ரிஷப் பந்த், புஜாரா, விஹாரி, அஸ்வின் சிறப்பான ஆட்டத்தால் சிட்னி டெஸ்ட் போட்டியை டிராவில் முடித்தது இந்திய அணி

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த், புஜாரா, விஹாரி, அஸ்வின் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் போட்டியை டிரா செய்தது இந்திய அணி.

சிட்னியில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய முதல் இன்னிங்ஸில் 338 ரன்களும் இந்தியா 244 ரன்களும் எடுத்தன. முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்றஆஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸில் 312 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. 407 வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது. புஜாரா 9 , ரஹானே 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கடைசி நாள் ஆட்டத்தை இந்திய அணி நேற்று தொடர்ந்து விளையாடியது. ரஹானே (4) மேற்கொண்டு ரன்கள் சேர்க்காத நிலையில் நேதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ஆஸ்திரேலிய அணிக்குப் அச்சுறுத்தலாக விளங்கிய ரிஷப் பந்த் 118 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்த நிலையில் நேதன்லயன் பந்தில் ஆட்டம் இழந்தார். புஜாரா உடன் இணைந்து ரிஷப் பந்த் 4-வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தார்.

இந்த ஜோடி மொத்தமாக 265 பந்துகளை எதிர்கொண்டு இருந்தது. நங்கூரம் போன்று நிலைத்து நின்று விளையாடிய புஜாரா 205 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் ஹேசல்வுட் பந்தில் போல்ட் ஆனார். 272 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஹனுமா விஹாரியுடன் இணைந்தார் அஸ்வின். தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 96 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்திருந்தது. 5 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் கடைசி செஷனில் 36 ஓவர்களில் வெற்றிக்கு 127 ரன்கள் தேவையாக இருந்தது. விஹாரி 4, அஸ்வின் 7 ரன்களுடன் தொடர்ந்து விளையாடினார்கள்.

ஆஸ்திரேலிய அணியினர் உடலை குறி வைத்தும், பவுன்சர்களாகவும் வீசிய பந்துகளை அஸ்வினும் விஹாரியும் திறம்பட எதிர்கொண்டு சமாளித்தனர். தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட விஹாரி, ரன்கள் சேர்க்க முயற்சி செய்யாமல் தடுப்பாட்டத்திலேயே கவனம் செலுத்தினார். அதேவேளையில் லயனின் பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டார் அஸ்வின். கடைசி வரை விஹாரி, அஸ்வினின் விக்கெட்டை ஆஸ்திரேலிய வீரர்களால் கைப்பற்ற முடியாமல் போனது. ஆட்டம் முடிவடைய 1 ஓவர் மட்டுமே மீதம் இருந்த நிலையில் போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி 131 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களும் அஸ்வின் 128 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி கூட்டாக 259 பந்துகளை (42.4 ஓவர்கள்) சந்தித்து இருந்தது. ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார். டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பனில் 15-ம்தேதி தொடங்குகிறது.

ஐஎஸ்எல் கால்பந்து இன்றைய போட்டி நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்

பெங்களூரு நேரம்: இரவு 7.30, இடம்: கோவாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

மேலும்