முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை - இபிஎஸ் கண்டனம் 

By செய்திப்பிரிவு

சென்னை: எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம் என்றும் திமுக அமைச்சர்களைப் போல் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கப் பார்க்கமாட்டோம் என்றும் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 26 இடங்கள், விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய 13 இடங்கள் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், இதனை கண்டித்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

இன்றைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள், திராவக மாடல் ஆட்சியாளர்களாக மாறி, தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். வரிகளை விதிப்பது, அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மூடுவது, ஊழல் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் எதிர்க்கட்சியினரின் குரல்வளைகளை நெரிப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்காதது முதல் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ரத்து செய்யாதது வரை எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றாத திமுக அரசு, முதலில் வீட்டு வரியினை கடுமையாக உயர்த்தியது. இப்போது மின் கட்டணத்தையும் வானளவு உயர்த்தியுள்ளது. பெண்களுக்கான தாலிக்குத் தங்கம், மகளிர் இருசக்கர வாகனம் உள்ளிட்ட எண்ணற்ற நலத் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திய இந்த மக்கள் விரோத அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளது.

இவற்றைக் கண்டித்து வரும் 16ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் தீவிர களப்பணி ஆற்றி வரும் செயல்வீரர்கள் இந்த அறப் போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதைத் தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப, இயக்க முன்னோடிகளான, கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி மற்றும் கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் மூன்றாவது முறையாக ரெய்டு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த இந்த அரசின் முதல்வர் என்ற முறையில் மு.க. ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவல் துறையாக ஏவி விட்டுள்ளார்.

ஏற்கெனவே, இருவரது வீடுகளிலும் இரண்டுமுறை சோதனை நடத்தி வெறுங்கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், மூன்றாவது முறையாக சோதனை செய்வது வேடிக்கையாக உள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது திமுக அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை குட்டு வாங்கி வருகிறது. வழக்கு தொடுத்த தனியார் அமைப்போ, வழக்கில் ஆஜராகி தங்களிடம் உள்ளதாகக் கூறும் (இல்லாத) ஆதாரங்களை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், வாய்தா மேல் வாய்தா வாங்கி வருகிறது. இதில் இருந்தே அவர்கள் பொய்ப் புகார் கொடுத்திருப்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு புரிந்துள்ளது.

திராவிட அரசு, நேர்மையான அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், திராணி இருந்தால் உச்சநீதிமன்றத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு குட்டுபட்டுள்ள திமுக அமைச்சரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? முறைகேடு புகார்கள் பதியப்பட்டுள்ள முன்னாள், இந்நாள் திமுக அமைச்சர்கள் 13 பேர் மீதுள்ள முறைகேடு புகார்கள் குறித்த வழக்கினை விரைந்து நடத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவாரா? தற்போது தமிழகமெங்கும் நில அபகரிப்பு செய்யும், தனக்கு வேண்டிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா?

தனது அமைச்சர்களைக் காப்பாற்ற நிலுவையில் உள்ள பல வழக்குகளை நடத்தாமல், அவர்கள் வாய்தா மேல் வாய்தா வாங்குவதைத் தடுக்காமல், யோக்கியம் பேசும் இந்த முதல்வர், எங்கள் ஆட்சியில் போடப்பட்ட, கையெழுத்திட்ட, நடைபெற்றுவந்த திட்டங்களுக்கு திறப்பு விழா காண்பதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் தொடுத்து, தனது ஏவல் துறை மூலம் பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களுக்கு இனியாவது நல்லது செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

ஒருசில சுயநல சக்திகளோடு இணைந்து, அதிமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த திமுக அரசு உதவி செய்தது. ஆனால், அச்சதிகளை சட்டப்படி நீதிமன்றங்கள் மூலம் சந்தித்து, சதிகளை தவிடுபொடியாக்கி, இன்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அதிமுக வெற்றிநடை போட்டு வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக அரசு, மீண்டும் குறுக்கு வழியில் ஏவல் துறையின் உதவியோடு, எஸ்.பி. வேலுமணியின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவும், கரோனா காலத்தில் திறம்பட செயல்புரிந்து பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்ற டாக்டர் சி. விஜயபாஸ்கரை முடக்கும் விதமாகவும், இன்று (13.9.2022) மூன்றாவது முறையாக தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனையை மேற்கொண்டிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம். எங்கள் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. திமுக அமைச்சர்களைப் போல் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கப் பார்க்கமாட்டோம். காவல் துறையினர் நடுநிலைமையோடு, ஆளுங்கட்சியினரின் அடாவடித்தனத்திற்கு அடிபணியாமல் சட்டத்தின்படி, நீதி நேர்மையோடு பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,"மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து, ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேரையும், கட்சித் தொண்டர்களையும், சர்வாதிகார போக்குடன் கைது செய்துள்ளதை வன்மையாக கண்க்கிறேன். அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்