நீட் தேர்வு கல்விப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

By செய்திப்பிரிவு

நீட் தேர்வு கல்விப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூக ஊடகங்களில் நீட் தேர்வை அரக்கன், அசுரன்போல சித்தரிக்கின்றனர். நீட் தேர்வுக்கு ஆதரவானவர்களை கொஞ்சமும் நாகரிகம் இன்றி ஆபாசமான வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர். எனது முகநூல் பக்கம், இத்தகைய கீழ்த்தரமான கருத்துப் பதிவு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. ஆனால், நான் எதற்கும் கவலைப்படவில்லை.

நீட் தேர்வு குறித்து தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள் என்பதை எந்த சபையிலும் உரக்கச் சொல்வேன். அப்படித் தான் ‘தி இந்து’வில் வெளியான கட்டுரைக்கும் பதிலளிக்க விரும்புகிறேன். அந்தக் கட்டுரையை எழுதியவர் பல கோடிக்கு நடித்துக் கொண்டிருக்கும்போது நாங்கள் எல்லாம் தெருக்கோடியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அவர் மாணவர்களுக்கு உதவியதை வைத்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளை பதிய வைக்க முயற்சிக்கின்றனர். நீட் தேர்வு என்பது அனிதாக்களை இழப்பதற்கு அல்ல, உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்டது. அனிதாவை கொன்றது நீட் அல்ல. நீட் அரசியல். பணத்தின் மீது நடந்த அரசியல் இன்று பிணத்தின் மீது நடக்க ஆரம்பித்திருக்கிறது.

நாமக்கல், ராசிபுரத்தில் பல லட்சம் கொட்டிப் படித்து அதிக மதிப்பெண்களை வாங்கியவர்களால் எத்தனை கிராமப்புற, ஏழை மாணவர்களின் வாய்ப்பு கள் தட்டிப் பறிக்கப்பட்டன என்பது தெரியுமா? தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல லட்சம், கோடி கொடுத்து வாங்கப்பட்ட இடங்கள் எல்லாம் ஏழை மாணவர்களுக்கு மறுக்கப்பட்ட இடங்கள் என்பது தெரியுமா? நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டு 957 பேர் எம்பிபிஎஸ் சேர்ந்தனர். ஆனால், இந்த ஆண்டு இது 109 ஆக குறைந்துள்ளது. பல லட்சம் கொடுத்து படித்து கிராமப்புற மாணவர்கள் என்ற பெயரில் வாங்கப்பட்ட இடங்கள் தற்போது உண்மையிலேயே கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு சென்றுள்ளது. இதற்கு நீட் தானே காரணம்?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிகள் கொடுத்துதான் இடம்பெறும் நிலை இருந்தது. இனி இந்தக் கல்லூரிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் சேர முடியும். அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைதான் வாங்க முடியும். இதன் மூலம் நீட் கல்விப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் மகளாக இருந்தாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் இடம். இந்த நிலை முன்பு இல்லை.

கல்வியைப் பற்றியும், ஏழை மாணவியும் பற்றியும் கட்டுரையாளர் பேசுகிறார். தமிழகத்தில் புற்றீசல்போல பெருகிய பொறியியல் கல்லூரிகள் பற்றியும், அவர்கள் அடித்து வந்த கல்விக் கொள்ளை பற்றியும் இதுவரை கண்டும் காணாமல் இருந்தது ஏன்? தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை சேர்ந்தவர்கள் பணக்காரர்கள் மட்டுமே. இனி ஏழைகளும் சேர முடியும். இதுதான் நீட் தேர்வின் சாதனை. அனிதா போன்ற மாணவிகள் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லும் நிலையில்தான் தமிழக அரசுப் பள்ளிகளின் நிலை உள்ளது.

தமிழில் அகில இந்திய நுழை வுத் தேர்வு எழுதும் வாய்ப்பை நீட் தந்தது. நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் உயிரியல் சமச்சீர் கல்வி புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. இப்போது வாய்ப்பு கிடைக்காதவர்கள் மீண் டும் 2 முறை நீட் தேர்வு எழுதி வாய்ப்பு பெற முடியும். இதற்கு முன்பு இந்த வசதி இல்லை. எவ்வளவு பேர் எதிர்த்தாலும் உறுதியாகச் சொல்வேன். நீட் ஒரு கல்விப் புரட்சி.

அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் எம்பிபிஎஸ் படிப் பில் சேர்ந்துள்ளனர். தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் அரியலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்தபோது 4 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் இடம் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வால் 21 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 25-ல் கடந்த ஆண்டைவிட பல மடங்கு மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது. தனியார் கல்லூரிகளில் நன்கொடை இல்லாமல் எம்பிபிஎஸ் சேர முடிந்துள்ளது. இதற்கெல் லாம் நீட் தேர்வே காரணம். போராட்டத்தை தூண்டிவிட்டு குளிர்காயும் கட்சிகளின் மனசாட்சியை இந்தப் புள்ளிவிவரங்கள் உலுக்கட்டும். இந்த உண்மையை உணர்ந்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

46 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்