ஆன்மிகத்தின் அழகு நகரம் சிதம்பரம்: பொலிவு பெறுமா? பொருளாதாரம் உயருமா?

By க.ரமேஷ்

தேவாரம், திருவாசகத்தை உலகுக்கு தந்த கோயில் நகரம் சிதம்பரம். செழித்து படர்ந்த உழவுத் தொழிலை தன்னகத்தே கொண்ட சோறுடைத்த சோழ தேசத்தின் ஒரு பகுதி சிதம்பரம். நீண்ட பாரம்பரியம் உடைய ஒரு பல்கலைக்கழகத்தை கொண்ட நகரம்.

இந்தச் சிறப்புகள் எல்லாம் இருந்தும் பல ஆண்டுகளாக மேம்பாடு அடையாமல் உள்ளது சிதம்பரம்.

உலக புகழ்பெற்ற சைவத் திருத்தலமான நடராஜர் கோயில் உள்ள சிதம்பரத்தைச் சுற்றி சுமார் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு விவசாயமே பிரதான தொழில்.

நடுநாயகமாய் நடராஜர் வீற்றிருக்க சிதம்பரத்தைச் சுற்றி தில்லைக் காளியம்மன் கோயில், மாணிக்கவாசகர் கோயில், குரு நமசிவாயர் கோயில், புவனகிரியில் ராகவேந்திரர் கோயில், பரங்கிப்பேட்டையில் பாபாஜி கோயில், அண்ணாமலை நகரில் அர்ச்சுணனுக்கு வில் கொடுத்த பாசுபதேஸ்வரர் கோயில், சிவபுரி சிவன் கோயில் உள்ளது.

உலகம் முழுவதும் இன்று பரவி கிடக்கும் யோகக் கலையை முதன்முதலில் உருவாக்கியவர் பதஞ்சலி முனிவர். யோகக் கலையின் குரு என கூறப்படும் இவர் சிதம்பரத்திலிருந்து தான் யோகக் கலையை தோற்றுவித்ததாக சொல்லப்படுவதுண்டு. இவருக்கு நடராஜர் கோயிலுக்கு அருகே உள்ள அனந்தீஸ்வரன் கோயிலில் தனி சந்நதி உள்ளது.

நடராஜர் கோயிலுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழாக் காலமான மார்கழி திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் திருவிழாவின்போது கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் சிதம்பரம் நகரம் நிரம்பி வழிவதுண்டு. அதைக் காண கண்கோடி வேண்டும்.

இப்படிபட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஒரு நகரம் செழித்து வளர்த்திருக்க வேண்டும்; பொருளாதார வளர்ச்சியில் திளைத்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை நேர்மாறாக இருக்கிறது. சிதம்பரம் நகரம் மேம்பாடு அடையாமல் பாழ்பட்டு கிடக்கிறது. பெரிய அளவில் பணப் புழக்கம் இல்லை.

நகரின் முக்கிய நான்கு வீதிகள் மட்டுமே அகன்ற சாலையாக உள்ளன. நகரின் மற்ற சாலைகள் படுமோசமாக உள்ளன. வாகனங்கள் நிறுத்த சரியான பார்க்கிங் வசதிகள் இல்லை. கோயிலுக்கு வரும் வாகனங்கள் நான்கு வீதிகளிலும் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்ல சரியான விடுதிகள் கிடையாது.

ரயில்வே ரோடு அருகே இருந்த தமிழ்நாடு சுற்றுலாக் கழகத்தின் குறைந்த வாடகை கொண்ட விடுதியும் 5 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் உள்ளது. அதன் கட்டிடங்களும் வலுவிழந்துள்ளன. இதனால் பயணிகள் அதிக வாடகை கொடுத்து தங்கும் அவலமே தொடர்கிறது.

எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் சிதம்பரம் பேருந்து நிலையம் உள்ளது. பயணிகளுக்கு குடிநீர் விநியோகம் கிடையாது. உட்கார இருக்கை வசதி கிடையாது. இரவு நேரங்களில் மின் விளக்குகள் சரியாக எரிவதே இல்லை. இலவச கழிவறையும் செயல்படவில்லை.

சோழர்கள் திட்டமிட்ட பூமி

30 ஏக்கர் பரப்பளவு கொண்ட நடராஜர் கோயிலின் உட்பகுதியில் விழும் மழை நீரை பூமிக்கு அடியில் நிலவரை கால்வாய் அமைத்து அருகில் உள்ள தில்லைக் காளியம்மன் கோயில் குளத்தில் சேர்க்கும் வகையில் அக்காலத்திலேயே கால்வாய் வடிவமைக்கப்பட்ட நகரம் இது.

கடற்கரை அருகே அமைந்துள்ள சிதம்பரம் நகரின் நிலத்தடி நீர் கெட்டுப் போகாமல் பாதுகாக்க மழை நீர் சேகரிப்பின் மூலமே சாத்தியமாகும் என்பதை உணர்ந்த சோழ மன்னர்கள் சிதம்பரம் கோயிலைச் சுற்றி 9-க்கும் மேற்பட்ட நீர் பிடிப்பு குளங்களை ஏற்படுத்திய நகரம் இது. அதையெல்லாம் சரியாக பராமரிக்காததால் தற்போது நிலத்தடி நீரும் உப்பாக மாறியுள்ளது.

சிதம்பரம் பேருந்து நிலையம்.

‘சிதம்பரம் கோயிலுக்கு மட்டும் 73 நந்தவனங்கள் நகரைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டன’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இதனால்தான் வரலாற்று அறிஞர்கள் ‘இந்தியாவின் முதல் பசுமை நகரம்’ என்று சிதம்பரத்தை குறிப்பிட்டனர். இப்படி ஒரு பெருமைவாய்ந்த நகரம் தற்போது இப்படி இருப்பது வேதனைக்குரிய விஷயம்.

ராகவேந்திரர் அவதரித்த இடம்

‘இமயமலை சித்தர்’ என்று அழைக்கப்படும் பாபாஜி அவதரித்த பரங்கிப்பேட்டையில் அவருக்கு கோயில் உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் உள்ள அவரது பக்தர்கள் அவர் அவதரித்த இடமான பரங்கிப்பேட்டைக்கு வந்து வணங்கி செல்கின்றனர். ஆனால் சரியான சாலை வசதி, வழிகாட்டுதல் வசதி இன்றி அல்லல்படுகின்றனர்.

இதுபோலவே ராகவேந்திரர் அவதரித்த இடம் புவனகிரி இங்கேதான் உள்ளது. இங்குள்ள கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல முக்கியஸ்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கிறது. சிதம்பரம், பிச்சாவரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் சாலை வசதிகள் இல்லை.

சிதம்பரம் நகரில் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் தங்கிச் செல்லும் வகையில் குறைந்த கட்டணத்துடன் கூடிய தரமான விடுதி அமைக்க வேண்டும், சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கென்று சரியான இடவசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த இடங்களையெல்லாம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வகையில் சுற்றுலாத் துறை மூலம் குறைந்த கட்டணத்தில் வாகன ஏற்பாடு செய்து தர வேண்டும். இதையெல்லாம் செய்தால் இக்கோயில் நகரின் வருவாய் பெருகும். இதன் மூலம் இங்குள்ள மக்களின் பொருளாதாரமும் உயரும்.

பல்கலையில் உயராய்வு மையம் வேண்டும்

சிதம்பரத்தில் உழவுத் தொழில் மூலம் பெரிய அளவில் பொருளாதார மாற்றத்தை கொண்டு வர முடியாது. அதற்கு காரணம் இது டெல்டா மாவட்டம். இங்கு ஆன்மிக சுற்றுலாவுக்கும், இன்பச் சுற்றுலாவுக்கும் நல்ல வாய்ப்புள்ளது. சிதம்பரத்தைச் சுற்றி பழங்கால கோயில்கள் உள்ளன. இதனால் இதனைச் சுற்றுலா மையமாக அறிவித்து சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். உயர் தர தங்கும் விடுதி, சுற்றுலாப் பயணிகளுக்காக தனி போக்கு வரத்து வாகனங்கள், கைடுகள் இவற்றை அரசு ஏற்படுத்தினால் நகரின் பொருளாதாரம் மேம்படும் அதைச் சார்ந்த தொழிலும் வளரும்.

நூற்றாண்டை நெருங்கக்கூடிய பழமைவாய்ந்த பல்கலைக் கழகமான அண்ணாமலை பல்கலைக்கழகம் இங்கு உள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் இசைக்காகவும் தமிழுக்காகவும் தோற்றுவிக்கப்பட்டது. வேளாண் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் இங்கு உள்ளன. இப்பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தினால் பல நாட்டு மாணவர்கள் இங்கு வர வாய்ப்பு இருக்கும்.

உயராய்வு மையமாக மாற்றினால் அனைத்து நாடுகளிலும் இருந்தும் மாணவர்கள் வருவார்கள். இதன் மூலம் நகரின் பொருளாதாரம் வளரும். இதுபோல ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பன்னோக்கு உயர் மருத்துவமனையாக மாற்றினால் கடலூர் மாவட்டத்துக்கு அருகே உள்ள 4 மாவட்ட மக்களும் வந்து செல்வார்கள். இதன் மூலம் நகரம் மேம்பாடு அடையும்.

சொக்க வைக்கும் சுந்தரவனக் காடுகள்!

பிச்சாவரம் அலையாத்திக் காடுகள்.

சிதம்பரம் அருகே எழில் கொஞ்சும் சுந்தரவனக் காடுகளைக் கொண்ட பிச்சாவரம் உள்ளது. இந்தியாவிலேயே கடற்கரையொட்டிய இரண்டாவது மிகப்பெரிய அலையாத்திக் காடுகள் பிச்சாவரத்தில்தான் உள்ளது.

இங்குள்ள கழிமுக ஆற்றில் நீர்முள்ளி, கருங்கண்டான், வெண்திரு போன்ற 18 வகையான மூலிகை மரங்களுக்கு நடுவில் படகுச் சவாரி செய்வது தனி சுகம்.

பிச்சாவரம் அருகே உள்ள சிறு திட்டில் எம்.ஜி.ஆர் நடித்த ‘இதயக்கனி’ படப்பிடிப்பு நடத்தப்பட்ட நாளில் இருந்து அந்த இடத்துக்கு ‘எம்.ஜி.ஆர் திட்டு’ என்று பெயர். நான்கு புறங்களும் நீரால் சூழப்பட்டு இருக்கும் அந்த இடம் இயற்கையின் வரப்பிரசாதம். முன்பு அரசால் அந்த இடத்தில் ‘விடியல் விழா’ நடத்தப்பட்டு சூரிய உதய நிகழ்ச்சியைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மேம்படுத்த வேண்டும்.

சென்னை - சிதம்பரம் இடையே கூடுதல் ரயில்கள் வேண்டும்

சிதம்பரத்தில் நவீன வசதிகள் கொண்ட இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்க வேண்டும். தரமான கழிவறைகள் அமைத்து, ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்தி சுற்றுலாப் பயணிகள் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். ஸ்ரீரங்கத்தில் உள்ளதுபோல ‘யாத்திரிகர் நிவாஸ்’ கட்ட வேண்டும். முக்கிய ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்தால் சிதம்பரம் மேம்பாடு அடைந்த சுற்றுலாத் தலமாக மாறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

மேலும்