“1.11 கோடி பெண்களின் உரிமைத் தொகையை மறுப்பது நியாயமல்ல” - ராமதாஸ் | தமிழ்நாடு பட்ஜெட் 2023 கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: வேலை வாய்ப்பு மற்றும் நீர்ப் பாசனத் திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் தமிழக பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2023 - 24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள ரூ.1000 மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவு விரிவாக்கத் திட்டம், வளமிகு வட்டாரங்கள் திட்டம் ஆகியவை வரவேற்கத்தக்கவை. அதே நேரத்தில் முதன்மைத் தேவைகளான வேலை வாய்ப்பு மற்றும் நீர்ப் பாசனத் திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாதது கடும் எதிர்ப்புகளுக்கு ஆளான நிலையில், இப்போது அந்தத் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது. ஆனால், தகுதியுடைய பெண்களுக்கு மட்டும்தான் இந்த உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், தங்களுக்கு இந்த நிதி கிடைக்காதோ என்ற ஐயம் பல பெண்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

குடும்பத் தலைவிகள் உரிமைத் தொகை திட்டத்திற்காக ரூ.7000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் 7 மாதங்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்பதால், மாதம் ரூ.1000 கோடி செலவு செய்யப்படும். அதன்படி ஒரு கோடி பெண்களுக்கு மட்டும் தான் இந்தத் திட்டத்தின் பயன் கிடைக்கும். தமிழகத்தில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 2.11 கோடி ஆகும். அதில் 1.11 கோடி குடும்பங்களின் தலைவிகளுக்கு உரிமைத் தொகையை மறுப்பது நியாயமல்ல.

தமிழகத்தின் சிறப்புகளில் ஒன்று அனைவருக்கும் குடிமைப் பொருட்களை வழங்கும் மாநிலம் என்பதாகும். அந்த அடிப்படையில் உரிமைத் தொகையும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 1543 பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம் 30,122 தொடக்கப் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்படும், ஒரு லட்சம் பேருக்கு கூடுதலாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படும், சென்னையில் அடையாறு மறுசீரமைப்புத் திட்டம் ரூ.1500 கோடியிலும், தீவுத்திடல் சதுக்கம் திட்டம் ரூ.50 கோடியிலும் செயல்படுத்தப்படும், பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் புத்தொழில் திட்டம் (Women Start-Up) தொடங்கப்படும், 54 பல்தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ.2,783 கோடி செலவில் திறன்மிகு நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களும் வரவேற்கத்தக்கவை.

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வளமிகு வட்டாரங்கள் திட்டம் பாமக நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் திட்டம் ஆகும். தமிழகத்தில் பெரும்பான்மையான வட மாவட்டங்கள், மலைப் பகுதிகள், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் பல கூறுகளில் பின் தங்கியிருப்பதால், அவற்றை பின் தங்கிய பகுதிகளாக அறிவிக்க வேண்டும்; அவற்றின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 371 கே என்ற புதிய பிரிவை சேர்க்க வேண்டும் என்று பாமக கருத்துரு அளித்திருந்தது. ஆனால், தமிழக அரசு 50 பின்தங்கிய வட்டங்களை கண்டறிந்து அவற்றில் தலா ரூ.5 கோடி செலவில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இவ்வளவு குறைவான நிதியைக் கொண்டு எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியாது. எனவே, இதை ஒரு நல்லத் தொடக்கமாக வைத்துக் கொண்டு தமிழகத்தின் பின் தங்கிய பகுதிகள் முன்னேற்றத்திற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 371 கே என்ற புதிய பிரிவை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழிப்போர் ஈகியர்கள் தாலமுத்து நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்குதல், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உயர் கல்வியில் இட இதுக்கீடு வழங்குதல், தமிழை பள்ளியிறுதி வரை கட்டாயப் பாடமாக்குதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

2030ம் ஆண்டுக்குள் ரூ.77 ஆயிரம் கோடியில் 14,500 மெகா வாட் நீரேற்று மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, அதற்கு அருகிலுள்ள அரியலூர் மாவட்டத்திற்கான சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது வருத்தமளிக்கிறது. நிதிநிலை அறிக்கையில் எந்தவொரு பாசனத் திட்டமுமே அறிவிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிற்து.

தமிழகத்தில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான எந்தத் திட்டமும் இல்லை. தமிழகத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்குவது குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம் பெறாதது அவர்களை கவலையடையச் செய்துள்ளது. தமிழக அரசு நடப்பாண்டில் ரூ.1,43,197 கோடி மொத்தக் கடன் வாங்க முடிவு செய்திருக்கிறது. அதையும் சேர்த்தால், தமிழகத்தின் மொத்தக்கடன் ரூ.7,26,028 கோடியாக உயரும். அதாவது ஒவ்வொருவர் பெயரிலும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் கடன் இருக்கும்.

பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் இது ஒன்றரை லட்சம் ரூபாயாக அதிகரிக்கும். 2023-24ம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1,81,182.22 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் ரூ.50,000 கோடி மது வணிகத்தின் மூலமாக கிடைக்கும் என்பது தமிழகத்தின் வலுவற்ற பொருளாதார கட்டமைப்பையே காட்டுகிறது. இத்தகைய குறைகளை களைந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அதிக எண்ணிக்கையில் செயல்படுத்தவும், நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 mins ago

தமிழகம்

44 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்