கரோனா விவகாரத்தில் தாமாக வழக்கு பதிவு - ஆக்சிஜன், தடுப்பூசி விநியோகத்தில் தேசிய அளவிலான திட்டம் என்ன : மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

கரோனா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள உச்ச நீதிமன்றம், ஆக்சிஜன், தடுப்பூசி விநியோகம் குறித்த தேசிய அளவிலான திட்டத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 3.14 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,104 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மூச்சுத் திணறலால் அவதிப்படுவோருக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் மற்றும் வைரஸை எதிர்த்து போராடும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனல் சிலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து 6 உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்படே நேற்று கூறும்போது, “டெல்லி, மும்பை, சிக்கிம், மத்திய பிரதேசம், கொல்கத்தா மற்றும் அலகாபாத் ஆகிய 6 உயர் நீதிமன்றங்களில் கரோனா பரவல் விவகாரம் தொடர்பான வழக்குகள் பதிவாகி உள்ளன. உயர் நீதிமன்றங்கள் தங்கள் எல்லைக்குட்பட்டு விசாரணை நடத்தினாலும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

எனவே, ஆக்சிஜன் விநியோகம், அத்தியாவசிய மருந்துகள் விநியோகம், தடுப்பூசி விநியோகம் மற்றும் செலுத்தப்படும் முறை, ஊரடங்கை அமல்படுத்துமாறு உயர் நீதிமன்றங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியுமா என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இது தொடர்பான தேசிய அளவிலான திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கின் மீது வெள்ளிக்கிழமை (இன்று) விசாரணை நடைபெறும். மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே நீதிமன்றத்துக்கு உதவுவார்” என்றார்.

தேசிய அவசரநிலை

தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “நாட்டில் இப்போது தேசிய அவசரநிலை போன்ற சூழல் நிலவுகிறது” என்று குறிப்பிட்டார்.

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி அரசும் மருத்துவமனைகளும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இவற்றை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக 3 நாட்களாக விசாரித்து வந்தது.

இதனிடையே, மேக்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஒரு மருத்துவமனைக்கு ஒரு ஆக்சிஜன் டேங்கர் லாரி அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, 2 அவசர வழக்குகள் முடிவுக்கு வந்தன. தங்கள் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்ய உத்தரவிடக் கோரி மேக்ஸ் குழுமம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்தது. மேலும், “பிச்சை எடுப்பீர்களோ, கடன் வாங்குவீர்களோ, திருடுவீர்களோ தெரியாது. ஆனால் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்” என தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

35 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

மேலும்