துல்லிய கணக்கெடுப்பு - பொள்ளாச்சி வனச் சரகத்தில் புலிகளின் எண்ணிக்கையை அறியத் தயாராகும் வனத் துறை

By எஸ்.கோபு

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி வனச் சரகத்தில், தானியங்கி கேமராக்களைப் பயன்படுத்தி புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவதற்காக கேமராக்களை பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது.

உலகில் அரிய வகை விலங்குகள் மற்றும் அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ள விலங்குகளான சிங்கவால் குரங்கு, மலபார் அணில், பிள்ளை மந்தி, கருமந்தி, இருவாட்சி பறவை என பல உயிரினங்களின் உறைவிடமாக இருந்து வருகிறது ஆனைமலை புலிகள் காப்பகம்.

வனத்தின் ஆரோக்கியத்தை அறிய வனத் துறையினர், ஆண்டுக்கு இருமுறை குளிர்கால மற்றும் மழைக்கால வன விலங்கு கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம்.

இதில், புலியின் காலடித்தடம், மரங்களில் காணப்படும் நகக்கீறல்கள், புலியின் எச்சம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இதில் துல்லிய தன்மை கிடைக்காது என்பதால், புலிகளின் எண்ணிக்கையை கணக்கிட, தானியங்கி கேமராக்களைக் கொண்டு ‘துல்லிய கணக்கெடுப்பும்’ நடத்தப்படுகிறது.

கணக்கெடுக்கப்படும் இடங்கள்

பொள்ளாச்சி வனச் சரகத்தில், ஆயிரங்கால், போத்தமடை, பச்சைத்தண்ணீர், மங்கரை, வில்லோனி, ஆழியாறு, கோபால்சாமி மலை, அர்த்தநாரிப்பாளையம், பருத்தியூர் ஆகிய 9 வனச் சுற்றுகளில், வனச்சுற்றின் பரப்பைப் பொறுத்து 2 சதுரகிலோமீட்டருக்கு ஒரு ஜோடி கேமராக்கள் வீதம் 40 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.

இதற்காக வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் என 40-க்கும் மேற்பட்டோருக்கு கேமராக்களை கையாள சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

தனி அடையாளம்

இதுகுறித்து வனத் துறையினர் ‘தி இந்து’விடம் கூறியது: புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாகக் கணக்கிட, தானியங்கி கேமரா கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில், புலிகளின் ‘தனி அடையாளம்’ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இதற்காக புலிகளின் வழித்தடத்தில் இருபுறமும் 7 மீட்டர் தொலைவில், தரையிலிருந்து 55 சென்டிமீட்டர் உயரத்தில், மரத்தில் நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதன் சிறப்பம்சம் ‘ஹீட் டிடெக்டிவ் சென்சார்’ ஆகும். இது விலங்குகளின் உடலில் இருந்து வெளிப்படும் வெப்ப வேறுபாட்டை உணர்ந்து புகைப்படம் எடுக்கும் வசதி கொண்டது.

மேலும், எதிரெதிரே பொருத்தப்படும் இரு கேமராக்களின் இடையில் நகரும் முயல் முதல் யானை வரை அனைத்து விலங்குகளின் அசைவினையும் துல்லியமாக பதிவிடும். அத்துடன் விலங்குகளின் இரவு நடமாட்டத்தையும் பதிவிட முடியும் என்பதால் கணக்கெடுப்பு துல்லியமாக இருக்கும். எல்லை தாண்டி ஊடுருவும் புலிகளும் கேமராக்களில் சிக்கும்.

ஆனைமலை புலிகள் காப்பகமும், கேரளாவின், பரம்பிக்குளம் புலிகள் காப்பகமும் அருகருகே உள்ளதால், நெம்மாரா வனக் கோட்டதிலிருந்து வெளியேறி, இரு மாநில எல்லைகளையும் கடக்கும் புலிகளின் எண்ணிக்கையும் இதில் பதிவாகும் இதனால் கணக்கெடுப்பில் ‘இரட்டைப் பதிவு’ தவிர்க்கப்படும்.

புலிகளின் வயிற்றுப் பகுதியில் உள்ள கோடுகள், ஒவ்வொரு புலிக்கும் வேறுபடும் என்பதால், கோடுகளின் அமைப்பு, அவற்றின் நீளம், அகலம் ஆகியவற்றை ஆய்வு செய்து, டி1,டி2 என புலிகளின் எண்ணிக்கை பதிவிடப்படும்.

மனித-விலங்கு மோதலை தடுக்க...

கணக்கெடுப்பில் இம்முறை யானைகளின் தனி அடையாளங்களும் பதியப்படுகின்றன. ஒற்றை தந்தம் கொண்ட யானை, உடைந்த தந்தம் கொண்ட யானை, தந்தம் இல்லாத மக்னா யானை, யானைகளின் காது அமைப்பு, தந்தங்களின் உருவ அமைப்பு மற்றும் அவற்றின் உடலில் காணப்படும் வெண்புள்ளிகள் உள்ளிட்ட தனி அடையாளங்கள் பதியப்படுகின்றன.

இதனால் விவசாய விளை நிலங்களுக்குச் செல்லும் யானைகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு, அவற்றின் வாழ்விடப் பகுதி, வழித்தடத்தை அறிந்து கொள்ள முடியும்.

மேலும், கோடைக்காலங்களில் வனப் பகுதியில் யானைகளுக்கு ஏற்படும் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் மனித-விலங்கு மோதலை தடுக்க முடியும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

மேலும்