ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 374 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் பின்ச் 114 ரன்கள், மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் 69 ரன்கள் எடுத்தனர். ஸ்டீவ் ஸ்மித், அதிரடியாக விளையாடி 66 பந்துகளில், 105 ரன்கள் விளாசி மிரளச் செய்தார்.

375 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 308 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. விரைவு கதியில் விளையாடிய மயங்க் அகர்வால் (22), கேப்டன் விராட் கோலி (21), ஸ்ரேயஸ் ஐயர் (2) ஆகியோர் ஜோஸ் ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 12 ரன்களில் ஆடம் ஸம்பா பந்தில் வெளியேறினார். 104 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் ஷிகர் தவணுடன் இணைந்து ஹர்திக் பாண்டியா அற்புதமாக விளையாடினார். இதனால் அணியின் நம்பிக்கை சற்று அதிகரித்தது.

128 ரன்கள் சேர்த்து அச்சுறுத்தல் கொடுத்த ஜோடியை ஆடம் ஸம்பா வெளியேற்றினார். ஷிகர் தவண் 86 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 74 ரன்களும் ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 90 ரன்களும் விளாசினர்.

ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்த போது இந்திய அணி 39 ஓவர்களில் 247 ரன்கள் சேர்த்திருந்தது. அத்துடன் இந்திய அணியின் நம்பிக்கை தளர்ந்தது. இதைத் தொடர்ந்து ஜடேஜா 25, மொகமது ஷமி 13 ரன்களில் வெளியேறினர். நவ்தீப் ஷைனி 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வானார்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சும், பீல்டிங்கும் மோசமாக அமைந்தது. ஸ்மித், ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல் ஆகியோர் கொடுத்த கேட்ச்களை இந்திய வீரர்கள் கோட்டை விட்டனர். 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை இதே மைதானத்தில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

28 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்