அடையாளம் இழந்த அஞ்சலகத்தை மீட்டெடுக்க அயராது உழைக்கும் அஞ்சல் அலுவலர்: கணக்குத் தொடங்க வீதி வீதியாகச் சென்று மக்களை ஊக்குவிக்கிறார்

By ர.கிருபாகரன்

பரபரப்பாக இருக்கும் கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தின் கடைக்கோடியில், அடங்கி ஒடுங்கி உருக்குலையும் நிலையில் கிடக்கிறது மத்திய அரசுத்துறை அலுவலகமான அஞ்சலகம். அதை மீட்டெடுத்து மக்கள் நாடி வரும் அலுவலகமாக்க போராடி வருகிறார் அஞ்சலக அலுவலர் ஒருவர்.

சுமார் 40 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இந்த அஞ்சலகம், ஒரு காலத்தில் காந்திபுரத்தின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்பட்டது. இன்றோ பொதுக் கழிப்பிட நாற்றம், மது பிரியர்களின் ஆக்கிரமிப்புகளுக்கு நடுவே அடையாளம் அழிந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளது. அஞ்சலகத்தின் மோசமான நிலையை மாற்ற, புதிதாக பொறுப்பேற்றுள்ள அஞ்சலக அலுவலர் பாலசண்முகம் எடுத்து வரும் முயற்சிகள், மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு இங்கு அஞ்சல் அலுவலராக பொறுப்பேற்றார். முதலில் அஞ்சலகத்தை சீரமைத்தவர், தற்போது அதற்கு அடையாளத்தை உருவாக்கி வருகிறார். காந்திபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தனி ஆளாகச் சென்று அஞ்சலகத்தில் கணக்குத் தொடங்க அழைப்பு விடுக்கிறார். காந்திபுரம் பேருந்து நிலையத்துக்குள்ளேயே பல ஆண்டுகளாக ஓர் அஞ்சலகம் இருக்கிறது என்பதையும் எடுத்துக் கூறி நினைவுபடுத்துகிறார்.

‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்பது போல, தொடர் முயற்சியின் பலனாக ஏராளமானோர் இந்த அஞ்சலகத்தை தேடி வரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஒரு மாத இடைவெளியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு கணக்கு தொடங்கியுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் 3 இலக்கங்களில் முன்வைப்புத்தொகை செலுத்தியுள்ளனர் எனப் பெருமையோடு கூறுகிறார் பாலசண்முகம்.

தினக்கூலிகளின் ஆர்வம்

அவர் கூறும்போது ‘இரண்டு மாதம் முன்பு தலைமை அஞ்சலகத்திலிருந்து பதவி உயர்வு பெற்று இங்கு வந்தேன். பேருந்து நிலையத்தின் கடைசியில் உள்ள கட்டிடம் என்பதால் பலருக்கும் அஞ்சலகம் இருப்பதே தெரியவில்லை. இங்குள்ள கடைகளின் ஊழியர்களும், பயணிகளும் இப்படி ஒரு அஞ்சலகம் இருப்பதே தெரியாது என்றனர். அதன் பிறகுதான் ஏதாவது செய்ய வேண்டுமென தோன்றியது. கோவையில் விரைவு தபால்களை சேகரித்து அனுப்பும் மையமாக இந்த அஞ்சலகம் இருப்பதால் பணி நேரம் மதியம் 1 மணிக்கு தான் தொடங்குகிறது.

காலையில் இருந்து மதியம் வரை பணி இருக்காது. அந்த சமயத்தில் மக்களை சந்திப்பது என முடிவெடுத்தேன். பேருந்து நிலையம், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு நிறுவனமாகச் சென்று அங்குள்ள ஊழியர்களிடம் அஞ்சல் கணக்கு தொடங்க வலியுறுத்துகிறேன். பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள ஊழியர்கள் பெரும்பாலும் தினக்கூலி பெறுபவர்கள். கிடைக்கும் சிறிய வருமானம் செலவாக பல வழிகள் உள்ளன. ரூ.10 கிடைத்தாலும் அதை அஞ்சலக சேமிப்பில் வையுங்கள் எனக் கூறி வருகிறேன். இதனால் பலரும் ஆர்வத்தோடு அஞ்சல் கணக்கை தொடங்குகிறார்கள். நான் இங்கு பணிக்கு சேர்ந்த பிறகு புதிதாக 100-க்கும் மேற்பட்டோர் கணக்கு தொடங்கி, தொடர்ச்சியாக பணம் செலுத்துகிறார்கள்’ என்றார்.

கழிப்பிட துர்நாற்றம்

மெல்ல மெல்ல வளர்ச்சியை நோக்கிச் செல்லும் இந்த அஞ்சலகத்துக்கு உள்ள மற்றொரு பிரச்சினை சுகாதாரம். அஞ்சலகம் அருகே பொதுக்கழிப்பிடம் இருப்பதால், இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூட கடும் துர்நாற்றத்தில் தவிக்கின்றனர். மற்றொருபுறம் குடிமகன்களின் ஆக்கிரமிப்பு. இவ்விரு காரணங்களாலேயே மக்களிடமிருந்து அஞ்சலம் அந்நியப்பட்டு போனதாகவும் கூறப்படுகிறது. அஞ்சலகச் சேவையை விரிவுபடுத்தவும், மக்களிடையே சேமிப்பை ஊக்குவிக்கவும் ஓர் அரசு ஊழியர் மேற்கொள்ளும் பணி பாராட்டத்தக்கது. அதேசமயம் மக்கள் எளிதில் அணுகும் இடமாக அந்த அஞ்சலகத்தை மாற்ற, துறையின் உயர் அதிகாரிகளும் மனது வைக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

கல்வி

38 mins ago

சுற்றுச்சூழல்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்