கோவை - மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 9 பேருந்துகளுக்கு அபராதம்

By க.சக்திவேல்

கோவை: கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பல ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், உதகைக்கு அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதனால், நகருக்குள் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சாய்பாபா கோவில் அருகே, புதிய பேருந்து நிலையம் 2010-ம் ஆண்டு கட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து, “புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றால், பயண தூரம் குறைவதால், புதிய ஸ்டேஜ் உருவாக்கி, அதற்கேற்ப கட்டணத்தை குறைக்க வேண்டும்” என முந்தைய மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். ஆனால், அந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் மாநில போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (எஸ்டிஏடி) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், பேருந்துகளில் கட்டண குறைப்பு அமல்படுத்தப்படுவதை போக்குவரத்து துறையினர் உறுதி செய்யாமல் இருந்து வந்தனர்.

இதனால், தினந்தோறும் மேட்டுப்பாளையம் வழித்தடத்தில், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிப்போர் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர். இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது.

இந்நிலையில், காந்திபுரம் - மேட்டுப் பாளையம் வழித் தடத்தில் இயங்கும் அரசு, தனியார் பேருந்துகளில் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இது தொடர்பாக கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஓ) சிவ குருநாதன் கூறும்போது, “2018-ல் திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தின்படி கட்டணம் குறைக்கப்பட்டு வசூலிக்கப் படுகிறதா என சோதனை செய்தோம்.

அப்போது, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் பயணிக்க ரூ.20 பெறுவதற்கு பதில், ரூ.22 வசூலித்த இரண்டு அரசுப் பேருந்துகள், காந்திபுரம் - மேட்டுப்பாளையம் இடையே ரூ.23 பெறுவதற்கு பதில் ரூ.25 வசூலித்த 2 தனியார், 4 அரசுப் பேருந்துகள், ரூ.23-க்கு பதில் ரூ.30 வசூலித்த ஒரு அரசுப் பேருந்து என மொத்தம் 9 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கு அனுமதி வழங்கிய சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு தணிக்கை அறிக்கை அனுப்பப்படும். அவர்கள் அபராதம் விதிப்பர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்