பிரச்சினைகளை தீர்க்க காந்திய கொள்கையை பின்பற்ற வேண்டும்: காந்தி கிராம பல்கலைக்கழக விழாவில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: பிரச்சினைகளைத் தீர்க்க காந்திய கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்குப் பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை வகித்தார். துணைவேந்தர் குர்மீத்சிங், பதிவாளர் சிவக்குமார் வரவேற்றனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் மோடி, தங்கப்பதக்கம் பெற்ற முதுகலை, இளங்கலை மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களையும், இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களையும் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

பட்டம் பெற்ற இளைஞர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் பாராட்டுகிறேன். இங்கு வந்தது எனக்கு உற்சாகமாக உள்ளது. இப்பல்கலைக்கழகம் மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்டது. இயற்கை அழகு, கிராமப்புற எளிமையான வாழ்வு ஒவ்வொன்றிலும் காந்தியின் கொள்கையைப் பார்க்க முடியும்.

அவரது கொள்கைகள் மிகவும் முக்கியக் கொள்கையாக இப்போது பார்க்கப்படுகிறது. பிரச்சினைகளைத் தீர்க்க காந்திய கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். காந்திய கொள்கைகளைப் பயிலும் மாணவர்களால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

ஒரு காலத்தில் காதிப் பொருட்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. இப்போது காதிப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் காதிப் பொருட்களின் விற்பனை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய காதித் துறை கடந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளது. காதிப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பூமிக்கு மிகவும் நல்லது.

தமிழகத்தில் சுதேசி இயக்கம் மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. இந்தியாவின் தற்சார்புக் கொள்கையும் அதுவே. கிராமப்புறங்கள் முன்னேற வேண்டும் என்பதே காந்தியின் கொள்கை. அதேநேரத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டும்.

கிராமமும், நகரமும் வெவ்வேறாக இருப்பது தவறு இல்லை. ஆனால் தரம் ஒன்றாக இருக்க வேண்டும். பல நாட்களாக நகர்ப்புற, கிராமப்புற வசதிகளில் பெரிய அளவில் வேறுபாடு இருந்தது. இப்போது கிராமங்கள் நகர்ப்புற வசதியை எட்டியுள்ளன. கிராமங்களில் குடிநீர், கழிப்பறை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. நகரங்களைவிட கிராமங்களில் இணையதள சேவை பயன்பாடு அதிகரித்துள்ளது.

இயற்கை மற்றும் எளிமையான வாழ்க்கையில் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பார்க்கலாம். ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் கலக்காத இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நம் நாட்டைச் சேர்ந்த பயிர்வகைகள் வளர்க்கப்பட வேண்டும். பல்வேறு பயிர்களை விளைவித்தால் நீரும், நிலமும் பாதுகாக்கப்படும். சூரிய மின்சக்தியைப் பயன்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் இந்த சக்தியின் பயன்பாடு அதிகரித்தால் இந்தியா எரிசக்தித் துறையில் தற்சார்பு நாடாக மாறிவிடும்.

ஒற்றுமையான பாரதம்: தமிழகம் தேசிய உணர்வுள்ள மாநிலம். இங்குதான் விவேகானந்தர் கதாநாயகர் போல் வரவேற்கப்பட்டார். விவின் ராவத்துக்கு தமிழ் இளைஞர்கள் வீர வணக்கம் செலுத்தியது உணர்வுப்பூர்வமாக இருந்தது. காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவை வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காசி மக்கள் தமிழ் மொழியைக் கொண்டாட விரும்புகின்றனர்.

பட்டம் பெற்ற இளைஞர்கள் ஒற்றுமையை வளர்க்கப் பாடுபட வேண்டும். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வேலு நாச்சியாரை பிரதிபலிப்பவர்களாக இங்குள்ள மாணவிகளைப் பார்க்கிறேன்.

கரோனாவால் உலகம் பெரிய சிக்கலைச் சந்தித்தபோது, கரோனாவுக்கு எதிராக இந்தியா துணிவுடன் போராடி திறமையை நிரூபித்தது.

பெரிய பொறுப்புகளை அடைவதற்கு ஆர்வம் மட்டும் இல்லாமல் அதற்கான ஆற்றலையும் பெற வேண்டும். சுதந்திர தின அமுதப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், இந்தியாவை இளைஞர்கள் தலைமையேற்று நடத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

5 அடுக்கு பாதுகாப்பு: பிரதமர் வருகையையொட்டி காலை 6 முதல் மாலை 5 வரை பாதுகாப்பு வளையத்துக்குள் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. விமான நிலையத்தை சுற்றியுள்ள வீடுகள், தங்கும் விடுதிகள், பராமரிப்பற்ற கட்டிடங்களில் காவல் துறையினர் சோதனை செய்தனர். மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

நேற்று பிற்பகலில் மழை இல்லாததால் திட்டமிட்டபடி பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் மோடி, ஹெலிகாப்டரில் திண்டுக்கல்லுக்குப் புறப்பட்டுச் சென்றார். விழா முடிந்தபோது, திண்டுக்கல் பகுதியில் மழை பெய்ததால் சாலை மார்க்கமாக காரில் மதுரை விமான நிலையம் திரும்பினார். பின்னர் தனி விமானம் மூலம் விசாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 secs ago

இந்தியா

57 mins ago

கல்வி

3 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

5 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

36 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

மேலும்