விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்! - பழ.நெடுமாறன் அறிவிப்பு; இலங்கை ராணுவம் மறுப்பு

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று உலகத் தமிழர்பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009 மே மாதம் நடந்த உச்சகட்ட போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவர் சுடப்பட்டு சடலமாக கிடப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டது.

இந்நிலையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர்பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்றுகூறியதாவது:

தமிழ்ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இதுவரை அவரை பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட ஊகங்கள், சந்தேகங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

இலங்கை தமிழ் மக்களின் விடியலுக்கான திட்டத்தை பிரபாகரன் விரைவில் அறிவிக்க இருக்கிறார்.

தற்போது இந்திய எதிர்ப்பு தளமாக இலங்கையை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், சீனாவின் பிடியில் இந்தியப் பெருங்கடல் பகுதி சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து, அதை தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், இங்குள்ள கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று, பிரபாகரனுக்கு துணைநிற்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பிரபாகரனுடன் நீங்கள் பேசினீர்களா? அல்லது அவர் உங்களை தொடர்பு கொண்டாரா?

பிரபாகரனின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு உண்டு. அந்த தொடர்பின்மூலம் நான் அறிந்த செய்திகளை, அவர்களது அனுமதியின் பேரில் தெரிவித்துள்ளேன்.

பிரபாகரன் எங்கு இருக்கிறார்? எப்போது வருவார்?

உங்களை போலவே இதை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விரைவில் அவர் வெளிப்படுவார்.

பிரபாகரனின் மனைவி, மகள் குறித்து ஏதேனும் தகவல் உண்டா?

நன்றாக நலமுடன் உள்ளனர்.

இத்தனை ஆண்டு காலம் கழித்து இப்போது இதை தெரிவிக்க என்ன காரணம்?

சர்வதேச சூழல் தற்போது கனிந்திருக்கிறது. எந்த இலங்கை மக்கள் ராஜபக்சவை ஆட்சியில் அமரவைத்தனரோ, அதே மக்கள் அவருக்கு எதிராக கொதித்து எழுந்து போராடி, ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்கின்றனர். இலங்கை மக்களுக்கு இப்போதுதான் உண்மை புரியத் தொடங்கியுள்ளது. இதைவிட சாதகமாக வேறு எந்த சூழல் உருவாக முடியும்.

இந்த செய்தி இலங்கை மக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி, நம்பிக்கையை கொடுக்கும். இப்போது அவர்களுக்கு யானை பலம் கிடைத்துள்ளது. அவர்கள் நிச்சயம் பிரபாகரனுக்கு பின்னால் அணிவகுத்து நிற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் சி.முருகேசன், துணைச் செயலாளர் துரை.குபேந்திரன், இலங்கை கவிஞர் காசி. ஆனந்தன், சமதா கட்சிதேசிய பொதுச் செயலாளர் என்.ஏ.கோன் உடன் இருந்தனர். அனைவருக்கும் நெடுமாறன் இனிப்பு வழங்கினார்.

மத்திய, மாநில அரசுகளின் உளவு அமைப்புகள் தீவிர விசாரணை - நெடுமாறனிடம் விசாரிக்க முடிவு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக பழ.நெடுமாறன் தெரிவித்ததை தொடர்ந்து, பிரபாகரன் தொடர்பான தகவல்களை மத்திய, மாநில உளவுப் பிரிவினர் மீண்டும் திரட்டி வருகின்றனர். இதுகுறித்து நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது.

இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின் இந்த கருத்தை முழுமையாக புறந்தள்ளிவிட முடியாது என்பதால், பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.

பிரபாகரன் தொடர்பான தகவல்களை தமிழக க்யூ பிரிவு போலீஸாரும் திரட்டத் தொடங்கியுள்ளனர். தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், அப்பிரிவு ஐ.ஜி. செந்தில்வேலன், க்யூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள் தலைமையிலான போலீஸார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கெனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு புலனாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுப்பு: பிரபாகரன் உயிருடன் உள்ளதாக நெடுமாறன் கூறிய தகவலை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் ரவி ஹேரத் கூறியபோது, ‘‘இறுதி போரின்போது, 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பிரபாகரன் கொல்லப்பட்டதை டிஎன்ஏ ஆதாரம் மூலம் உறுதி செய்தோம். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்லப்படுவது தவறான தகவல்கள். இதில் சந்தேகமே இல்லை’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தொழில்நுட்பம்

9 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

54 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 min ago

வர்த்தக உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்