முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்த கீழடி அருங்காட்சியம்: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (5.3.2023) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரபூர்வமான முடிவுகளைப் பெற்றுள்ளது. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததை உறுதிப்படுத்தியது. மேலும், கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தியுள்ளது.

கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பதை வெளிப்படுகிறது.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள் மற்றும் மற்றும் கண்டுபிடிப்புகளின் வாயிலாக வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகமானது வேளாண்மை மூலம் பொருளாதாரத்தினை உயர்த்திக் கொண்டனர், மட்கலன்கள், இரும்பு, நெசவு, மணிகள், சங்கு வளையல்கள் ஆகிய தொழில்களை மேற்கொண்டிருந்தனர் என்பதும் அகழாய்வுச் சான்றுகள் மூலம் அறிகிறோம்.

மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் பகுதிகளில் கிடைக்கப்பெறுகின்ற மூலக்கற்களைக் கொண்டு சூதுபவள மணிகள், அகேட் போன்ற கல்மணிகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பைக் காட்டுகின்றன. அதுபோல, கங்கைச் சமவெளியைச் சார்ந்த கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய வெள்ளி முத்திரைக் காசுகள் கிடைப்பதன் மூலம் கங்கைச் சமவெளியுடன் வணிகப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை உறுதி செய்ய முடிகிறது. மேலும், ரோம் நாட்டுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கு நாட்டு நாணயங்களும், ரோம் நாட்டு ரௌலட்டட் மற்றும் அரிட்டன் வகை பானை ஓடுகளும் வலு சேர்க்கின்றன.

கீழடியில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் நகர நாகரிகத்திற்கான கூறுகளை வெளிப்படுத்தியுள்ளது. பண்டைத் தமிழ்ச் சமூகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடனும் மேம்பட்ட தமிழ்ச் சமூகமாகவும் விளங்கியதை கீழடி அகழாய்வு முடிவுகள் வாயிலாக அறிவியல் பூர்வமாக தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நிலை நிறுத்தியுள்ளது.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் உலகத் தமிழர்கள் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில், மதுரையும் கீழடியும், வேளாண்மையும் நீர் மேலாண்மையும், கலம் செய்கோ, ஆடையும் அணிகலன்களும், கடல்வழி வணிகம், வாழ்வியல் எனும் ஆறு பொருண்மைகள் அடிப்படையில் தனித்தனி கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழர்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றினை பறைசாற்றும் விதத்திலும், அதனை உலகிற்கு வெளிக்கொணரும் வகையிலும், உலகத்தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, கீழடி அருங்காட்சியகத்தை அமைத்த தொல்லியல் துறை வல்லுநர்கள் மற்றும் சிற்பிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

கீழடி அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள்

இத்திறப்பு விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் ப. சிதம்பரம், சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, ஆ. தமிழரசி, வி. முத்துராஜா, எஸ். முருகேசன், எம். பூமிநாதன், எஸ். மாங்குடி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்திர மோகன், இ.ஆ.ப., சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்