மருத்துவமனை செல்ல ஜெயலலிதா காரை பயன்படுத்தினார்: கணவர் நடராஜனை பார்த்ததும் கண்கலங்கிய சசிகலா - சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

By செய்திப்பிரிவு

சென்னை பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது கணவர் நடராஜனை பார்த்ததும் சசிகலா கண் கலங்கினார். பின்னர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தனது கணவர் நடராஜன், ஆபத்தான நிலையில் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரைப் பார்க்க பரோலில் நேற்று முன்தினம் சென்னை வந்தார். தி.நகரில் உள்ள தனது அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருக்கும் சசிகலாவை, திவாகரன் மகன் ஜெய்ஆனந்த், இளவரசியின் மகன் விவேக், சசிகலாவின் வழக்கறிஞர் அசோகன் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். அதையடுத்து காலை 11 மணி அளவில் நடராஜன் சிகிச்சை பெற்றுவரும் பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் சசிகலா புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் திவாகரன் மகன் ஜெய்ஆனந்த், இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா, இளைய மகள் ஷகிலா, டிடிவி தினகரன் தம்பி பாஸ்கர், உறவினர் டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோரும் சென்றனர். சசிகலா காரைப் பின்தொடர்ந்து 7 கார்கள் சென்றன. ஜெயலலிதா போலவே, வழியில் கோட்டூர்புரத்தில் உள்ள விநாயகர் கோயிலில் காரை நிறுத்தி காரில் இருந்த படி சசிகலா சாமி கும்பிட்டார்.

மருத்துவமனைக்கு 11.55-க்கு சசிகலா கார் வந்தது. மருத்துவமனையின் முதல் தளத்தில் கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடராஜன் சிகிச்சை பெற்றுவரும் அறைக்கு அருகில் 2005-ம் எண் கொண்ட அறையில் சசிகலா, அவரது உறவினர்கள், எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், நாகராஜன், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ சுப்பிரமணியன் ஆகியோர் காத்திருந்தனர். பகல் 12.15 மணி முதல் 12.30 மணி வரை சசிகலா உறவினர்களுடன் சென்று நடராஜனைப் பார்த்தார். அங்கிருந்து வெளியே வரும்போது சசிகலா கண்கலங்கிய நிலையில் காணப்பட்டார். கணவரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு பிற்பகல் 2 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து காரில் புறப்பட்டு, தி.நகர் வீட்டுக்குச் சென்றார்.

முன்னதாக காலையில் தி.நகர் வீடு முன்பு திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, “சசிகலா வருகையால் தமிழக அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று கூறுபவர்கள், ஏன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்க ஏற்பாடு செய்தனர். தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற அச்சத்திலேயே சசிகலாவுக்கு 5 நாட்கள் மட்டும் பரோல் கொடுத்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் என்ற முறையில் அவரை சந்தித்துப் பேசினோம்” என்றார்.

‘டிரக்யாஸ்டமி’ கருவி பொருத்தம்

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்தும், நுரையீரல் பாதிப்புடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. செயற்கை சுவாசத்துக்காக கடந்த 6-ம் தேதி அவரது கழுத்துப் பகுதியில் ‘டிரக்யாஸ்டமி’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவரை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

விளையாட்டு

57 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்