வருமான வரி, வருங்கால வைப்பு நிதி தரவுகளை வழங்க வேண்டும் - நிர்மலா சீதாராமனிடம் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கு வருமானவரித் துறை மற்றும் வருங்கால வைப்பு நிதி தரவுகளை வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதியைக் கோருவதற்காக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் புதுடெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் நிதிதுறை சார்ந்த பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்து, தமிழக அரசு கோரிய நிதியை விடுவிக்க கோரும் கோப்புகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.

அந்த விவரங்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் பழனிவேல் தியாகராஜன் நேற்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரயில் 2-வது திட்டத்துக்காக ஜைக்கா போன்றவற்றிடம் கடன் பெறுவதற்காக அடிப்படை கடன் பத்திரங்கள் பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் வழங்க வேண்டிய கோப்புகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, மாநில திட்டமாகவே மாநிலத்தின் சொந்தநிதியை முதலீடாக கடந்த ஆண்டே செலுத்தி திட்டத்தை தொடங்கினோம். ஒப்புதல் வழங்குவதற்காக சில விளக்கம் கேட்டிருந்தனர். அதை கொடுத்திருக்கிறோம். இம்மாதத்துக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

ரூ.3,500 கோடி விடுவிப்பு

மாநில அரசுகளுக்கு, 50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லா கடனாக ரூ.1 லட்சம் கோடி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அத்திட்டத்தில் நிதி கோரி, தமிழக அரசின் பல துறைகள் விண்ணப்பித்திருந்த சூழலில் நேற்று ரூ.3,500 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில் ஓஎஃப்சி கேபிள் திட்டத்துக்கு ரூ.184 கோடி, ஊரக நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 263 கோடி வழங்கியுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வருமானவரித் துறை மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவன தரவுகளை வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தோம். இதுவரை கொடுக்கவில்லை. ஆனால் கர்நாடக மாநில அரசுக்கு வருமானவரி தரவுகளை வழங்கியுள்ளனர். அதேபோன்று தமிழகத்துக்கும் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

‘நைப்பர்’ நிறுவனம் மதுரைக்கு வர இருப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினேன். அத்திட்ட காலம் முடிந்துவிட்டதாக கூறினார். பின்னர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வர உள்ள நிலையில், ‘நைமர்’ நிறுவனத்தை மதுரையில் தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்திருக்கிறேன்.

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாய அறிக்கை போன்றவற்றுக்காக காத்திருக்காமல், 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தகுதியான பயனாளியை தேர்ந்தெடுக்க முடியும்

ஐடி மற்றும் இபிஎஃப்ஓ தரவுகளை மத்திய நிதியமைச்சரிடம் தமிழக நிதியமைச்சர் கோரி இருப்பது தொடர்பாக மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சனிடம் கேட்டபோது,

‘‘தமிழகத்தில் ஒரு திட்டத்துக்கு தகுதியான பயனாளியைத் தேர்வு செய்வதற்கான தரவுகள் இல்லை. இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் சிறந்த கணினிகள், மென்பொருட்கள் வந்துவிட் டன. அதைக் கொண்டு ஒரு நபரின் கடந்த 10 ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்கள் கிடைத்துவிடும்.

மேலும் வருங்கால வைப்புநிதி தரவுகள் மூலம் ஒரு நபரின் மாத ஊதியத்தை அறிய முடியும். அதன் மூலம் அவர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் திட்டத்துக்கு தகுதியானவரா என்பதை அறிய முடியும். மேலும், தரவுகளின் அடிப்படையில் அதிக வருமானம் உடையவர் குடும்பத்துக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைத் தவிர்க்கலாம். அந்த தரவுகள் மூலம் தகுதியான பயனாளியைத் தேர்ந்தெடுக்க முடியும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்