அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்துஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வில் நடைபெற்றது.

இதில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் நிறைவுபெற்ற நிலையில், இபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் நேற்று முன்தினம் வாதிட்டார். அவர் தனது வாதத்தில், ‘‘இரட்டைத் தலைமையால் ஒருமித்த முடிவைஎடுக்க முடியவில்லை என்பதால்தான், ஒற்றைத் தலைமை வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கும் அதிகாரம் பொதுக் குழுவுக்கு உள்ளதுபோல, அதை ரத்து செய்துவிட்டு, இடைக்கால பொதுச் செயலாளரை உருவாக்கும் அதிகாரமும் பொதுக்குழுவுக்கு உள்ளது’’ என்றார்.

இந்நிலையில், நேற்றும் வாதம் தொடர்ந்தது. அதன் விவரம்: அதிமுக மற்றும் அவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்யநாதன், முகுல் ரோஹ்தகி: கட்சி ஆதரவு இல்லாத ஒருவர், பொதுக்குழு கூட்டத்தையும், அதன் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது. கட்சி ரீதியாக ஓபிஎஸ் தரப்புக்கு அதிருப்தி இருந்தால், தேர்தல் ஆணையத்திடம்தான் முறையிட வேண்டும். கட்சிக்குள் அவருக்குபெரும்பான்மை, செல்வாக்கு இல்லாததால்தான், அவர் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை.

நீதிபதிகள்: ஓபிஎஸ்ஸை நீக்க வேண்டும் என பொதுக்குழு தீர்மானத்தில் இல்லாதபோது, எப்படி அவரை நீக்கினீர்கள்?

முகுல் ரோஹ்தகி: ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்று,கட்சியின் தலைமை அலுவலகத்தை சூறையாடியதால்தான், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். உச்சபட்ச அதிகாரம் படைத்த பொதுக்குழுவின் முடிவுக்கு, அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள்: கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்குமாறுகோரியதே இபிஎஸ் தரப்புதான்.தற்போது அந்தப் பதவிகளையே அவர்கள் நீக்கிவிட்டு, இடைக்காலப் பொதுச் செயலாளர் என்றபதவியை கொண்டு வந்துள்ளனர்.

நீதிபதிகள்: ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழு சரியானதுதான் என ஓபிஎஸ் தரப்பு கூறினால், அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்று தேதி குறித்ததும் சரிதானே?

ஓபிஎஸ் தரப்பு: ஜூன் 23 பொதுக்குழு கூட்ட வழிமுறைகள்தான் சரியே தவிர, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும், கையாளப்பட்ட விதமும் தவறு. அதேபோல,ஜூலை 11 பொதுக் குழு கூட்டமும் சட்டவிரோதமானது. இவ்வாறு வாதம் நடந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். வரும் 16-ம் தேதிக்குள் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 secs ago

வாழ்வியல்

9 mins ago

தமிழகம்

3 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

36 mins ago

ஓடிடி களம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்