காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காலநிலை அறிவு இயக்கம் விரைவில் தொடக்கம் - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரைவில் ‘காலநிலை அறிவு இயக்கம்’ செயல்படுத்தப்பட உள்ளது என்று, காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பேசியதாவது:

காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தவும், தகவமைத்துக் கொள்ளவும் நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் பல திட்டங்களை தமிழக அரசு விரைவாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்துக்கான காலநிலை திட்டத்தை அறிவித்து, அதற்கு ரூ.500 கோடி ஒதுக்கி, நாட்டுக்கே முன்மாதிரியாக செயல்படுகிறோம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘காலநிலை ஸ்டுடியோ’ அமைக்கப்பட்டு, தமிழகத்துக்கென தனித்துவ மாதிரிகளை உருவாக்கவும், அதற்கான ரேடார்களை நிறுவவும் ரூ.10 கோடி ஒதுக்கி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடல் அரிப்பை தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தை பேணவும் பனைமரங்கள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் ராம்சர்அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்கள் எண்ணிக்கையை 13 ஆகஉயர்த்தியுள்ளோம். இத்திட்டங்களை ஒருங்கிணைக்க நாட்டிலேயே முதல்முறையாக ‘தமிழ்நாடுபசுமை காலநிலை நிறுவனம்’ உருவாக்கப்பட்டுள்ளது. ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, என் தலைமையில் ‘காலநிலை மாற்ற நிர்வாக குழு’ அமைக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி என்பது நீடித்துநிலைப்பதாக இருக்க வேண்டும். இனி தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும். ‘ஒருங்கிணைந்த நலன்’ என்ற கொள்கையைஉறுதியாக எடுத்துக்கொண்டு இந்த அரசு செயல்படுகிறது.

இனிவரும் மாதங்களில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வெள்ளம், புயல் போன்ற சீற்றங்களை கையாள்வதுபோல, வெப்ப அலைகள், புதிய நோய்களை கையாளவும் நாம் தயாராக வேண்டும்.

ஒவ்வொரு துறையும் எவ்வளவு கார்பனை வெளியிடுகின்றன என்பதை சில மாதங்களில் அறிவியல்பூர்வமாக வெளியிட உள்ளோம். அதை இக்குழு ஆய்வு செய்து, இந்தியா கார்பன் சமநிலையை அடைய நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான 2070-ம் ஆண்டுக்கு முன்னதாகவே தமிழகத்துக்கு இலக்கை நிர்ணயிக்கும்.

தமிழகத்தில் உள்ள 10 கிராமங்களை மீள்தன்மையுடைய கிராமங்களாக மாற்றுவதற்கான திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. பள்ளி,கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘காலநிலை அறிவு இயக்கம்’ செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதில் அமைச்சர்கள், மாநிலதிட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், சுற்றுச்சூழல் துறைசெயலர் சுப்ரியா சாஹு, மத்திய திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா, உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநர் எரிக் சோல்ஹைம், நிலையான கடலோர மேலாண்மை தேசிய மைய நிறுவன இயக்குநர் ரமேஷ் ராமச்சந்திரன், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சுந்தரராஜன், ராம்கோ சமூக சேவைகள் தலைவர் நிர்மலா ராஜா, துறை செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்