தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல் துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 6-ம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், அதற்கான நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி காவல் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், "ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க காவல் துறை தயாராக உள்ளது. ஆனால், எஞ்சியுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது. மேலும், பல இடங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளது.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சிகள் மனித சங்கிலிக்கு அனுமதி கோரியதால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. ஆனால், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கேட்பதால் அவர்களுக்கு வழங்க முடியாது. உள் அரங்கு கூட்டம் என்றால் அனுமதி வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆர்எஸ்எஸ் தரப்பினர் மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்" என்று வாதிடப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உளவுத் துறை அறிக்கையை பார்த்த பிறகு 47 இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக கூறி விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "காவல் துறை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன. கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த குற்றச் சம்பவங்களையும், வழக்குகளையும்தான் காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. புதிய வழக்குகள் எதையும் குறிப்பிடப்படவில்லை. எனவே, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை, நாகர்கோவில் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம்” என்று உத்தரவிட்டார்.

மேலும், இந்த 6 இடங்களைத் தவிர காவல் துறை ஏற்கெனவே அனுமதி வழங்கியிருந்த 3 இடங்களுடன் சேர்த்து 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தலாம். உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளில் இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டார்.

அத்துடன், தற்போது அனுமதி வழங்கப்படாத 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்எஸ்எஸ் காத்திருக்க வேண்டும் எனவும், இந்த இடங்களில் 2 மாதங்களுக்கு பிறகு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி புதிதாக மனு அளிக்கலாம் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்