கோரிக்கைகளை நிறைவேற்றி போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தை தடுக்க வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் பொது நலனே நிறைந்துள்ளதால் அவற்றை நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "13-ஆவது ஊதிய உயர்வு பேச்சை உடனடியாக தொடங்க வேண்டும்; காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கு தமிழக அரசின் கையாலாகாத தன்மையே காரணமாகும்.

தமிழக ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களும், தமிழ்நாடு மின்வாரியமும் தான். இரண்டையும் லாபத்தில் இயக்க முடியும் என்றாலும், நிர்வாக சீர்கேட்டின் காரணமாக இரு பொதுத்துறை நிறுவனங்களும் பல ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வருகின்றன என்பது மட்டுமின்றி, மீட்க முடியாத கடன்சுமையிலும் சிக்கித் தவிக்கின்றன.

உழைக்கும் ஊழியர்களுக்கு ஊதியத்தையும், உழைத்துக் களைத்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தையும் சரியான தேதியில் வழங்க முடியாத நிலையில் போக்குவரத்துக் கழகங்கள் தள்ளாடுகின்றன.

அரசு போக்குவரத்துக் கழகங்களை சீரமைத்து, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகளை விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும், தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து தான் கடைசி ஆயுதமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் கையில் எடுத்துள்ளன.

தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதவை அல்ல; நியாயமானவையே. அதுமட்டுமின்றி, அவர்களின் கோரிக்கைகளில் மக்கள் நலனும் உள்ளது.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22,500 பேருந்துகளில் 7000 பேருந்துகள் மட்டுமே இயக்குவதற்கு தகுதியானவை. மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோமீட்டருக்கும் மேல் ஓடி காலாவதியானவை ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 20 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 7000 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல், கடந்த 6 ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்ற 13 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.1500 கோடி ஆகும். அதுமட்டுமின்றி, பல்வேறு வழிகளில் தொழிலாளர்களுக்கு சொந்தமான ரூ.7000 கோடியை போக்குவரத்துக்கழகங்கள் பிடித்து வைத்துள்ளன. போக்குவரத்துக்கழகங்கள் இழப்பை சந்திப்பதால் அதை சமாளிக்க இந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க போக்குவரத்துக்கழகங்களுக்கு முதற்கட்டமாக ரூ.2000 கோடி வழங்க வேண்டும், காலாவதியான பேருந்துகளை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளைக் கூட தமிழக அரசு ஏற்க மறுத்து விட்டது. தொழிற்சங்கங்கள் ரூ.2000 கோடி கேட்ட நிலையில், ரூ.500 கோடி மட்டுமே வழங்க முடியும் என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.

அரசு வழங்க ஒப்புக்கொண்டுள்ள ரூ.500 கோடியை வைத்துக் கொண்டு எதையும் செய்ய முடியாது. இதனால் போக்குவரத்துக் கழகங்களின் நிலைமை மேலும் மோசமடையும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் படிப்படியாக செயலிழந்து விடும்.

போக்குவரத்துக் கழகங்களை மீட்பதற்காக நிதி உதவி வழங்க மறுப்பதன் மூலம் அப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தான் அரசு விரும்புகிறதா?

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் லாப நோக்கமற்ற பொதுச்சேவை நிறுவனம் என்பதால், அதன் செலவுகளை சமாளிக்க அரசு மானியம் வழங்க வேண்டியது அவசியம் ஆகும். தமிழகத்தில் மொத்தம் 22500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் சுமார் 10,000 நகரப்பேருந்துகள் மக்கள் நலன் கருதி மட்டுமே இயக்கப்படுவதால் அவற்றில் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

இந்த இழப்பை சமாளிக்க அரசின் உதவி தவிர்க்க முடியாதது. அண்டை மாநிலமான கேரளத்தில் மொத்தம் 5000 பேருந்துகள் மட்டுமே அரசுப் போக்குவரத்துக்கழகங்களால் இயக்கப்படும் நிலையில், அவற்றுக்கு ஆண்டுக்கு ரூ.3000 கோடி மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசு டீசல் மானியம் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ.800 கோடி வழங்குவதைத் தவிர வேறு எந்த சலுகையும் காட்டுவதில்லை.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் அவர்களின் நலனை விட, பொது நலனே நிறைந்துள்ளது. மேலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். இவற்றை கருத்தில் கொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

இந்தியா

1 min ago

இந்தியா

8 mins ago

இந்தியா

13 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

20 mins ago

சுற்றுச்சூழல்

48 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்