தானாகவே திறந்து மூடும் ஸ்மார்ட் லாக்: பயன்படுத்துவது எப்படி?

By நிஷா

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் வருவது மாதிரி திறந்து விடு சீசே என்று சொன்னவுடன் திறக்கும் இந்த ஸ்மார்ட் பூட்டுகள் நம் வீட்டின் பாதுகாப்பைப் பன்மடங்கு அதிகரிக்கின்றன. காகிதம் இல்லாத பணம் போன்று இப்போது சாவி இல்லாத இந்தப் பூட்டின் உபயோகமும் மிகவும் பரவலாகி வருகிறது.

எவ்வாறு இயங்குகிறது?

ஸ்மார்ட் பூட்டு என்பது ஒரு மின்னணுப் பூட்டு. இது கம்பியில்லா இணைப்பையோ புளுடூத் இணைப்பையோ பயன்படுத்தி மற்ற சாதனங்களுடன் தொடர்பு கொள்கிறது. இது தனக்கென்று செயலியைக் கொண்டிருக்கும். இதை நிறுவும்போது ஸ்மார்ட் ஹப் அல்லது ஸ்மார்ட் கைப்பேசியில் அதற்குரிய செயலியைத் தரவிறக்கம் செய்து இணைக்க வேண்டும். அதன் பின் இது தானாகவே திறந்து மூடும் வண்ணம் இயங்கும்.

இதுவே வீட்டுக்கு முக்கியம்

சொல்லப்போனால் இந்த ஸ்மார்ட் பூட்டுதான் ஸ்மார்ட் வீடுகளில் முக்கியமானது. இது நீங்கள் விரும்பும் நேரத்தில் உங்களை வெறுமனே வீட்டுக்குள் செல்லவும் வெளியேறவும் மட்டும் அனுமதிப்பதில்லை. நீங்கள் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் வருவோர் போவாரைக் கண்காணிக்கும். உங்கள் கைப்பேசி மூலம் இதைத் திறக்கலாம்; மூடலாம்.

தானாகவே இயங்கும்

இது தவிர உங்கள் நண்பர்கள், உறவினர்கள் வந்தால் தானாகவே திறக்கும் வசதியையும் இதில் ஏற்படுத்திக் கொள்ளலாம். மேலும், சில குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் விரும்பும் சில குறிப்பிட்ட மனிதர்களைத் தானாகவே அனுமதிக்கும் வசதியும் இதில் உண்டு. கைப்பேசி மூலம் மட்டும் அல்லாமல் இதைக் குரல் வழியாகவும் இயக்கலாம், சில ஸ்மார்ட் பூட்டுகள் உங்கள் தோற்றத்தை உணர்ந்து இயங்கும் தன்மை கொண்டவை.

இதை ஸ்மார்ட் ஹப் உடன் இணைத்துக்கொண்டால், நீங்கள் கதவைத் திறக்கும்போது, வீட்டினுள் விளக்குகளும் மின்விசிறியும் வெப்பநிலை சீராக்கியும் தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.

இதன் வகைகள்

இதில் உங்கள் தேர்வு எது என்பது உங்களின் தேவைகளையும் பல காரணிகளையும் பொறுத்து உள்ளது. முக்கியமாக அதன் விலையும் ஒரு தவிர்க்க முடியாத காரணி. இந்த இரண்டிலும் உள்ள சாதக, பாதகங்களைத் தெரிந்து வைத்திருந்தால் நம் தேர்வு குறித்துப் பின்னால் வருந்தும் நிலை ஏற்படாது. சில ஸ்மார்ட் பூட்டுகள் வைஃபை, புளுடூத் வசதியைக் கொண்டிருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வைஃபை ஸ்மார்ட் பூட்டு

பொதுவாக வைஃபை ஸ்மார்ட் பூட்டு தன்னகத்தே நிறையச் சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கும். இதை உங்கள் வீட்டு வைஃபை நெட்வொர்க் உடன் இணைக்க முடியும். இதனால் இதைத் தொலைதூரத்திலிருந்தும் இயக்க முடியும். ஆனால், இதை இணையத்துடன் இணைத்திருப்பதால் சில விஷமத்தனமான ஊடுருவல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த இணையம் சார்ந்த பாதுகாப்புக் குறைபாடுகளை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

புளூடூத் ஸ்மார்ட் பூட்டு

புளூடூத் ஸ்மார்ட் பூட்டு மிகவும் பாதுகாப்பானது. ஏனென்றால், இதை நாம் இணையத்துடன் இணைப்பதில்லை. இது குறிப்பிட்ட கைப்பேசிக்கும் ஸ்மார்ட் பூட்டுக்கும் இடையே உள்ள நம்பகமான இணைப்பைக் கொண்டுதான் இயங்கும். புளூடூத் ஸ்மார்ட் பூட்டை வெகு தொலைவிலிருந்து இயக்க முடியாது என்பது ஒரு குறை.

நிறுவுதல்

எல்லா ஸ்மார்ட் பூட்டுகளையும் நிறுவுவது எளிது என்றாலும் சில நிறுவனங்களின் தயாரிப்புகள் மிகவும் எளிதாக இருக்கின்றன. இவை பொதுவாக இரண்டு பாகங்களைக் கொண்டிருக்கும். ஒரு பாகத்தைக் கதவின் முன் புறமும் இன்னொரு பாகத்தைக் கதவின் பின்புறமும் பொருத்த வேண்டும். வெளிப் பகுதி பொதுவாகத் தொடு உணர்ச்சி கொண்ட திரையைக் கொண்டிருக்கும். பின் புறப் பகுதி தாழ்ப்பாளைக் கொண்டதாக இருக்கும். வீட்டின் கதவில் உள்ள பழைய பூட்டை அகற்றிவிட்டு இதைப் பொருத்த வேண்டும்.

சந்தையில் கிடைக்கும் தயாரிப்புகள்

வழக்கமான பூட்டுகளுடன் ஒப்பிடும்போது ஸ்மார்ட் பூட்டுகளுக்கு நிறையத் தயாரிப்புகள் இல்லைதான். ஆனாலும் யாலே, டனாலாக் போன்ற சில நல்ல தயாரிப்புகள் அமேசான் போன்ற இணையச் சந்தையில் கிடைக்கின்றன.

விலை

கண்டிப்பாக இந்த ஸ்மார்ட் பூட்டின் விலை சாதாரணப் பூட்டின் விலையைவிடப் பன்மடங்கு அதிகம்தான். சில ஸ்மார்ட் பூட்டுகள் சந்தையில் ஏழாயிரம் ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. வைஃபை வசதி, குரல் வழிச் சேவை, மின்னஞ்சல் வசதி, அலாரம் வசதி போன்ற சிறப்பியல்புகளைப் பொறுத்து அதன் விலையும் அதிகரிக்கும். இதன் அதிகபட்ச விலை ரூபாய் இருபதாயிரம். இதன் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க இதன் விலையும் வரும் நாட்களில் குறைந்து அனைவரும் உபயோகிக்கும் வண்ணம் மாறலாம்.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்