கரோனா தாக்கத்தால் 2020-ம்ஆண்டின் பல மாதங்கள் பயமும் அச்சமும் இருளும் சூழ்ந்து காணப்பட்டது

By செய்திப்பிரிவு

கரோனா தாக்கத்தால் 2020-ம்ஆண்டின் பல மாதங்கள் பயமும் அச்சமும் இருளும் சூழ்ந்து காணப்பட்டது. தற்போது அந்த நிலை மெல்ல மெல்ல மாறி, இயல்பு நிலைக்கு வரும் நாளை, மக்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இயல்பு நிலை மாறி வரும் போதும் பழைய நிலைக்கு அத்தனை எளிதில் திரும்ப முடியுமா என்பது கேள்விக்குறியே?

இந்தக் கால கட்டத்தில் ஏற்பட்ட கடும் பொருளாதார சரிவு நிலை மாறி மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. மத்தியநிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, டிசம்பர்மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.15 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. வேலைவாய்ப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை 23.5 சதவீதம் என்ற அளவில் இருந்த நிலை மாறி, அக்டோபரில் 6.98 சதவீதத்துக்குக் குறைந்துள்ளது.

இயல்பு நிலையை நோக்கிய நீண்ட பயணத்தில், சில விஷயங்களில் பழைய நிலையை அடைய இயலாது. அதே நேரம் பல புதிய நிலைகள் உருவாகி உள்ளன. ஊரடங்கு காலத்தில், இந்தியாவின் 43 லட்சம் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களில் 90 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைக்கு மாறினர்.

ஊரடங்கின் தொடக்கத்தில் வேலை தொடருமா என்ற கவலையும், சந்தேகமும் நிலவியதால், காலத்துக்கு ஏற்ப புதிய வேலை முறைக்கு பணியாளர்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டனர். இதனால் பணியாளர்களின் உற்பத்தித் திறன் அதிகமானது. வேலைக்கு செல்வதற்கான பயண நேரம் மிச்சம், விருப்பப்படும் நேரத்தில் வேலை செய்து இலக்கை அடைவது என ஒரு கனவு நனவானதைப் போல தெரிந்தது.

அதிக வாடகை, மின்சார செலவு, பணியாளர்களுக்கான அடிப்படை வசதிகள், அவர்களை அழைத்து வர, வீட்டில் விட வாகன வசதி எனப் பலதரப்பட்ட செலவுகளைக் குறைக்க இதை ஒரு வாய்ப்பாக நிறுவனங்கள் பார்த்தன. சந்திப்புகள், ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் இணையம் மூலமாகவே நடந்தன. நீதிமன்ற நடவடிக்கைகளும் இணைய வழியில் ஆரம்பிக்கப்பட்டன.

பெரிய அளவில் செலவு மிச்சமானதோடு பணியாளர்கள் வீட்டில் இருந்தபடியே ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் தேவையான வேலையை செய்ய வாய்ப்பு அமைந்ததால் தடை இல்லாமல், உற்பத்தித் திறன் உயர்ந்தது.

பிரபல வழக்கறிஞர் ஒருவர், காலை 11 மணிக்கு டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையிலும், நண்பகல் 12 மணிக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஒரு வழக்கிலும் மாலை 3 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையிலும், லண்டனில் இருக்கும் தனது வீட்டில் இருந்தே இணைய வழியில் வாதாடிய அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.

இந்தப் புதிய மாற்றங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பும் கணிசமாகக் குறைந்துள்ளது. தகுதிபடைத்த பணியாளர்களைத் தேடும் நிறுவனங் களுக்கு உரியவர்களைக் கண்டறிய இந்தக் காலம் புதிய வாய்ய்புக்களை உருவாக்கி உள்ளது. வயதான பெற்றோரை வேலை காரணமாக வீட்டில் தனியே விட்டுச் சென்ற பலருக்கும், இனி வேலை என்றால் பிரிவு என்பது கட்டாயமில்லை. தங்களது வேலை / தொழில் வாய்ப்புகளை விட்டு விலகியிருந்த பெண்களுக்கு வீட்டில் இருந்தே வேலை என்பதால் பல புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்க ஆரம்பித்தன.

இந்தப் புதிய முறையை தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர முடிவெடுத்துள்ளன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2025-ம்ஆண்டில், குறிப்பிட்ட நேரத்தில் தங்களது பணியாளர்களில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே அலுவலகத்தில் இருந்து வேலை செய்வார்கள், மற்றவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனமும் தங்களது பணியாளர்களில் 50 சதவீதத்தினரை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்த திட்டமிட்டுள்ளது. டாய்ஸ் (Deutsche Bank) வங்கி தங்கள் பணியாளர்களில் 40 சதவீதத்தினரை நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை செய்ய வைக்கலாம் என்று ஆலோசித்து வருகிறது.

எனினும், ஆரம்பக் கால கட்டத்தில் பணித்திறன், உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது என்றநிலை மாறி உள்ளது. வீட்டில் இருந்தே வேலைசெய்வதில் உள்ள பிரச்சினைகள் வெளிப்பட்டுள்ளன. படுக்கை அறைகளும், வரவேற்பு அறைகளும் தற்காலிக அலுவலகங்களாக மாறியுள்ள நிலையில், வீட்டின் தனிப்பட்ட சுதந்திரச் சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளன. வேலை செய்ய வசதியான மேசை, நாற்காலிகள் இல்லாமை, சரியான பணிச் சூழல் இல்லாமை ஆகிய காரணங்களால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், உற்பத்தித் திறன், வேலை செய்யும் திறன் பாதிக்கப்படுவதாகவும் பலர் தங்கள் அனுபவங்களைக் கூறியுள்ளனர்.

நேரில் சந்தித்து உரையாடுவது, கலந்தாலோசிப்பது ஆகியவை இல்லாததால் புதிய சிந்தனைகளை யோசிக்கும் திறன், சிக்கலான சவால்களை எதிர்கொண்டு தீர்க்கும் திறமை ஆகியவை பாதித்துள்ளன. தனிப்பட்ட முறையில் யாரையும் சந்திக்காமல் இருப்பது தனிமைக்கு வழிவகுக்கிறது. மனநல ஆரோக்கியம் குன்றுகிறது என சில பிரச்சினைகளும் உருவாகி உள்ளன. இந்த மாற்றத்தால் 2020-ன் முதல் பாதியில், பல முக்கிய நிறுவனங்கள், 60 லட்சம் சதுர அடி அளவிலான வாடகைக்கு எடுத்த அலுவலக இடங்களைக் காலி செய்துள்ளன. அலுவலக இடங்களின் விற்பனையும், வாடகைக்குக் குடிபெயர்வதும் பெரிய அளவில் சரிந்துள்ளது. நகரங்களில் காலியாகும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வாடகைக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வீடுகளின் விற்பனையும் சரிந்துள்ளது.

இணையம் மூலமான ஷாப்பிங் பிரம்மாண்டமான வளர்ச்சி கண்ட அதே நேரத்தில் மால்கள், கடைகளுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல வியாபார நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இந்தச் சூழ்நிலையில், எதிர்காலத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்வதும், அலுவலகத்தில் இருந்து வேலை செய்வதுமாக கலந்து ஒரு (ஹைபிரிட் ஓர்க் பிளேஸ்) முறை உருவாகும்.

இந்த மாற்றங்களால் பொருளாதாரத்தில் ஒன்றோடு ஒன்று சார்ந்திருந்த பல்வேறு பொருளாதாரச் செயல்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டு ஒரு புதிய தொடக்கம் உருவாகும். தேவையைப் பூர்த்தி செய்ய கூடிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களால்தான் திறமையான பணியாளர்களை ஈர்க்கவும், தக்கவைத்துக் கொள்ளவும் முடியும். உற்பத்தித் திறனை அதிகரித்து வெற்றி காணவும் முடியும். புதியமாற்றங்கள், இந்தியாவின் 15 லட்சம் கோடிரூபாய் மதிப்புள்ள தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வர்த்தக வாய்ப்புகளை வளமான எதிர்காலத்தை நம்பிக்கை மிகுந்ததாக மாற்றும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்