“நேரு குறித்து அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்வீர். இல்லையெனில்...” - ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: "நேருவைப் பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு எதிராக வரம்புகளை மீறி தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் எந்த முடிவையும் ஆளுநர் எடுக்க முடியாது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் செயல்பாடுகளுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுவதைத் தொடர்ந்து செய்து வருகிறார்

நேற்று சென்னை சாஸ்திரி பவனில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி சிலையைத் திறந்து வைத்து, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத் துறை மற்றும் விவசாயத் துறைகள் புறக்கணிக்கப்பட்டதால் நாடு பெரும் அவமானத்தைச் சந்தித்ததாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைக் கூறியிருக்கிறார். இதன்மூலம் பிரதமர் ஜவஹர்லால் நேருவை இழிவுபடுத்தியதோடு, அவரது வாரிசாகக் கருதப்பட்ட லால் பகதூர் சாஸ்திரியையும் அவர் அவமானப்படுத்தியிருக்கிறார்.

இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, 1964 ஜனவரியில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் அப்போது அமைச்சராக இல்லாத லால் பகதூர் சாஸ்திரி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து தமக்கு உற்ற துணையாக வைத்துக் கொண்டார். இந்நிலையில், பண்டித நேரு மறைவிற்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக கருத்தொற்றுமையை உருவாக்கி தேர்வு செய்தார். இந்த தேர்வு பற்றி பண்டித நேரு கடைசிக் காலத்தில் சூசகமாக காமராஜரிடம் கூறியதன் அடிப்படையிலேயே செய்யப்பட்டது என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால், உளவுத் துறையில் அதிகாரியாக இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

1943-இல் பிரிட்டிஷ் ஆட்சியில் நிகழ்ந்த வங்காள பஞ்சத்தால் 30 லட்சம் பேர் பட்டினியில் செத்து மடிந்த நிலையில்தான் 1947-இல் இந்திய நாடு சுதந்திரம் பெற்றது. ஏழ்மையான பொருளாதார நிலையிலும், வெளிநாட்டிலிருந்து உணவு தானியத்தை இறக்குமதி செய்ய வேண்டிய அவலநிலையில் தான் இருந்தது. 1947-48 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பட்ஜெட் தொகை ரூபாய் 178 கோடி தான். 1964-65 இல் நேரு ஆட்சிக் காலத்தில் சமர்ப்பித்த கடைசி பட்ஜெட் தொகை 2095 கோடி ரூபாய் . ஆக, நேரு ஆட்சிக் காலத்தில் சமர்ப்பிக்கபட்ட மொத்த பட்ஜெட் தொகை 12,151 கோடி ரூபாய் மட்டுமே. இத்தகைய குறைந்த பட்ஜெட் தொகையை வைத்துக் கொண்டு தான் இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட காரணத்தால் நவ இந்தியாவின் சிற்பி என்று பண்டித நேருவை உலகமே பாராட்டியது, போற்றியது.

அன்றைய சூழலில் 70 சதவிகித விவசாய நிலங்கள் ஜமீன்தார்களிடம் இருந்த காரணத்தால் நிலச் சீர்திருத்தம் செய்து விவசாய உற்பத்திக்கு வழிவகுக்கப்பட்டது. விவசாயம் மட்டுமே இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்க முடியும் என்று பண்டித நேரு நம்பினார்.

இதுகுறித்து ஜவஹர்லால் நேரு 1948-இல் கூறும் போது, 'தொழிற்சாலைகள் அதிகமாக வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். எஃகு தொழிற்சாலைகளும், பிற தொழிற்சாலைகளும் வர வேண்டும். ஆனாலும், தொழிலைக் காட்டிலும் வேளாண்மை மிகமிக முக்கியம் என்று நான் கூறுவேன். எது வேண்டுமானாலும் காத்திருக்கலாம், ஆனால் விவசாயம் காத்திருக்க முடியாது' என்று தொலைநோக்குப் பார்வையுடன் கூறினார்.

அதனால் தான் முதல் ஐந்தாண்டு திட்டத்தில் 2,400 கோடி ரூபாய், அதாவது 17 சதவிகிதம் விவசாயத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. வேளாண் வளர்ச்சியை விரைவுபடுத்தக் கூடிய நீர்ப்பாசனம், மின்சாரம் ஆகிய துறைகளுக்கு 27 சதவிகிதம் நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் உலகத்திலே மிக உயரமான 750 அடி உயரம் கொண்ட பக்ராநங்கல் அணை போன்ற பல்வேறு அணைகளைக் கட்டி நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றி, உற்பத்தியைப் பெருக்கி விவசாயத்துறையில் புரட்சி செய்தவர் பண்டித நேரு.

பாதுகாப்புத் துறையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார். 1956-57-ஆம் ஆண்டில் பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 92 கோடியிலிருந்து 1963-64 இல் ரூபாய் 867 கோடியாக உயர்ந்தது. சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தால் தான் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்த முடியும் என்று நேரு நம்பினார். நேருவின் தலைமையில் 17 ஆண்டுகளில் இந்திய ராணுவ படைவீரர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்திலிருந்து 50 லட்சத்து 50 ஆயிரமாக விரிவடைந்தது.

கடற்படை, விமானப்படைகளுக்கு இக்கால கட்டத்தில்தான் வலு சேர்க்கப்பட்டது. இத்தகைய வலுவான கட்டமைப்புகளை பாதுகாப்புத் துறையில் ஏற்படுத்தியவர் பண்டித நேரு. ஆனால், தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கிற நரேந்திர மோடி ஆட்சியில் எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்குப் பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இந்திய எல்லைப் பகுதிகளின் 4000 சதுர கி.மீ. உள்ளது. கடந்த ஜூன் 2020 இல் நடந்த கல்வான் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரைத் துறக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இந்நிலையில், சீன அதிபரை இந்திய பிரதமர் 18 முறை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ஆனால், இந்தியப் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தவோ, வெளியேற்றவோ முடியவில்லை. இதன்மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. அதேநேரத்தில் சீனா வர்த்தகத்தில் இந்தியாவிற்கான ஏற்றுமதியில் 90 பில்லியன் டாலர் உயர்ந்து கடந்த ஆண்டை விட 31 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்திய - சீன வர்த்தகத்தில் 75 பில்லியன் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சீனாவில் உற்பத்தியாகும் பொருட்களை விற்கும் சந்தையாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. ஆக, சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத அளவிற்கு நமது எல்லையில் சீன ஆக்கிரமிப்பும், வர்த்தக படையெடுப்பும் நிகழ்ந்திருப்பதை விட மிகப்பெரிய அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது.

எனவே, ஆளுநர் ஆர்.என். ரவி பண்டித நேருவைப் பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இத்தகைய அவதூறுப் பேச்சுகளைத் தொடருவாரேயானால், அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, சென்னையில் நேற்று சாஸ்திரி பவனில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி சிலையைத் திறந்து வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "1962-ல் நாடு மிகப்பெரும் அவமானத்தை சந்தித்தது. நமது அணிசேரா கொள்கை, அமைதிக் கொள்கை ஆகியவற்றால் ஆக்கிரமிப்பு, ஊடுருவல் அதிகரித்து, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து நிலவியது. இதேபோல, கடும் வறட்சி ஏற்பட்டு, உணவு பஞ்சத்தால் நாடு பெரும் இன்னல்களை சந்தித்தது. மக்களுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

லால் பகதூர் சாஸ்திரி பிரதமரான பிறகு, ‘நாடும், நாட்டின் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்பதை வலியுறுத்தி ‘ஜெய் ஜவான்’ என்று முழங்கினார். ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்தார். 1965-ல் நடந்த போர் வெற்றிக்கு பிறகு, நம்நாட்டின் வலிமையை அனைவரும் உணர்ந்தனர் என்று பேசியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

க்ரைம்

34 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்