குடும்பச் சொத்தில் பழங்குடியின பெண்களுக்கு சம பங்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பழங்குடியின பெண்களும் குடும்பச் சொத்தில் சம பங்கு பெறும் உரிமையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உரிய அறிவிப்பாணை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்பச் சொத்தில் தங்களுக்கும் சம பங்கு வழங்கக் கோரி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவியும், மகளும் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்து வாரிசுரிமை சட்டப்படி, ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு பெற உரிமையுள்ளதாக கூறி, இரு பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராமசாமியின் மகன்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் பழங்குடியின பெண்கள் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த சட்டத்தின் கீழ், சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது" என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, "பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க மறுக்கும் வகையில் எந்த மரபும், நடைமுறையும் நிரூபிக்கப்படவில்லை. இந்து வாரிசுரிமை சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்க வேண்டும் என சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், நடைமுறை, மரபு பின்பற்றப்படாத நிலையில் பழங்குடியின பெண்களுக்கு குடும்ப சொத்தில் பங்கு கிடைக்கும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும், பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சம பங்கு பெறும் உரிமை மறுக்கப்படுவது வருத்தத்துக்குரியது என வேதனை தெரிவித்தார்.

மேலும், குடும்ப சொத்தில், பழங்குடியின பெண்கள் சமபங்கு பெறும் வகையில் மத்திய அரசு மூலம் அறிவிப்பு வெளியிடச் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

7 mins ago

உலகம்

11 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

28 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்