றைத் தடுக்கும் விதமாக ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு, போராட்டம், பேரணிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு இன்னும் அமலில் உள்ளது.

மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் வகையில் நவ.16 வரை 100பேர் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு உலக நாடுகளில் கரோனா 2-வது மற்றும்3-வது அலைக்கான அச்சுறுத்தல்இருப்பதால் இந்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜகவுக்கு இன்று (நேற்று) தெரிவிக்கப்படும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘வரும் நவ.15 வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, வேல் யாத்திரைக்கு அனுமதி கோரும் மற்றும் தடை விதிக்கக் கோரும் மனுக்கள் மீது தமிழக அரசு தகுந்த உத்தரவு பிறப்பித்தால் அதை எதிர்த்து இருதரப்பும் வழக்கு தொடரலாம்’’ எனக்கூறி 2 வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 mins ago

தமிழகம்

10 mins ago

க்ரைம்

11 mins ago

உலகம்

39 mins ago

தமிழகம்

41 mins ago

சினிமா

52 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

58 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்