வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்எல்சி நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று கடலூர் மாவட்ட மக்கள் போராடி வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக வீராணம் ஏரியை சுற்றியுள்ள 12 கிராமங்களில் நிலக்கரி வளங்களை மதிப்பிடும் பணியை மத்திய சுரங்கத்துறை மேற்கொண்டு வருகிறது. உழவர்களின் வாழ்வாதாரம், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி கவலைப் படாமல் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விளைநிலங்களை பறித்து நிலக்கரி சுரங்கங்களை அமைக்க மத்திய சுரங்கத்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை சுற்றியுள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய 3 வட்டங்களில் உள்ள புத்தூர், ஆட்கொண்டநத்தம், மோவூர், ஓமம்புலியூர், தவர்த்தாம்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களில் மிக அதிக அளவில் நிலக்கரி வளம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

வீராணம் பகுதியில் உள்ள நிலக்கரி வளத்தின் துல்லியமான அளவு என்ன? அவற்றின் வெப்பத்திறன் என்ன? என்பதை கண்டறியும் பணியில் எம்.இ.சி.எல். எனப்படும் தாதுவளம் கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனை நிறுவனத்தை (MINERAL EXPLORATION AND CONSULTANCY LTD) மத்திய அரசின் சுரங்கத்துறை ஈடுபடுத்தியுள்ளது. 200 இடங்களில் மண் மற்றும் நீர் ஆய்வுகள் தொடங்கப் பட்டுள்ளன. இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், உழவர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஆய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை எந்த நேரமும் மீண்டும் தொடங்கப்படலாம்; ஆய்வு முடிவடைந்த பின்னர் அப்பகுதியில் என்எல்சியின் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படலாம் என்று உழவர்கள் அஞ்சுகின்றனர்.

வீராணம் பகுதியில் மட்டும் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தை மட்டுமின்றி, அருகிலுள்ள அரியலூர் மாவட்டத்தையும் அழிப்பதற்கு சமமான செயலாகும். வீராணம் ஏரி பகுதியை ஒட்டியுள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய வட்டங்கள் வளம் கொழிக்கும் பூமி ஆகும். இந்த 3 வட்டங்களிலும் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் 2 லட்சத்திற்கும் கூடுதலான குடும்பங்கள் வேளாண்மையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன. வீராணம் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டால், அதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் மட்டுமின்றி, 25 கி.மீ சுற்றளவில் உள்ள நிலங்களும் அவற்றின் வளத்தை இழந்து மலடாகி விடும். அதனால், அப்பகுதியில் உள்ள 2 லட்சம் குடும்பங்களும் வாழ்வாதாரங்களை இழப்பது மட்டுமின்றி, வீடுகளையும் இழந்து அகதிகளாக வெளியேற வேண்டிய அவலநிலை ஏற்படும்.

காவிரி டெல்டாவின் நிறைவுப் பகுதியாக வீராணம் பாசனப் பகுதி அமைந்திருக்கிறது. வளமான இந்த பகுதி ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தொழில்துறை திட்டங்களால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் பாமக பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்தப் பகுதிகளை காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்தது. இந்தப் பகுதியில் வேளாண்மையை பாதிக்கும் எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்பது விதி. அவ்வாறு இருக்கும் போது, நிலக்கரி வளம் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்கான அதிகாரம் எவ்வாறு வழங்கப் பட்டது என்பது பற்றி கடலூர் மாவட்ட நிர்வாகம், அம்மாவட்ட மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

என்எல்சி. நிறுவனம் அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக சுமார் 25,000 ஏக்கர் வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. என்எல்சியின் நிலப்பறிப்பு முயற்சிகளுக்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் அப்பட்டமாக துணை போய்க்கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து மக்களையும், உழவர்களையும் திரட்டி பாட்டாளி மக்கள் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அதற்கு மாறாக கடலூர் மாவட்டத்தின் வளம் கொழிக்கும் தென் பகுதியையும் சீரழிக்கும் திட்டத்திற்காக ஆய்வு நடத்த அனுமதி அளித்திருக்கிறது. கடலூர் மாவட்ட மக்களின் நலன், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை, அவற்றில் அரசுக்கு அக்கறையில்லை என்பதையே இவை காட்டுகின்றன.

உழவையும், உழவர்கள் நலனையும் பறிகொடுத்து விட்டு, எந்தத் தொழில்திட்டங்களையும் செயல்படுத்தத் தேவையில்லை. அதிலும் குறிப்பாக, சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக விளைநிலங்களை பறிப்பதையும், பலி கொடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். வீராணம் சுரங்கத் திட்டத்திற்காக எந்தவிதமான ஆய்வுகளையும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நடத்த அனுமதிக்கக் கூடாது. இதற்காக எம்.இ.சி.எல் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மக்களைத் திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை பாமக நடத்தும்.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்