'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' நிர்வாகக் கட்டமைப்பை மாற்றுக: திருமாவளவன் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷனின் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கோடு 'இல்லம் தேடி கல்வி' , 'எண்ணும் எழுத்தும்' , 'நான் முதல்வன்' எனப் பல்வேறு திட்டங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மருத்துவப் படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி ஆகிய திட்டங்கள் முன் எப்போதும் விட மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்த்திருக்கின்றன.

இந்நிலையில் 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' என்ற புதிய திட்டத்தை தனியாரின் பங்கேற்போடு நடைமுறைப்படுத்தத் தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. ’கல்வியின் தரம் என்பது பள்ளியின் உள் கட்டமைப்பு முதல் ஆரோக்கியம், சுகாதாரம், ஊட்டச்சத்து, கற்பித்தல், விளையாட்டு மற்றும் பண்பாடு, பாடத்திட்டம் சாரா செயல்பாடுகள் என்பது வரை பரந்து விரிந்து உள்ளது’ எனத் தமிழ்நாடு அரசு சரியாக இந்தப் பிரச்சனையை அடையாளம் கண்டிருக்கிறது. அரசு பள்ளிகள் என்ற பட்டியலில் ஆதிதிராவிட நலத்துறை உள்ளிட்ட பள்ளிகளும் உள்ளடக்கப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கதாகும். ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ விரும்பினால் ஒரு பள்ளிக்கு நன்கொடை அளிப்பதற்கும் அல்லது ஒரு பள்ளியைத் தத்தெடுத்துக் கொள்வதற்கும் இதில் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்திய ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு தொகையை கல்விக்காக செலவிடுவோம் என்று உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து செலவிடும் தொகை 4 விழுக்காடு என்ற அளவிலேயே உள்ளது. அதிலும் ஒன்றிய அரசு கல்விக்காக செலவிடும் தொகை ஒட்டு மொத்தத்தில் ஒரு விழுக்காடு என்ற அளவில் தான் இருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக கல்வியானது தொடர்ந்து தனியார்மயம் ஆகி வருகிறது. இதனால் பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மாநிலத்தின் மனித வள மேம்பாட்டைக் கடுமையாகப் பாதிக்கிறது. தமிழ்நாட்டிலும் பள்ளிக் கல்வி என்பது கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாகி வருவதைப் பார்க்கிறோம். இதை மாற்றுவதற்காகத்தான் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த வேணு. சீனிவாசன் பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன. பொதுக் கல்விக்கு அந்த நிறுவனத்தின் சார்பில் எந்த ஒரு பெரிய பங்களிப்பையும் அவர்கள் செய்த வரலாறு கிடையாது. அத்தகைய ஒருவரை இந்த பவுண்டேஷனில் தலைவராக நியமிப்பது சரியல்ல என்கிற புகார்கள் எழுந்துள்ளன. இதை தமிழ்நாடு அரசு பரிசீலித்து அந்த பொறுப்புக்கு கல்வியில் அனுபவமும் அக்கறையும் கொண்ட ஒருவரை நியமிப்பது பொருத்தமாக இருக்கும்.

மாவட்ட அளவில் இதற்கென அமைக்கப்பட்டு இருக்கும் குழுக்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மட்டுமே கொண்ட குழுவாக உள்ளது. மாநில அளவிலான குழுக்களிலோ, மாவட்ட அளவிலான குழுக்களிலோ மக்கள் பிரதிநிதிகள் எவரும் இடம் பெறவில்லை. கல்வியில் ஈடுபாடு கொண்ட மக்கள் பிரதிநிதிகளை மாநில, மாவட்ட அளவிலான குழுக்களில் இடம்பெறச் செய்வது மிக மிக அவசியமாகும்.

ஆதிதிராவிட நலப் பள்ளிகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் தன்னார்வத்தின் அடிப்படையில் பள்ளியைத் தத்தெடுக்கவோ நன்கொடை அளிக்கவோ முன்வருகிறவர்கள் ஆதிதிராவிட நலப் பள்ளியைத் தேர்வு செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, அந்தப் பள்ளிகள் விடுபட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படாமல் அந்தப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அடுத்து வரும் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதோடு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயக பூர்வமாகத் திருத்தி அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்