உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைப்பதற்கான அதிமுக சூழ்ச்சியை முறியடிக்கவே கேவியட் மனு தாக்கல்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தகவல்

By எம்.சரவணன்

உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க நினைக்கும் அதிமுக அரசின் சூழ்ச்சியை முறியடிக்கவே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் நேற்று அளித்த சிறப்புப் பேட்டி:

உச்ச நீதிமன்றத்தில் திடீரென கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், செப்டம்பர் 18-ம் தேதிக்குள் அறிவிக்கை வெளியிட்டு, நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்தாமல் தேர்தலைத் தள்ளிவைக்க நினைக்கும் அதிமுக அரசின் சூழ்ச்சியை முறியடிக்கவே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம்.

கேவியட் மனு மூலம் என்ன செய்ய இயலும்?

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அப்படி மேல்முறையீடு செய்யும்போது, திமுகவின் வாதங்களையும் கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்று கோரிதான் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம். திமுகவின் வாதங்களை முன்வைத்தால், உயர் நீதிமன்ற உத்தரவைத்தான் உச்ச நீதிமன்றம் ஏற்கும்.

உச்ச நீதிமன்றத்தில் திமுக எத்தகைய வாதங்களை முன்வைக்கும்?

கடந்த 2015 செப்டம்பர் 25-ம் தேதி உள்ளாட்சித் தேர்தலை அறிவித்து 26-ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தலை எதிர்கொள்ள மற்ற கட்சிகளுக்கு சில நாட்கள்கூட அவகாசம் தரப்படவில்லை. இதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில், 2016 டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்காமல், தேர்தலை தாமதப்படுத்த உயர் நீதிமன்ற அமர்வில் அரசு மேல்முறையீடு செய்தது. அதையும் நிராகரித்த நீதிமன்றம் மே 14-ம் தேதிக்குள் தேர்தலை நடத்துமாறு தீர்ப்பளித்தது. ஆனாலும் ‘உள்ளாட்சி தொகுதி மறுசீரமைப்பு ஆணையம்’ என ஒன்றைக் கொண்டுவந்து மேலும் தாமதம் செய்தது. இந்நிலையில்தான் நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக வைத்த வாதங்கள் மூலம் நியாயம் கிடைத்துள்ளது. இதையே உச்ச நீதிமன்றத்திலும் வைப்போம்.

தற்போதைய சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் என்ன நடக்கும்?

அதிமுக உள்கட்சி பிரச்சினை, கட்சி பெயர், இரட்டை இலை சின்னம் முடக்கம் போன்றவை காரணமாக முதல்வர் பழனிசாமி அரசு மீது தமிழக மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். எனவே, எப்போது, எந்த தேர்தல் நடந்தாலும் திமுக அமோக வெற்றிபெறும். இது தெரிந்துதான், தேர்தலை தள்ளிவைக்க அதிமுகவினர் சூழ்ச்சி செய்கின்றனர்.

அதிமுக, பாஜக, பாமக அல்லாத கட்சிகள் திமுக தலைமையில் அணி திரண்டுள்ளன. இது தேர்தல் கூட்டணியாக மாறுமா?

தேர்தல் கூட்டணி தொடர்பாக நான் கூற முடியாது. அதை கட்சித் தலைமை முடிவு செய்யும். இனி வரும் தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

13 mins ago

வணிகம்

30 mins ago

சினிமா

52 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்