திருப்பூர் தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன உணவால் 3 குழந்தை உயிரிழப்பு - 11 சிறுவர்கள் உட்பட 12 பேருக்கு சிகிச்சை

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூரில் செயல்படும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும், 11 சிறுவர்கள் உட்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர் அவிநாசி சாலை திருமுருகன்பூண்டியில் ஸ்ரீவிவேகானந்த சேவாலயம் ஆதரவு ஏற்போர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்டோர் தங்கிப் பயின்று வருகின்றனர். செந்தில்நாதன் என்பவர் காப்பகத்தை நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை காரணமாக குழந்தைகள் சிலர் உறவினர்களைப் பார்க்கச் சென்றுவிட்டனர். 15 பேர் மட்டும் காப்பகத்தில் தங்கியிருந்தனர்.

கடந்த 4-ம் தேதி இரவு மாணவர்கள் புளி சாதம், லட்டு, சுண்டல் சாப்பிட்டுள்ளனர். நேற்று முன்தினம் காலை இட்லி, பொங்கலும், மதியம் ரசம் சாதமும் சாப்பிட்டுள்ளனர். மதியத்துக்குப் பிறகு மாதேஸ்(14), ஸ்ரீகாந்த்(13) ஆகியோருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, பலரும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர்.

மாணவர்கள் பாபு(10), அத்திஷ்(11) ஆகியோருக்கு கடும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, காப்பகத்துக்குத் திரும்பினர். இந்நிலையில், மீண்டும் பலருக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பாபு, அத்திஷ் உயிரிழந்தனர். மாதேஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் தலைமையிலான போலீஸார், காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் டி.கவுதம்(17), ஏ.மணிகண்டன் (15), எம்.பிரகாஷ்(11), கே.தரணீஷ்(11), வி.ரித்திஷ்(7), ஏ.வி.கவின்குமார் (13), ஜி.காந்த் (12), ஹர்சாத் (8), கே.சதீஷ்(8), ஆர்.குணா(9), எஸ்.சபரீஷ்(9) மற்றும் காப்பக காவலாளி ஜெயராமன் (63) ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் சு.வினீத் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது, "இது அங்கீகாரம் பெற்ற தனியார் காப்பகம்தான். இங்கு தங்கியிருந்தவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். காவலாளி உட்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். உணவு நஞ்சாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பரிசோதனைகளுக்குப் பின்னர், நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும். மேலும், மாவட்ட குழந்தைகள் நலக் குழும அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.

அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் செந்தில்குமார் கூறும்போது, ‘‘பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக, நீர்ச்சத்து குறைவாக உள்ளது. சில குழந்தைகளுக்கு காய்ச்சலும் உள்ளது. உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் கூறும்போது, ‘‘காப்பத்தில் கடந்த 5-ம் தேதி இரவு உணவுக்குப் பின்னர், உடல்நலம் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவர்கள் பரிந்துரையின்றி அனைவருக்கும் மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ரசம் சாதம், தண்ணீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. திருமுருகன்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவிவேகானந்த சேவாலயம் அறக்கட்டளை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4-ம் தேதி இரவு ஆயுத பூஜையை முன்னிட்டு, வெளியில் இருந்து வந்த சுண்டல் மற்றும் இனிப்புகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து துணை ஆணையர் அபினவ்குமார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்