கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு சம்பளம் தர முடியாமல் தவிக்கும் நிறுவனங்கள்

By செய்திப்பிரிவு

கோவை மாவட்டத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் சிறு தொழில் நிறுவனங்கள் தவிக்கின்றன. எனவே, இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று தொழில் துறையினர் வலியுறுத்தி யுள்ளனர்.

இந்தியாவின் சிறந்த தொழில் நகரங்களில் ஒன்றான கோவையில் வாகன உதிரி பாகங்கள், கிரைண்டர்கள், நகைகள், காற்றாலை, கோழிப் பண்ணைகளுக்கான இயந்திரங்கள், ஜவுளித் தொழில் சார்ந்த இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், உணவு மற்றும் நுகர்பொருள் தயாரிப்புக் கூடங்கள், பஞ்சாலைகள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்களும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்களும் உள்ளன.

அதுமட்டுமின்றி, கட்டுமான நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சுற்றுலா சார்ந்த நிறுவனங்கள் உள்ளிட்டவை ஏராளமான உள்ளன. இவற்றில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, பிஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

பல சிறு நிறுவனங்களில் தினக் கூலி, வாரக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. வாரத்தின் இறுதி நாட்களில் சம்பளம் வழங்கப்படும். ஆனால், நேற்று பெரும்பாலான நிறுவனங்களின் கையிருப்பில் ரூ.100, ரூ.50 நோட்டுகள் இல்லாததால் சம்பளம் வழங்கவில்லை.

இது குறித்து தொழில்துறையினர் கூறும்போது, “ஒரு தொழிலாளிக்கு சராசரியாக ரூ.3 ஆயிரம் வாரக்கூலி வழங்க வேண்டியுள்ளது. இவ்வாறு 20 தொழிலாளிகளுக்கு கூலி வழங்க வேண்டுமென்றாலும், ரூ.60 ஆயிரம் தேவை. ஆனால், வங்கிகளில் வழங்கப்படும் தொகையைக் கொண்டு, தொழிலாளிகளுக்கு எப்படி சம்பளம் வழங்க முடியும்? சம்பளம் இல்லாமல் அவர்கள் எப்படி சாப்பிடுவார்கள். அன்றாட செலவுகளைச் செய்வார்கள். இதனால், நாங்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளோம். பல நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாததால், வேலைக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டு, வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்” என்றனர்.

கோவை மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி கிடைக்கிறது. தொழில் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடருமானால், அரசுக்கு கிடைக்கும் வருவாயும் பாதிக்கப்படும். எனவே, வங்கிகளில் கூடுதல் தொகை விநியோகம் செய்து, தொழில் துறையினரின் சிரமத்தைப் போக்க மத்திய அரசு முன்வர வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

12 hours ago

மேலும்