கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை கிடைக்க அரசு நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரும்பு விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த பரிந்துரை விலை மற்றும் நிலுவைத் தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக சட்டப்பேரவையில் நெல் கொள்முதல் விலை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பதிலளித்து பேசியுள்ளார்.

மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் மாநில அரசு ஊக்கத்தொகை வழங்கும் பட்சத்தில், பொது வினியோகத் திட்டத்திற்குத் தேவைப்படும் அளவுக்கு மேல் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு மானியம் வழங்க முடியாது என்ற மத்திய அரசின் சுற்றறிக்கை தமிழகத்திற்கு பொருந்தாது என்றுகூறி அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பதையும் முதல்வர் விளக்கியுள்ளார்.

மத்திய அரசின் உத்தரவு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்பதால், வழக்கம் போலவே மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் தமிழக அரசின் சார்பில் ஊக்கத் தொகையாக சன்னரக நெல்லுக்கு ரூ.70 சேர்த்து 1470 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு ரூ.50 சேர்த்து 1410 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

மத்திய அரசின் உத்தரவால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்திய போதிலும், புதிதாக எந்த சலுகையையும் அறிவிக்கவில்லை; கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படும் அதே அளவிலான ஊக்கத்தொகையைத் தான் அறிவித்திருக்கிறார்.

ஆனால், தமிழக விவசாயிகளுக்கு பெரிய சலுகையை அறிவித்துவிட்டது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயிகளின் விடிவெள்ளியாக தமது அரசு தொடர்ந்து செயல்படும் என்று தனக்குத்தானே பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த விளக்கத்தின் மூலம் நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2000 ஆக உயர்த்த வேண்டும் என்ற உழவர்களின் கோரிக்கையை தந்திரமாக நிராகரித்திருக்கிறார்.

நெல் கொள்முதல் விலை இப்படியென்றால், கரும்பு கொள்முதல் விலையில் அரசின் உத்தரவை மதிக்க மறுக்கும் சர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட முதல்வருக்கு இல்லை. கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையுடன் டன்னுக்கு ரூ.650 சேர்த்து மாநில அரசின் பரிந்துரை விலை நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், 2013-14 ஆம் ஆண்டிற்கு மத்திய அரசின் விலையுடன், வழக்கத்தைவிட குறைவாக ரூ. 550 மட்டுமே சேர்த்து 2650 ரூபாயை பரிந்துரை விலையாக முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், அதைக்கூட சர்க்கரை ஆலைகள் வழங்க மறுக்கின்றன. 2012-13 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.2350 வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ரூ.2150 முதல் ரூ.2250 வரை மட்டுமே சர்க்கரை ஆலைகள் வழங்குகின்றன.

அதுமட்டுமின்றி, விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.527 கோடி பாக்கி வைத்துள்ளன. இதை உடனடியாக வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடந்த 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் இதுகுறித்து விளக்கமளித்த தொழில்துறை அமைச்சர் தங்கமணி, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அடுத்த 15 நாட்களில் வழங்கும்படி சர்க்கரை ஆலைகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டிருப்பதாக தெரிவித்தார். அமைச்சர் விதித்த கெடு கடந்த 29ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்ட போதிலும், இதுவரை கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் ஒரு ரூபாய் கூட நிலுவைத் தொகை வழங்கவில்லை.

ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவு இருப்பதால் உழவர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க சர்க்கரை ஆலைகள் மறுக்கின்றன என்று குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

இவை உண்மையில்லை என்றால், கரும்பு விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த பரிந்துரை விலை மற்றும் நிலுவைத் தொகை கிடைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2000 ஆக உயர்த்த வேண்டும்.

அவ்வாறு செய்துவிட்டு விவசாயிகளின் விடிவெள்ளி என்பது மட்டுமின்றி, எத்தனை அடைமொழிகளை வேண்டுமானாலும் முதல்வர் சூட்டிக் கொள்ளலாம்" என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

11 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

24 mins ago

உலகம்

26 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வணிகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்