முதல்முறையாக வன தியாகிகள் தினம் அனுசரிப்பு: தமிழகத்தில் 2501 ச.கி.மீ. வனப்பரப்பு அதிகரிப்பு - முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தகவல்

By செய்திப்பிரிவு

மத்திய, மாநில வனத்துறைகளின் இணைந்த செயல்பாட்டால் தமிழகத்தில் 2501 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு அதிகரித்துள்ளதாக தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் எச்.பசுவராஜ் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் ஆண்டுதோறும் செப்.11-ம் தேதி வனத்தைப் பாதுகாக்க உயிர் நீத்த வனத்துறை ஊழியர்களை நினைவுகூரும் வகையில் வனத் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக நேற்று கோவையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் வனத்துறைக்கு சிம்மசொப்பனமாக இருந்த வீரப்பன் குழுவால் கொல்லப்பட்ட, வனவிலங்குகள் மோதலில் உயிரிழந்த, கடத்தல் கும்பல்களால் கொல்லப்பட்ட 27 தியாகிகளை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவையில் உள்ள தமிழக வன உயர் பயிற்சியக வளாகத்தில் அமைக்கப்பட்ட தியாகிகள் நினைவுச் சின்னத்துக்கு வனத்துறையினரும், தியாகிகளின் குடும்பத்தினரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், வனத்துறை தலைவருமான எச்.பசுவராஜ் பேசியதாவது: 161 ஆண்டு பாரம்பரியம் மிக்க வனத்துறை முன்பைவிட தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசிய வனத்துறையுடன், தமிழக வனத்துறை இணைந்து செயல்படுவதன் பலனாக தமிழகத்தில் 2501 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு அதிகரித்துள்ளது. இதற்கு அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஊழியர்களும், அவர்களது குடும்பங்களுமே காரணம். தமிழக வனத்தைக் காக்க, வனத்துறை ஊழியர்கள் பலர் தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து கடமையாற்றி உள்ளனர். அதனாலேயே ஏராளமான குற்றங்கள் தடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். வனமும் நல்ல சூழலில் உள்ளது. வனத்துறைக்காக உயிர் நீத்த பலரது பிள்ளைகளும் வனத்துறைக்கு சேவையாற்ற வந்து கொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம். நாட்டின் முக்கியமான துறையான வனத்துறை இதுபோன்ற தியாகிகளால் பெருமை கொள்கிறது என்றார்.

நிகழ்ச்சியில் 27 வன தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டும், அவர்களது குடும்பத்தினரும் கவுரவிக்கப்பட்டனர். இதில் தமிழக வன உயர் பயிற்சியக (கோவை) இயக்குநர் யோகேஷ் திவேதி, இணை இயக்குநர் கெளஷல், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கணேசன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர் அன்வர்தீன், திருச்சி மண்டல வனப் பாதுகாவலர் திருநாவுக்கரசு, கோவை மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், கோவை கோட்ட வன அலுவலர் சதீஷ்குமார், வனச்சரகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் நிகழ்வு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1730-ல் வனத்தைப் பாதுகாக்கப் போராடிய 360-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் நினைவாக ஆண்டுதோறும் செப்.11-ம் தேதி வன தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் வனத்தை பாதுகாக்க உயிர் நீத்த தியாகிகள் நினைவுகூரப்படுகின்றனர். தமிழகத்தில் இதுபோல ஏராளமான வனத்துறை ஊழியர்கள் உயிரிழந்திருந்தாலும், தியாகிகள் தினம் அனுசரிக்கப்படவில்லை. இந்நிலையில், வனத்துறை ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலித்து கடந்த ஆண்டு இறுதியில் இதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு (நேற்று) தமிழகத்தில் வன தியாகிகள் தினம் முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வனத்தை, வனவிலங்குகளைக் காக்க இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது உயிரை நீத்துள்ளனர். ஆனாலும் அவர்களது முழு விவரங்களை தொகுக்க முடியாத சூழல் உள்ளது. கோவையில் நடந்த வன தியாகிகள் தின நிகழ்ச்சிக்கு 27 தியாகிகளின் குடும்பங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 18 குடும்பங்கள் மட்டுமே பங்கேற்றன. வரும் ஆண்டுகளிலாவது பணியின்போது உயிர்நீத்த தியாகிகளின் தகவல்களை தொகுத்து, அனைவரின் குடும்பங்களையும் அழைத்து கவுரவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்