100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் ஒரு நாள் கூட ஊதியம் தரவில்லை: முடப்பள்ளி கிராமத்தினர் ஆதங்கம்

By ந.முருகவேல்

விருத்தாசலம்: கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முடப்பள்ளி கிராமத்தில், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 22.5 லட்சம் ஊதியம் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தங்களை ஒரே ஒரு நாள் வேலைக்கு அழைத்து விட்டு, அந்த ஒரு நாளுக்கும் கூட ஊதியம் தரவில்லை என்று அக்கிராம மக்கள் கடும் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.281 என 100 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும். முழுச் சம்பளம் பெற 33 கனஅடி மண் தோண்டியிருக்க வேண்டும். அந்த வகையில், கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முடப்பள்ளி ஊராட்சியில் 847 பேருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கான வருகைப் பதிவேடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. 4 பணித் தள பொறுப்பாளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சியின் தலைவராக மாலினி என்பவர் உள்ளார். ஊராட்சியின் செயலர் தனவேல்.

இந்த ஊராட்சிக்கு 847 பயனாளிகளுக்கு ஊதியம் வழங்க ரூ.28.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை (9 மாதங்கள்) 432 பேருக்கு பணிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் இருந்து, ரூ.22.5 லட்சம் ஊதியமாக செலவிடப்பட்டுள்ளதாகவும் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கணினி பிரிவில் வரவு - செலவின கணக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இக்கிராம மக்கள் இதனை முற்றிலும் மறுக்கின்றனர். “கடந்த 9 மாதங்களில் டிசம்பர் 31-ம் தேதி அன்று மட்டுமே எங்களை கிராம தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக அழைத்தனர். அன்றும் சம்பிரதாயத்துக்காக வேலை வழங்கினர். அந்த ஒரு நாளுக்கும் எங்களுக்கு ஊதியம் தரவில்லை. அன்றைய நாளில், இந்த ஆண்டு புதிய அட்டைக்காக ரூ.200 தர வேண்டும் என்று கூறினர். இவ்வாறு இருக்க எங்களுக்கு ஊதியம் வழங்கியதாக எப்படி ரூ. 22.5 லட்சம் ஒதுக்கியிருக்க முடியும்?” என்று கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

“பக்கத்து ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய ஒடப்பன்குப்பம் கிராம மக்கள் 50 முதல் 60 நாட்கள் வரை வேலை செய்து, அதற்கான பணத்தை பெற்றுள்ளனர். ஆனால் எங்களுக்கு அப்படி எதுவும் கிடைக்கவில்லை” என்று முடப்பள்ளி கிராமத்தி னர் ஆதங்கத்துடன் தெரிவிக்கின் றனர். ஊராட்சித் தலைவர் மாலினியிடம் இது பற்றி கேட்டபோது, “வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இது பற்றி கேட்டதற்கு, எங்களுக்கு நிதி வரவில்லை என்று தெரிவித்தனர்” என்றார்.

தொடர்ந்து இந்தப் புகார் தொடர்பாக கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரனிடம் கேட்டதற்கு, “இத்திட்டத்தை பொறுத்தவரை பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு ஊதியம் செலுத்தப்படும். எனவே அவரவர் வங்கிக் கணக்கிற்கு பணம் வரவில்லை எனில் நேரில் வந்து முறையிடலாம். அதுபற்றி ஆய்வு செய்து, மேல்முறையீட்டிற்கு அனுப்பப்படும்” என்றார்.

“இப்படித்தான் மாறி மாறி சொல்கிறார்கள். கடந்த 9 மாதங்களில் 432 பேருக்கு வேலைஅளித்திருப்பதாக ஊராட்சிகணக்கில் உள்ளது. அதற்காக ரூ.22.5 லட்சம் செலவிடப்பட்டதாகவும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கணக்கு காண்பிக்கிறது. ஆனால், எங்களுக்கு தெரிந்து, எங்கள் கிராமத்தில் யாரும் இந்தப் பணத்தை வாங்கவில்லை. அப்படியெனில், ‘ரூ.22.5 லட்சம் யாருக்கு சென்றது?’ என்பது கணினி பிரிவு அலுவலர்களுக்கும் ‘ஓவர்சீஸ்’ எனும் மேற்பார்வையாளருக்கும் தான் வெளிச்சம்” என்கின்றனர் இக்கிராமத்தில் ஓரளவேனும் இதைப்பற்றி அறிந்தவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

தமிழகம்

52 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்