500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ்: வரவேற்பும், எதிர்ப்பும்

By செய்திப்பிரிவு

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் அதனை வரவேற்றும், எதிர்த்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தலைவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகள் பின்வருமாறு:

திமுக தலைவர் கருணாநிதி:

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது வரவேற்கத் தக்க முடிவு என்றாலும், இதனால் பணக்காரர்களைவிட ஏழை எளிய மக்கள்தான் பெரிதும் பாதிக்கப் படுவர். கருப்பு பணம் என்பது ஏழை எளிய மக்களிடம் இருக்காது. மாறாக வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் வைத்துவிட்டு, கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று பல்வேறு வடிவங்களில் பாதுகாப்பாக வைத்திருப்பவர்கள்தான் அதிகம். எனவே, இதனால் பெரிய பெரிய பணக்காரர்களை விட ஏழை, எளிய மக்கள்தான் பாதிக்கப்படுவர். ரூ.80 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதனை திசை திருப்பவே இத்தகைய அறிவிப்பை பிரதமர் வெளியிட்டுள்ளதாக காங்கிரஸ் கூறுவதையும் அலட்சியப்படுத்த முடியாது. ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்தில் இதேபோல், ரூ.1000, ரூ.5000, ரூ.10,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் கருப்பு பணம் எந்த அளவுக்கு ஒழிக்கப்பட்டது என்பதை எண்ணி, ஏழை, எளிய மக்களும், சிறு வணிகர்களும் பாதிப்பு ஏற்படாத வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் சர்வதேச தீர்வு வங்கி 2015-ல் வெளியிட்ட ஆய்வு முடிவில், உலகிலேயே பணம் பதுக்கும் நடவடிக்கையில் இந்தியா வின் பங்கு 2.5 சதவீதம் என்றும் அதன் மதிப்பு ரூ.8.9 லட்சம் கோடி முதல் ரூ.12 லட்சம் கோடி வரை இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்துள்ளது துணிச்ச லான, வரவேற்கத்தக்க முடிவாகும். இதனால், பண முதலைகள் பலர் கலக்கத்தில் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:

500, 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்துள்ளது சாதாரண மக்களிடையே பதற்றத்தை ஏற் படுத்தியுள்ளது. கருப்புப் பணத்தை மீட்க அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறுவது மக்களை ஏமாற்றும் நாடகமாகும். கருப்பு பணம் கட்டிடமாக, நிலமாக, தங்க, வைர, வெள்ளி கட்டிகளாக, டால ராக பதுக்கப்பட்டிருப்பது அரசுக்கு நன்கு தெரியும். அவர்களை கண்டறிவதற்கு மாறாக சாதாரண ஏழை, எளிய மக்களை, நடுத்தர மக்களை பாதிக்கும் வண்ணமாக அரசின் அறிவிப்பு உள்ளது. பரபரப்பான அரசியலை மோடி அரசு கைவிட வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

கருப்பு பணம், கள்ள நோட்டுகளை யும் ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதே நேரத்தில், ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரும், சிறு வணி கர்களும் பாதிக்கப்படக் கூடாது. பொருளாதார நெருக்கடியும், தொழில்துறை சுணக்கமும் ஏற்படு வதை தடுக்க வேண்டும். வெளிநாட் டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க வேண்டும்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:

கள்ள நோட்டு களையும், கருப்பு பணத்தையும் ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் வாக்கு களை விலைக்கு வாங்குவதற்காக திராவிடக் கட்சிகள் வைத்திருந்த பணம் பயனின்றி போயுள்ளது. மேலும், மத்திய அரசின் நடவடிக்கை யால் ஏழை, எளிய மக்கள் பாதிக் கப்படுவர். அடுத்தடுத்த நாட்களில், திருமணம், காதணி விழாவுக்காக பணத்தை வைத்திருப்பவர்கள் அதை மாற்ற முடியாத நிலை உள் ளது. கருப்பு பணம் பெரும்பாலும் வெளிநாட்டு வங்கிகளில் உள்ளது. எனவே, அதனை மீட்க வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என்று பிரதமர் அறிவித்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அதனை காகித மூட்டையாக வைத்திருப்பதில்லை. எனவே, கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்பது அப்பட்டமான ஏமாற்று வேலை. பாஜக அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார அவசரநிலைதான் இது. இதனை ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும்.

தி.க. தலைவர் கி.வீரமணி:

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், சாதாரண தொழிலாளர்கள், பொது மக்கள், வியாபாரிகள், நடுத்தர வர்க் கத்தினருக்கு இதனால் துன்பம் ஏற்படவே செய்யும். எனவே, அவர் களின் பிரச்சினைகளை களையும் வகையில் சரியான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி சங்கடங்களை போக்க வேண்டும்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என்று பிரதமர் அறிவித்தது உழைப்பாளிகள் மீதான துல்லிய தாக்குதல் ஆகும். இந்த அறிவிப்பு கருப்பு பணத்தை ஒழிக்க முழுவதும் உதவாது. மத்தியில் பாஜக அரசின் கடந்த இரண்டரை ஆண்டு கால தோல்விகளை மூடி மறைக்கவே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை பெரு முதலாளிகளும், பணக்காரர்களும் வரவேற்றாலும், ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழிசை சவுந்தரராஜன்:

ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என எடுக்கப்பட்ட முடிவு நேர்மையான ஒரு பிரதமரால், துணிச்சலாக எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த முடிவு பதுக்கலுக்கும், கள்ள நோட்டுக்கும், லஞ்சத்திற்கும் முடிவு கட்டும். இந்த முயற்சி அடித்தட்டு மக்களை பாதிக்கும் ஒரு நடவடிக்கை என்பதைப் போல முன்னிறுத்தப்படுகிறது. கையில் இருக்கும் பணம், அதே மதிப்பில் நமக்குத் திரும்பக் கிடைக்கும். இன்று சிறிய வலியை ஏற்படுத்தினாலும், நாளைய ஆரோக்கியத்திற்கானது என்றே மக்கள் இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை சமக தலைவர் சரத்குமார், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 min ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்