மதிப்பிற்குரிய மாரியப்பன்..27 பெண் பிள்ளைகளின் வளர்ப்புத் தந்தை!

By கரு.முத்து

மா

ற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவின் மானம் காத்தார் சேலம் மாரியப்பன். அதுபோல, கடலூரில் ஒரு மாரியப்பன் கால்பந்து வீராங்கனைகளை உலகத் தரத்துக்கு தயார்படுத்தி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறார்.

மாரியப்பன் தமிழக அணிக்கோ, இந்திய அணிக்கோ பயிற்சியாளர் இல்லை. ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குநர். எனினும், தனது தனிப்பட்ட முயற்சியால் இந்திய அணியில் இடம்பிடிக்கும் அளவுக்கு திறமையான கால்பந்து வீராங்கனைகளை உருவாக்கி சாதித்துக் கொண்டிருக்கிறார் இந்த 63 வயது இளைஞர்.

27 பெண் பிள்ளைகள்

கடலூர் வண்ணாரப்பாளையத்தில் இருக்கிறது மாரியப்பனின் வீடு. இங்கு இவரது மனைவியும் பெற்ற பிள்ளைகளும் இருக்கிறார்கள். இதுபோல இன்னொரு வீடும் இருக்கிறது மாரியப்பனுக்கு. அது இவரது வளர்ப்பு மகள்களுக்கான வீடு. அந்த வீட்டிலிருக்கும் 27 பெண் பிள்ளைகளுக்கும் மாரியப்பன்தான் வளர்ப்புத் தந்தை! இவர்கள் அத்தனை பேருமே சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்தவர்கள். இவர்களை அங்கிருந்து அழைத்து வந்து, அரவணைத்து வளர்ப்பதுடன் இந்தியாவின் தலைசிறந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளாகவும் வார்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார் இந்த அன்புத் தந்தை.

இங்குள்ள இந்துமதி, சுனிதா, வினிதா ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றவர்கள். அந்தப் போட்டியில் நாம் தங்கப்பதக்கம் பெற காரணமாக இருந்தவர்களும் இவர்களே. இப்படி, மாரியப்பனிடம் பயிற்சிபெற்ற 11 பேர் இதுவரை இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

விளையாட்டில் மட்டுமல்ல..

வடகொரியாவில் நடந்த ஆசிய கோப்பை போட்டியிலும் இவரது பிள்ளைகள் இந்தியாவுக்காக விளையாடினார்கள். தேன்மொழி, வினிதா என்ற இரு பிள்ளைகள் ஜப்பானில் நடந்த போட்டிகளில் விளையாடியவர்கள். தமிழகத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டிகளில் இவரது பிள்ளைகள் இடம்பெற்ற அணிதான் நான்குமுறை பரிசு வென்றது. அகில இந்திய அளவில் நான்கு முறையும், தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் ஐந்து முறையும், மாரியப்பனிடம் பயிற்சிபெற்ற வீராங்கனைகள் இடம்பெற்ற அணியே வெற்றிக் கோப்பையைத் தட்டியது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய பெண்கள் கால்பந்தாட்டத் தொடரிலும் இவர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள்.

விளையாட்டில் மட்டுமல்ல, மாரியப்பனின் வளர்ப்புப் மகள்களில் வினிதா, இந்துமதி, சரண்யா, தேன்மொழி, பத்மாவதி ஆகியோர் விளையாட்டு வீரருக்கான ஒதுக் கீட்டில் காவல் உதவி ஆய்வாளர்களாகவும் தேர்வாகி இருக்கிறார்கள். அடுத்து, ரம்யாவும், அஞ்சலாட்சியும் காவலர் பணிக்காக தேர்வாகியிருக்கிறார்கள்.

‘இந்திராகாந்தி அகாடமி ஃபார் ஸ்போர்ட்ஸ் அண்ட் எஜுகேஷன்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இந்த வளர்ப்புப் பிள்ளைகளை வளர்த்து வருகிறார் மாரியப்பன். நேரில் சென்று பார்த்தபோது அவரது சேவை நம்மை பிரம்மிக்க வைத்தது. எந்த கர்வமும் இல்லாமல் நம்மிடம் இயல்பாய் பேசினார் மாரியப்பன்.

உடற்கல்வி ஆசிரியர்

“கடலூர் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராய் இருந்தபோது பசங்களுக்கு கால்பந்து விளையாட்டுப் பயிற்சிகளைக் கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு பெண் பிள்ளைங்க சிலர், ‘எங்களுக்கும் கத்துக்கொடுங்க’ன்னு வந்தாங்க. ஆர்வமா கேட்டதால அவங்களுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். பசங்கள விட பெண் பிள்ளைகள் நாம் சொல்றத சட்டுனு புரிஞ்சுக்கிட்டு விளையாடினாங்க. அதனால 2003-ல், இனி பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறதுன்னு முடிவெடுத்தேன்.

ஆனா, விளையாட்டுல ஆர்வமா இருந்த பெண் பிள்ளைகள் எல்லாருமே ஏழைப்பட்ட பிள்ளைங்களா இருந்தாங்க. சிலபேருக்கு பெற்றோர் இல்லை. இதுக்கிடையில, சுனாமி வந்தப்ப அந்தக் குழந்தைகளில் பலபேர் பெற்றார் உற்றாரை இழந்து ஆதரவற்றவர்களாகிட்டாங்க. அதனால, அவங்கள்ல பலபேரு அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்துல சேர்க்கப்பட்டாங்க. தங்களது எதிர்காலம் என்னாகுமோ எனக் கலங்கிப் போய் நின்ற அந்தக் குழந்தைகளில் பலபேர் அப்புறமும் ஆர்வமா கால்பந்து விளையாட வந்தாங்க. நான் வேற பள்ளிக்கு மாற்றலாகி போனாலும் அவங்களும் அங்க மாற்றலாகி வந்து படிச்சு, பயிற்சியும் எடுத்தாங்க.

தத்து எடுத்துட்டேன்

ஆதரவற்ற குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை மட்டும்தான் காப்பகத்துல தங்கமுடியும்; அதுக்கு மேல அவங்க வெளியே போயிடணும். அப்படியொரு சூழல் இந்தப் பிள்ளைகளுக்கு வந்தப்ப இவங்கள ஏத்துக்க தூரத்துச் சொந்தக்காரங்க யோசிச்சாங்க. பாவம், இந்தப் பிள்ளைங்க எங்க போவாங்க? அதனால, நானே இவங்கள தத்து எடுத்துட்டேன். அப்படி நான் ஏத்துக்கிட்ட 27 பெண் குழந்தைகள் இப்ப என்னோட வீட்டுல இருக்காங்க. இவங்கள்ல பலபேர் பள்ளிப் படிப்பை முடிச்சு, இப்ப கல்லூரியில படிக்கிறாங்க. 16 பேர் முதுகலை படிக்கிறாங்க. சுமத்ராவும், பிரதிபாவும் பி.ஹெச்.டி-க்கு தயாராகிட்டாங்க” என்று மாரியப்பன் சொல்லச் சொல்ல நெகிழ்ந்து போனோம்.

தொடர்ந்து, இத்தனை பேரை வளர்த்து ஆளாக்க செலவுக்கு என்ன செய்வார்? என்று நமக்குள் எழுந்த கேள்விக்கும் அவரே பதில் சொன்னார். ”எனது ஓய்வு கால பணப் பயன் 47 லட்ச ரூபாயையும் இவங்களுக்காகவே செலவு செஞ்சிருக்கேன். இவங்களுக்கான உணவு, உடை, பயிற்சி சாதனங்கள் என மாசம் ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் செலவு பிடிக்கும். ஓய்வூதியத்துடன் நண்பர்கள் சிலரது உதவியாலும் இதைச் சமாளிக்க முடியுது.

பலரின் ஒத்துழைப்புடன்..

அத்துடன், கடலூரில் இருக்கும் இன்னும் சில நல்ல உள்ளங்களும் உதவுறாங்க. உதாரணமா, முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர் சீனுவாசன் தினமும் இவங்களுக்கான முட்டையையும் இரவு அசைவ உணவையும் தந்துட்டு வர்றார். சென்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அருட் தந்தை ரட்சகன் இந்த மாணவிகளை கல்லூரியில் இலவசமாக படிக்க அனுமதித்தார். தற்போதைய முதல்வர் அருட்தந்தை பீட்டர் ராஜேந்திரனும் தொடர்ந்து இவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.

என் மனைவி நர்ஸாக இருப்பதால் இந்தக் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி கள் தேவைப்படும் போது அவர் வேலை செய்யும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்வார். இவர்களுக்கு துணை தேவைப்படும் போது எனது மருமகள்கள் யாராவது உடனிருந்து உதவுவார்கள். இப்படி பலரின் ஒத்துழைப்பாலும் எனது வளர்ப்பு மகள்களை வளர்த்து வருகிறேன்” என்றார் மாரியப்பன்.

மாநில, தேசிய விளையாட்டு ஆணையங்கள் தங்கத் தட்டில் வைத்து தாங்கிப் பிடிக்க வேண்டிய மனிதர் மாரியப்பன். ஆனால், இவருக்கோ, இவர் பயிற்சி அளிப்பதற்கோ, இந்த வீராங்கனைகளுக்கோ அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த அனுசரணையும் இல்லை என்பதையும் ஆதங்கத்துடன் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்