டாஸ்மாக் மூலமான அமைச்சர்களின் கறுப்புப் பண மாற்றம் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

டாஸ்மாக், மின்வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றின் கணக்கில் பண மதிப்பிழப்பு காலத்தில் பல ஆயிரம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டது குறித்து வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிந்தைய காலத்தில் டாஸ்மாக் நிறுவனம் ரூ.800 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தியது பற்றி விளக்கமளிக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருமானவரித்துறை ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் ஆட்சியாளர்கள் நடத்திய மிகப்பெரிய அளவிலான கறுப்புப் பணப் பரிமாற்றம் அம்பலமாகவிருக்கிறது. அந்த வகையில் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு முதல் ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்பின் எரிபொருள் விற்பனை நிலையங்கள், பேருந்து பயணம், ரயில் முன்பதிவு டிக்கெட் உள்ளிட்ட சில அத்தியாவசியத் தேவைகளை மட்டும் பழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்ளலாம் என விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் அரசு மதுக்கடைகளிலும் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது வாங்கிக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாயின.

ஆனால், பெரும்பாலான கடைகளில், பெரும்பாலான நேரங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலமாக மட்டும் ரூ.800 கோடிக்கும் அதிகமாக பழைய ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை ஆணையிட்டுள்ள நிலையில், ஊழியர்கள் மீது பழி போட்டு இந்த சிக்கலில் இருந்து தப்புவதற்கான முயற்சியில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது.

மதுக்கடைகளில் மது விற்பனைக்காக பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என ஆணையிடப்பட்டிருந்த நிலையில், அதையும் மீறி பழைய நோட்டுகளை வாங்கி வங்கியில் செலுத்தியது ஏன்? என்று விளக்கம் கேட்டு பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. இதையே காரணம் காட்டி வருமானவரித்துறை விசாரணையிலிருந்து தப்பவும் டாஸ்மாக் திட்டமிட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் அமைச்சர்களைக் காப்பாற்ற அப்பாவி பணியாளர்களை பலிகொடுக்க டாஸ்மாக் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதை வருமானவரித்துறை அனுமதிக்கக்கூடாது.

உண்மையில், மதுக்கடைகளில் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தான் வாய்மொழியாக ஆணையிட்டிருந்தனர். ஆனாலும் கூட மது வாங்க வந்தவர்களிடம் இருந்து அதிக எண்ணிக்கையில் பழைய ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை. மாறாக அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பினாமிகள் மூலமாகத் தான் ஒவ்வொரு மதுக்கடையிலும் தினமும் ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை பழைய ரூபாய் நோட்டுகள் கட்டாயமாக மாற்றப்பட்டன. இந்த வழியில் தான் அமைச்சர்களின் ரூ.800 கோடி கறுப்புப் பணம் மிகத் தந்திரமாக வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டது.

டாஸ்மாக் பணியாளர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டாலும் கூட, பணிப் பாதுகாப்புக் கருதி, அவர்கள் உண்மை சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் பண மாற்ற மோசடிக்கு அவர்களையே பலிகடாவாக்கி தப்பிக்க அமைச்சர்கள் முயல்கின்றனர். ஏற்கெனவே, சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி மூலமாக பல கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரின் பினாமி ஒருவர் ரூ.246 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்தி வெள்ளைப் பணமாக மாற்றியிருக்கிறார். அவரை வருமானவரித்துறையினர் வளைத்து அவர் செலுத்தியத் தொகையில் 45 விழுக்காட்டை வரியாக வசூலித்துள்ளனர். தமிழக ஆட்சி நிர்வாகத்தின் உயர் பதவியில் இருப்பவர், அவருக்கு ஆதரவாக செயல்படும் சில அமைச்சர்கள் அடங்கிய கூட்டணி தான் கடந்த காலங்களில் ஊழல் மூலம் குவித்த பணத்தை அரசு அமைப்புகளின் மூலம் வெள்ளைப் பணமாக மாற்றியுள்ளனர்.

தமிழ்நாடு மின்வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றின் மூலமாகவும் பல கோடி மதிப்புள்ள பழைய பணம் மாற்றப்பட்டிருக்கிறது. மின் கட்டண அலுவலகங்களில் ரூ.5000 வரை மட்டுமே பணமாக வாங்கப்படுகிறது. பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.3 முதல் அதிகபட்சமாக ரூ.500 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த இரு பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் வங்கிகளில் செலுத்தப்பட்ட பணத்தில் பெரும்பாலானவை ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் கட்டுகள் ஆகும். பேருந்து பயணச் சீட்டு வாங்குவதற்காக ரூ.1 லட்சத்தை யாரும் வழங்க வாய்ப்புகள் இல்லை. அமைச்சர்களின் கறுப்புப் பணம் தான் இப்படியெல்லாம் மாற்றப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட காலத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேரத்தில், கறுப்புப் பணத்தை மாற்றுவதைத் தான் அமைச்சர்கள் தங்களின் முதன்மைப் பணியாகக் கொண்டிருந்தனர். வாக்களித்த மக்களுக்கும், பதவி வழங்கிய ஜெயலலிதாவுக்கும் இவர்கள் எந்த அளவுக்கு விசுவாசமாக இருந்தனர் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும். இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு மாநில அமைச்சர்களே காரணமாக இருப்பதை அனுமதிக்கக் கூடாது. எனவே, டாஸ்மாக், மின்வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றின் கணக்கில் பண மதிப்பிழப்பு காலத்தில் பல ஆயிரம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டது குறித்து வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்த வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

35 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்