கள்ளச் சாராய உயிரிழப்பு 18 ஆக அதிகரிப்பு: உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் / மதுராந்தகம்: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். இதுதொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி அமரன் என்பவரிடம் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, ஜிப்மர், புதுச்சேரி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 13 பேர்உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கத்தில் கள்ளச்சாராயம் வாங்கி அருந்தியதில், ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளச்சாராயம் விற்றதாக அமாவாசை, சந்துரு, வேலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பனையூர் ராஜேஷை போலீஸார் தேடி வருகின்றனர். 135 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், முண்டியம்பாக்கம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து, நலம் விசாரித்தார்.

இதற்கிடையே, முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது:

கள்ளச்சாராய வியாபாரிகள் மெத்தனால் எரிசாராயத்தை கலந்ததால் இந்த துயர சம்பவம் நடந்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 2 சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மூலம் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதை தடுக்கும் வகையில், இந்த 2 சம்பவங்கள் குறித்த விசாரணையும் சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது.

கள்ளச்சாராயம் விற்றவர்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதை கண்காணிக்க தவறியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு, தா.மோ.அன்பரசன், செஞ்சி மஸ்தான், உள்துறை செயலர் அமுதா,விழுப்புரம் ஆட்சியர் பழனி, டிஜிபி சைலேந்திரபாபு, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், விழுப்புரம் டிஐஜி பகலவன் உடன் இருந்தனர்.

‘கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் என மக்களை கேட்டுக் கொள்கிறேன். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்’ என்று வலைதளப் பதிவில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம்

மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவழகன், விழுப்புரம் மதுவிலக்கு ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா, உதவி ஆய்வாளர்கள் தீபன், சிவகுருநாதன், மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகிய 7 பேர் நேற்று முன்தினம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி. ஸ்ரீநாதா, விழுப்புரம், செங்கல்பட்டு மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பிக்கள் பழனி, துரைபாண்டி நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மரக்காணம் தெற்கு விஏஓ சதாசிவம், கிராம உதவியாளர் முத்து ஆகியோரை திண்டிவனம் சார்-ஆட்சியர் கட்டா ரவி தேஜா இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

வாழ்வியல்

12 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

39 mins ago

ஓடிடி களம்

56 mins ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்