மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்பு - மதுரை அதிமுக பொதுக் கூட்டத்தில் இபிஎஸ்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘‘தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்’’ என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர், புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதுவரை இதுபோல் மூன்று மாவட்ட செயலாளர்கள் சேர்ந்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுகவின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே மூன்று மாவட்டங்கள் சார்பிலும் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு வந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் அதிமுகவின் அனைத்து அணி சார்பில் பழங்காநத்தம் ரவுண்டானாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு மாநகர அதிமுக செயலாளர் செல்லூர் கே.ராஜூ தலைமை வகித்தார்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல செயலாளர் ராஜ்சத்யன் தலைமையில் அதன் நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் பேசினர்.

அதன்பின் பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால செயலாளர் கே.பழனிசாமி பேசியதாவது:

இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்று முதல் முறையாக தென் மாவட்டங்களுக்கு வந்துள்ளேன். நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்துள்ளேன். செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை மாவட்ட அதிமுகவின் மும்மூர்த்திகள். மூவருமே கட்சிப் பணியாற்றுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. அதற்கு அவர்கள் ஏற்பாடு செய்த இந்த கூட்டமே சாட்சி.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 10 மாவட்டங்களில் 5 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளோம். இதே வெற்றியை தமிழகம் முழுவதும் 50 சதவீதம் இடங்களை கைப்பற்றியிருந்தால் அதிமுக வெற்றிப்பெறும். சற்று கவனகுறைவாக இருந்தாலே திமுக ஆட்சியை கைப்பற்றியது. 2024ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தின் சட்டம், ஒழுங்குப்பிரச்சனையும், ஆட்சியும் அப்படிதான் இருக்கிறது.

தமிழகத்தில் ஸ்டாலினின் பொம்மை ஆட்சி நடக்கிறது. காலையில் அவருக்கு கீ கொடுத்துவிட்டால் பொம்மை போல் அவர் இரவுவரை அவர் தமிழகத்தை சுற்றி வருகிறார். பெரும்பான்மை மக்கள், தவறி திமுகவுக்கு வாக்களித்துவிட்டார்கள். அதற்கு தமிழக மக்கள், தற்போது வருத்தப்படுகிறார்கள். ஏன் திமுக நிர்வாகிகள், தொண்டர்களும் அதுபோலவே வருத்தப்படுகிறார்கள். அவர்கள் கூட தற்போது திமுக ஆட்சி எப்போது போகும், அதிமுக ஆட்சி எப்போது வரும் என்று நினைக்கிறார்கள். மதுரையில் ஒரு மந்திரி இருக்கிறார். வெளிநாட்டில் இருந்து படித்து வந்தவர். அவர்தான் பெரிய அறிவு ஜீவிபோல் பேசுகிறார்.

அவரது முதலமைச்சராலும், அவராலும் மதுரைக்கு எந்த திட்டமும் வரவில்லை. அமைச்சர் மூர்த்தி தனது மகனுக்கு பிரம்மாண்ட திருமணம் நடத்தினார். இந்த பணம் எங்கிருந்து வந்தது. அதிமுக ஆட்சியில் மதுரையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைதான் தற்போது ஸ்டாலின் அடிக்கடி மதுரை வந்து திறந்து வைக்கிறார். ஸ்டாலின் ஒன்று செய்து இருக்கிறார். அவரது தந்தைக்காக எழுதாத பேனாவை கடலில் வைத்து சிலை வடிக்கிறார். மதுரையில் அவரது தந்தை பெயரில் நூலகத்தை அமைக்க முயற்சி செய்து வருகிறார். இதுதான் திமுக ஆட்சியில் அவர் அவரது குடும்பத்திற்காக செய்த சாதனை.

அவர் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், காளவாசல் மேம்பாலம், புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம், தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் திட்டம், வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு மேம்பாலங்கள், வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ரூ.320 கோடியில் நான்கு வழிச்சாலை போன்ற ஏராளமான திட்டங்கள் மதுரைக்காக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்டாலின் நாங்கள் மதுரையில் நிறைவேற்றிய திட்டங்களை ஸ்டிக்கர் ஓட்டி திறந்து வைத்துள்ளார்.

திமுக ஆட்சியில் எங்குப்பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி நடகிறது. ஒரு முறை நான் திமுக ஆட்சியில் 36 மணி நேரத்தில் 15 கொலை நடந்ததாக அறிக்கை விட்டேன். ஆனால், காவல்துறை 12 கொலை நடந்ததாக அவர்களே விளக்கம் சொல்கிறார்கள். அந்தளவுக்கு சட்டம், ஒழுங்கு மோசமடைந்துள்ளது. இளைய சமுதாயத்தினர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகுவது அதிகரித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் திட்டம், முதியோர் உதவித்தொகை, அம்மா மினி கிளினிக் திட்டம், மடிக்கணிணி திட்டம் போன்ற பல திட்டங்களை நிறுத்தி வருகிறார்கள். தற்போது அம்மா உணவகம் திட்டத்தையும் நிறுத்தப் பார்க்கிறார்கள். இது வரும் மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்கும். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தேர்தல் அறிக்கையில் அளித்த 487 உறுதிமொழியில் சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என்று ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். ஆனால், தற்போது சொத்துவரியை 100 சதவீதம் உயர்த்தியுள்ளார். மின்கட்டணத்தையும் 53 சதவீதம் உயர்த்தியுள்ளனர். ஒவ்வொரு வருஷமும் 6 சதவீதம் இனி உயரும்.

இதன்மூலம் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வாதாரத்திற்கே சிரமப்படும் நிலையில் அவர்கள் குரல்வளையை நெரிக்கப்பார்க்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து வாக்களித்த மக்களுக்கு மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகிய இரண்டு போனஸ் கொடுத்துள்ளது. பஸ்சில் ஓசியில் செல்வதாக அமைச்சர் பொன்முடி மக்களை கொச்சைப்படுத்துகிறார். மக்கள் வரிப்பணத்தில்தான் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இது கூட அந்த அமைச்சருக்கு தெரியவில்லை. இதுபோல் அமைச்சர் துரைமுருகனும் மகக்களை இழிவாக பேசி வருகிறார்.

ஸ்டாலின் மகன் உதயநிதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி என்று கூறி வாக்கு சேகரித்தார். ஆனால், அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றப்படவில்லை. மாணவர் கல்வி கடனும் ரத்து செய்யப்படவில்லை. மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு என்றார்கள். அதுவும்ந டக்கவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியம் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை திட்டம் வரவில்லை. எல்லாமே நடிப்பு. கவர்ச்சிக்கரமான பேச்சு. மக்கள் ஏமாந்துவிட்டனர். கொடுத்த வாக்குறுதிகளை திமுக எப்போதுமே நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

மேலும்