விபத்தில்லா புத்தாண்டு: வாழ்த்து அட்டைகளில் வரும் எச்சரிக்கை; கோவை போலீஸாரின் நூதன திட்டம்

By ர.கிருபாகரன்

2017 புது வருடம் பிறக்க இன்னும் 2 தினங்கள் மட்டுமே உள்ளன. புத்தாண்டை வரவேற்க பலரும் பல விதங்களில் தயாராகி வருகின்றனர். கொண்டாட்டம் என்ற பெயரில், மது அருந்திவிட்டு இரவில் விதிமீறி வாகனங்களை ஓட்டுவதால், ஆண்டின் தொடக்க நாளிலேயே விபத்துகளும், உயிர்ப் பலிகளும் ஏற்படுவது கோவையில் வழக்கமாக உள்ளது.

குறிப்பாக, நகரின் முக்கியச் சாலைகளில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் வாகனங்களில் சாகசம் செய்வது, அதிவேகமாக செல்வது என அத்துமீறல்களிலும் ஈடுபட்டு விபத்தில் சிக்குகிறார்கள். 2015-ம் ஆண்டு புத்தாண்டின்போது விதிகளை மீறிச் சென்று விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

எனவே 2017 புத்தாண்டை விபத்தில்லா புத்தாண்டாக வரவேற்க வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் பிளக்ஸ் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் போலீஸார் நூதனமாக விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

மாநகரப் போக்குவரது துணை ஆணையர் எஸ்.சரவணன் கூறும்போது, ‘புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்து ஏற்படுவதைத் தடுக்க, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், நூதனமான நடவடிக்கைகளை செயல்படுத்த உள்ளோம். அவிநாசி சாலை, திருச்சி சாலை, ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி என நகரில் 22 இடங்களில் தீவிர வாகனச் சோதனை நடத்தப்படும். அதில் ஹெல்மெட் அணியாதது, அதிகவேகம் ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படும். மது அருந்திவிட்டு வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய பிறகே வாகனங்களை மீட்க முடியும்.

இதுதவிர, முன்கூட்டியே டிச.28-ம் தேதி இரவு முதல் நகரில் 200 இடங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட உள்ளன. அதில் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறி, அதோடு புத்தாண்டு இரவு விதிமீறலில் ஈடுபட்டால் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெளிவாக அச்சிடப்படும். இந்த அறிவிப்புகளை எல்லோரும் பார்ப்பார்கள் எனக் கூறமுடியாது. எனவே பார்க்கிங், திரையரங்க பார்க்கிங் என வாகனங்கள் நிறுத்துமிடங்களில் வாகன ஓட்டிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை கொடுக்க உள்ளோம்.

அதில், வாழ்த்துச் செய்தியோடு, எச்சரிக்கைச் செய்தியும் இருக்கும்.

உள்ளூர் சேனல்களில்

கோவையில் உள்ள 10 உள்ளூர் சேனல்களில் டிச.30, 31 ஆகிய தேதிகளில் புத்தாண்டை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளம்பரங்கள் வெளியிடப் பட உள்ளன. வழிபாட்டுத் தலங்களிலும் இதுகுறித்து தெரிவிக்க வலியுறுத்தி உள்ளோம். காவல்துறையின் இந்த முயற்சியில் தனியார் பங்களிப்பும் உள்ளது.

நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்தைத் தடுக்க, 200 மீட்டருக்கு ஒரு தடுப்பான் (பேரிகார்டு) வைக்கப்படும். இரவில் அனைத்து சிக்னல்களும் இயங்கும். நகரில் உள்ள 220 சிசிடிவி கேமராக்களும் செயல்படும். எனவே போலீஸ் கண்காணிப்பு இல்லை என நினைத்து விதிமீறலில் ஈடுபட முடியாது. 2016ம் ஆண்டில் இதுவரை ஹெல்மெட் அணியாததற்காக 2.35 லட்சம் வழக்குகள், கோவை மாநகரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்